ஐந்து புதிய கொரோனா திரிபுகள் 7 மாவட்டங்களில்!

B.1.428- டென்மார்க்/ஐரோப்பிய/ மத்திய கிழக்கு திரிபு:

யாழ்.மாவட்டத்தில் B.1.525- நைஜீரிய திரிபு: கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில்

B.1.617- இந்திய திரிபு: கொழும்பு மாவட்டத்தில்

B.1.351- தென்னாபிரிக்க திரிபு: கொழும்பு மாவட்டத்தில்

B.1.1.7- பிரித்தானிய திரிபு: கொழும்பு, குருநாகல், களுத்துறை, கண்டி, பொலன்னறுவை, மன்னார் மாவட்டங்களில்.

பிரித்தானியா. இந்தியா, டென்மார்க், நைஜீரியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் பரவும் கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கையின் ஏழு மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவு நேற்று (08) தெரிவித்துள்ளது.

கொழும்பு, குருநாகல், களுத்துறை, கண்டி, பொலன்னறுவை, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு புதிய திரிபுடைய வைரஸ் வகைகளுடன் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர் நீலிகா மாலவிகே மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு, நுண்ணுயிரியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சந்திம ஜீவந்தர ஆகியோர் அறிக்கையொன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த அறிக்கையின் பிரகாரம் ஆறு மாவட்டங்களில் இங்கிலாந்தில் பரவில் வரும் பி.1.1.7. என்ற வைரஸுடன் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு மாநகரசபை, ஹோமாகம், பொலரஸ்கமுவ ஆகிய பிரதேசங்களிலும், குருநாகல் மாவட்டத்தில் பொல்பிதிகம, குளியாபிட்டிய, நிகவரெட்டிய, கனேவத்த. அம்பலன்பொல, கிரியுல்ல, பன்னல, வாரியபொல ஆகிய பிரதேசங்களிலும் களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை, பிம்புர, பாணந்துறை, பாவிந்தநுவர. பண்டாரகம ஆகிய பிரதேசங்களில் பி.1.1.7. என்ற வைரஸ் தொற்றுடன் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தின், பன்டுவஸ்நுவர, கண்டி மற்றும் ஹிங்குராங்கொட ஆகிய பிரதேசங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்தில் மெதிரிகிரிய பிரதேசத்திலும், மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர் பிரதேசத்திலும் இந்தப் புதிய திரிபுடன் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், டென்மார்க், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பரவிவரும் புதியவகை திரிபான பி.1.428 என்ற வைரஸ் தொற்றுப்பரவல் ஏற்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக நல்லூர் பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கொத்தணியிலிருந்தே இந்த திரிபினை ஒத்த வைரஸின் தொற்று ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பரவும் பி.1.411 என்ற புதிய திரிபுடைய வைரஸ் தொற்றுடன் மட்டக்களப்பு மற்றும் கொழும்பு மாவட்டத்தில் பல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் நைஜீரியாவில் பரவும் இன்னுமொரு திரிபான பி.1.525 வைரஸ் தொற்றுடன் பண்டாரகம மற்றும் கொழும்பு பிரதேசத்தில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தியாவில் சடுதியாக பரவிவரும் புதியவகை கொரோனா திரிபான 19.1.617 என்ற வைரஸ் தற்போது இலங்கையிலும் ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நாடுபூராகவுமுள்ள கொரோனா நோயாளர்களின் மாதிரிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலேயே பி.1.517 என்ற வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நவலோக்க வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொண்ட கொரோனா நோயாளர் ஒருவரின் மாதிரியிலேயே இந்த பிரிவைச் சேர்ந்த வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தென்னாபிரிக்காவில் பரவும் பி.1.351 திரிபுடனும் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார். நவலோக்சு வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொண்ட மாதிரியிவேயே இந்த திரிபு வகையைச் சேர்ந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter