சமீபத்தில் வட்டவளையில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரான இன்ஸ்பெக்டர் பெனடிக்ற் என்பவரின் குடும்பத்திற்கு ஹற்றன் முஸ்லிம்கள் பலர் உதவிகள் புரிவதற்கு முன்வந்துள்ளனர்.
கொவிட் தொற்றால் இறந்தவரின் சடலத்தை கண்டியில் இருந்து ஓட்டமாவடி நோக்கி கொண்டு சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் பெனடிக்ற் பயணம் செய்து கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது பொலிஸ் இன்ஸ்பெக்டர் பெனடிக்ற் உயிரிழந்தார். அவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
இவரது குடும்பத்துக்காக ஹற்றனைச் சேர்ந்த முஸ்லிம்கள் பலர் ஒன்றுசேர்ந்து மூன்று இலட்சம் ரூபாவைத் திரட்டிக் கொடுத்துள்ளனர். இந்த நிதியுதவியை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான எஸ்.டி.எம்.பாரூக் பொலிஸ் இன்ஸ்பெக்டர் பெனடிக்ற்றின் குடும்பத்தினரிடம் கையளித்தார். இதேவேளை இன்ஸ்பெக்டரின் மூன்று பிள்ளைகளின் கல்விக்கு உதவி செய்யப் போவதாக கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் ஒன்றிய அமைப்பின் தலைவர் உறுதியளித்துள்ளார்.
ஹட்டன் வைத்தியசாலையின் கொரோனா பாதுகாப்புக் குழுவின் தலைவரும், ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக உத்தியோகத்தருமான ஏ.ஜே .எம். பஸிர், ஹட்டன் டிக்கோயா நகர சபை பிரதி தவிசாளர் ஏ.ஜே.எம். பர்மிஸ், ஹட்டன் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.டீ எம். பாறுக், கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் ஒன்றிய அமைப்பின் தலைவர்கே.ஆர்.ஏ.சித்தீக் ஆகியோர் இன்ஸ்பெக்டரின் இறுதி கிரியையில் கலந்து கொண்டனர்.
எம்.ஏ.அமீனுல்லா Thinakaran