அசாத்சாலி விவகாரத்தில் இரு வாரங்களில் முடிவு..!

(எம்.எப்.எம்.பஸீர்) கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் அசாத்சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகளில் அடுத்த இரு வாரங்களில் ஒரு முடிவுக்கு வரக் கூடியதாக இருக்கும் என உயர் நீதிமன்றுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,  குறித்த மனுவை அவசர அவசியம் கருதிய மனுவாக கருதி எதிர்வரும் 28 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

 இது குறித்த மனு நேற்று உயர்நீதிமன்ற நீதியர்சர் எல்.டி.பி. தெஹிதெனிய, காமினி அமரசேகர மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

நேற்றைய தினம் மனு மீதான பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்ட போது,  சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், அசாத்சாலி  ஊடக சந்திப்பொன்றில் கூரிய கருத்துக்கள் குறித்த விசாரணை நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

‘ அந்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. அது குறித்த விசாரணை அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணை கோவையை ஆராய்ந்த பின்னர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதா இல்லையா, அடுத்த கட்டம் என்ன என்பது தொடர்பில்  தீர்மானிக்க முடியும். அடுத்து வரும் ஒரு வாரத்துக்குள் அது சாத்தியமாகும்.’ என  பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.

இதன்போது நீதியர்சர் எல்.டி.பி. தெஹிதெனிய, மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்திலான விசாரணைகள் தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸிடம் கேள்வி எழுப்பினார்.

 அதற்கு பதிலளித்த அவர் அவ்விசாரணைகள், இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் பெரும்பாலும் ஓரிரு வாரங்களில் அதனை நிறைவுக்கு கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

 இதன்போது அசாத் சாலி சார்பில், சிரேஷ்ட் சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கமைய,  ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் சட்டத்தரணிகளான தர்மஜா தர்மராஜா, சந்ரகேஷ் பிருந்தா உள்ளிட்டவர்கள் ஆஜராகியிருந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மன்றில் வாதங்களை முன்வைத்து, இவ்விரு குற்றச் சாட்டுக்கள் தொடர்பிலும் மனுதாரரான அசாத் சாலிக்கு எந்த தொடர்புகளும் இல்லை என குறிப்பிட்டார். அத்துடன் ஊடகங்களுக்கு அளித்த சர்ச்சைக்குரியது என கூறப்படும் கருத்தில், எந்த குரோத மனப்பான்மையையும் தூண்டும் விடயங்களும், மக்களை தவறாக வழி நடாத்தும் விடயங்களும் இல்லை எனவும்,  குறித்த கருத்தினை வெளிப்படுத்தும் போது அவரது நோக்கம்  பிரச்சினைகளை ஏற்படுத்துவது அல்ல என்பதையும் மன்றுக்கு நிரூபிக்க தான்  தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மன்றில் குறிப்பிட்டார்.

அத்துடன் மாவனெல்லை சம்பவத்துடனும் அசாத்சாலிக்கு எந்த தொடர்புகளும் இல்லை எனவும் அவசியம் எனில் இவை தொடர்பில் எழுத்து மூலம் சமர்ப்பணங்களை முன்வைக்கவும் தயார் என ஜனாதிபதி சட்டத்தரனி பாயிச் முஸ்தபா குறிப்பிட்டார். .

இதனையடுத்து, குறித்த மனு தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியர்சர்கள் குழாம்,  எதிர்வரும் 28 ஆம் திகதிவரை வழக்கை ஒத்தி வைத்தது. அன்றைய தினம் அவ்வழக்கை பரிசீலனைக்கு எடுக்க, அவசர அவசியம் கருதிய மனுவாக இம்மனுவை நீதிமன்றம் பெயரிட்டது.

