அநுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்நேவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட அவுக்கனை (அலிவங்குவ கிராம்) எனும் கிராமத்திலுள்ள 49 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறித்த 49 குடும்பங்களைச் சேர்ந்ததவர்கள் இந்நாட்களில் உணவுக்காக பப்பாசி காய்களை வேகவைத்து சாப்பிட்டு வருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தினால் தமிழ்- சிங்கள புத்தாண்டு காலத்திலிருந்து பல்வேறுபட்ட நிவாரணத் திட்டங்களின் ஊடாக நிர்கதியாகியுள்ள பொது மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டிருப்பினும், கல்நேவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட அலிவங்குவ கிராம மக்களுக்கு எந்தவொரு வரப்பிரசாதமும் கிடைக்கவில்லை என அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களும் தெரிவிக்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் பல்வேறுபட்ட இடங்களிலிருந்த யாசக குடும்பங்களாக இருந்தவர்களை இந்த அலிவங்குவ கிராமத்தில் குடியமர்த்தப்பட்டதாகவும், தற்போது அவர்கள் யாசகம் எடுப்பதை தவிர்த்து, சுயதொழில்கள் ஈடுபடுவதற்காக அந்த மக்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேங்காய் பறிப்பது, பழைய இரும்புகளை சேகரிப்பது, தேங்காய் சிரட்டைகளை சேகரிப்பது, பஸ்களில் புத்தகங்கள் விற்பது போன்ற தொழில்களை தினமும் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். தற்போது நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்களது தொழில்களை மேற்கொள்ள முடியாது பொருளாதார ரீதியாக மிகவும் அவதியுற்று வருகின்றனர்.
மேலும், தமது கிராமத்திலுள்ள பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதனால், தங்கள் கிராமத்திலுள்ளவர்கள் ஒருவருக்குக்கூட வெளியே செல்வதற்கு பக்கத்து கிராம வாசிகள் இடமளிக்க மறுப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், பொதுவான நீர்வழங்கல் வசதி கூட இல்லாமலாக்கப்பட்டுள்ளது. தங்களை ஓரங்கட்டி எமது கிராமத்தை அடைக்கப்பட்டுள்ளதால் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக ஒருவேளை உணவாக தேநீரும் பிஸ்கட்டும், அவித்த மரவெள்ளிக் கிழங்குகளை சாப்பிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் பப்பாசி காய்களை வேகவைத்து உப்புபோட்டு சாப்பிட்டு வருவதாக கிராமத்து மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தமது பிள்ளைகளது மற்றும் தமது வயிற்றுப் பசியை போக்குவதற்கு அரச அதிகாரிகள் முறையாக செயற்படுகின்றனரா என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்துவதற்கான வழிகூட தமக்குத் தெரியாதெனவும் அந்த மக்கள் கூறிவருகின்றனர்.
இந்த விடயம் குறித்து, கல்நேவ பிரதேச செயலாளரான லக்மலி சேனாதீரவிடம் ‘வீரகேசரி’ வினவியபோது,
“கல்நேவ பிரசெயலகத்துக்குட்பட்ட அலிவங்குவ கிராமத்தில் 49 குடும்பங்கள் வசிக்கின்றனர். 8 ஆண்டுகளுக்கு முன்னர் இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 20 பேர்ச்சர்ஸ் காணி வழங்கப்பட்டு அவர்களை அந்த கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
மேலும், அவர்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உதவியுடன் வீடுகளை நிர்மானித்துக்கொள்வதற்கான வசதிகளையும் எமது செயலகத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்டது.
தற்போது நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளதால், அன்றாடம் கூலித் தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால் அந்த கிராமத்து மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
49 குடும்பங்களில் 3 குடும்பங்கள் சமூர்த்தி கொடுப்பனவுகளை பெற்று வருபவர்களாவர். ஏனைய 46 குடும்பங்களும் 46 சமூர்த்தி கொடுப்பனவுக்காக விண்ணப்பத்தி காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களாவர்.
சமூர்த்தி கொடுப்பனவு பெறும் 3 குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு மற்றும் கொரோனா அச்சுறுத்தல் நிவாரணக் கொடுப்பனவான 5 ஆயிரம் ரூபா என இரண்டுமாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. ஏனையோருக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக எனினும், இம்மாதத்துக்கான கொரோனா அச்சுறுத்தல் நிவாரணக் கொடுப்பனவு ரூபா ஐயாயிரத்தை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது.
அங்கே பொது நீர் வழங்கல் வசதி இதுவரை நிர்மானிக்கப்பட்டதில்லை. அந்த கிராமத்திலுள்ள மக்கள் பக்கத்திலுள்ள கிராமத்திலுள்ள தனிநபர் ஒருவருக்கு உரித்தான கிணற்றொன்றிலிருந்தே அலிவங்குவ கிராம மக்கள் குடிநீர் பெற்று வந்தனர். எனினும், அலிவங்குவ கிராமத்திலுள்ள 4 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதால் குறித்த கிணற்றின் உரிமையாளர் நீரை பெறுவதற்கு அனுமதி மறுத்துள்ளார்.
இந்நிலையில், தேசிய நீர்வழங்கல் அதிகார சபையுடன் இணைந்து அலிவங்குவ கிராமத்து மக்களுக்கு தண்ணீர் தாங்கிகள் அனுப்பப்பட்டு வருகின்றன” என்றார்.
-வீரகேசரி பத்திரிகை-(எம்.எம்.சில்வெஸ்டர்)