தீவிரவாத பயங்கரவாத சந்தேக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்தமை, தீவிரவாத பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியளித்தமை மற்றும் உடந்தையாகவிருந்தமை, வன்முறை அல்லது மத, இன அல்லது சமூக ரீதியான விரோதத்தை தூண்டும் வகையில் அல்லது வேறுபட்ட சமூகங்கள் அல்லது இனங்கள் மத குழுக்களுக்கிடையில் பகைமையை தூண்டும் விதத்தில் வார்த்தைகளை பயன்படுத்தியமைக்காகவும் மற்றும் 21.04.2019 அன்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இந்த சந்தேக நபருக்கு உள்ள தொடர்பினை உறுதிப்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் அவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிப்பதாக அசாத் சாலி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை தடுத்து வைக்க  ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவு அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் திகதி முதல் 90 நாட்களுக்கு அவரை தடுத்து வைக்க அனுமதிப்பதாக ஜனாதிபதி குறித்த அனுமதியில் குறிப்பிட்டுள்ளார்.

 இதனிடையே சி.ஐ.டி.யினர் நேற்று கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகலவிடம் தாக்கல் செய்த பி அறிக்கையில்,  மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகார சந்தேக நபர்களுடன் தொடர்புகளை பேணியமை, அவர்களை பாதுகாத்து அவர்களுக்காக செயற்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் அசாத் சாலியிடம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றி கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.

சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர், சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் – 1 இன் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,  குறித்த அமைச்சின் செயலர்  ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த மனுவில் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத்  சாலி 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் திகதி நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வண்ணமும் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை  ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டதன் மூலம் தண்டணைச் சட்டக்கோவையின்  120  ஆம் அத்தியாயம் மற்றும் பயங்கரவாதத்  தடைச்சட்டத்தின்  2ம் பிரிவின் கீழும் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தினரால்  கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான  பின்னனியில் மேலதிக விசாரணைக்காக குற்றபுலனாய்வு திணைக்களத்தினர்  2021ம் ஆண்டு மார்ச்  மாதம் 19ம் திகதி பாதுகாப்பு அமைச்சரான  ஜனாதிபதியிடம்  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 9(1) பிரிவின் கீழ்  தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அசாத்சாலியை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

எவ்வாறாயினும் இந்த கைதும் தடுத்து வைப்பும் அரசியல் அமைப்பின் 12(1) உறுப்புரை பிரகாரம் சட்டத்தின் முன்னர் அனைவரும் சமன் எனும் உறுப்புரையை மீறுவதாக அமைந்துள்ளதாக மனுதாரர்  தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,  12(2)  உறுப்புரையின் பிரகாரம்,  இன, மத , மொழி,  சாதி, பால்,  அரசியல் கொள்கை, பிறந்த இடம் உள்ளிட்ட எந்த காரணியையும் அடிப்படையாகக் கொண்டும் பாகுபாடு காட்டப்படலாகாது எனும்  விடயமும் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதனைவிட அரசியலமைப்பின்  13(1) , 13(2)   ஆம் உறுப்புரைகளில் கூறப்பட்டுள்ள சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடைமுறைக்கு மாற்றமாக ஒருவர் கைது செய்யப்படல் கூடாது, கைது செய்யப்படும் போது அவர் கைது செய்யப்படுவதற்கான காரணம் அவருக்கு கூறப்படல் வேண்டும் மற்றும்  கைது செய்யப்படும் நபர் அண்மையில் உள்ள நீதிமன்றில் ஆஜர் செய்யப்படல் வேண்டும் போன்ற விடயங்களை மீறுவதா அசாத்சாலியின் கைதும் தடுத்து வைப்பும் அமைந்துள்ளதாக அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரசியலமைப்பின் 14(1) ஆம் உறுப்புரையூடாக வழங்கப்பட்டுள்ள, கருத்து, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 இவ்வாறு அரசியலமைப்பின்  உறுப்புரைகளை மீறுவதாக  அசாத்சாலியின் கைது அமைந்துள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சரின் தடுப்புக் காவல் உத்தரவு சட்டவலுவற்றதென தீர்ப்பரிவிக்குமாறும் இடை க்கால தடை உத்தரவு வழங்கி கைதியான அசாத் சாலியை விடுதலை செய்யும்படியும்  இம்மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.-வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter