குழந்தைகளுக்கும் கொரோனா; பெற்றோரே கவனம்

இந்திய நாட்டில் கொரோனா இரண்டாம் அலை ‘சுனாமி’ வேகத்தில் பரவுகிறது. முதல் அலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களையும் துணை நோய்கள் உள்ளவர்களையும்தான் அதிகமாக பாதித்தது. இரண்டாம் அலையில் இளைய வயதினரையும் குழந்தைகளையும் அதிகமாகக் குறிவைக்கிறது.பிறந்த குழந்தையிலிருந்து இதன் தாக்குதல் தொடங்குகிறது.

தமிழகத்தில் ஒரு வயதிலிருந்து 12 வயது வரையுள்ள குழந்தைகள் அதிக பாதிப்பு அடைந்திருக்கின்றனர். ஏப்ரலில் மட்டும் தமிழகத்தில் 4,212 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால் இதன் தாக்குதல் வேகத்தைப் புரிந்துகொள்ளலாம்.இந்த வாரம் விருதுநகரில், பிறந்து 13 நாட்களே ஆன ஒரு குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் ஒரு கர்ப்பிணியின் குழந்தை பிறந்த 36 மணி நேரத்தில் கொரோனாவால் இறந்து போன செய்தியும்கவலை அளித்திருக்கிறது.

என்ன காரணம்

இரண்டாம் அலையில் பலதரப்பட்ட மரபணு மாறிய கொரோனா வைரஸ்கள் பரவி வருவது
குழந்தைகள் பாதிப்புக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இந்த வைரஸ்கள் காட்டுத்தீபோல் பரவும் தன்மை கொண்டவை என்பது அடுத்த காரணம்.முதல் அலையில் ஊரடங்கு இருந்த காரணத்தால் குழந்தைகள் வீட்டிலேயே அடைந்துகிடந்தனர். வைரஸ் தொற்றும் வாய்ப்பு குறைவாக இருந்தது. ஆனால், இரண்டாம் அலையில் குழந்தைகளை முகக்கவசம் இல்லாமல் தெருக்களில், கடைகளில், உணவ கங்களில் தாராளமாகக் காணமுடிகிறது. இதனால் கொரோனா தொற்றும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

சிறு குழந்தைகள் வீட்டில் இருந்தாலும், குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியில் சென்றுவரும்போது கொரோனாவைக் கொண்டுவந்து விடுகின்றனர். பெரிய குழந்தைகள் என்றால் பக்கத்து வீடுகளில் விளையாடச் செல்லும்போது கொரோனா தொற்றும் வாய்ப்பு உண்டாகிறது. வீட்டில் யாருக்காவது அறிகுறிகளுடனோ அல்லது அறிகுறிகள் இல்லாமலோ கொரோனா தொற்று இருந்து தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்காதபோது, குழந்தைகளுக்கும் அது தொற்றிவிடலாம்.

முக்கியமாக, வீட்டுப் பணியாளர்களுக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று இருந்தால், அவர்கள் மூலம் குழந்தைகளுக்குத் தொற்று ஏற்படலாம். குழந்தைகளைப் பொறுத்தவரை வீட்டில் உள்ளவர்கள் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தால்தான் பாதுகாப்பு. அதேநேரத்தில் தொற்று உள்ள குழந்தைகளிடமிருந்து வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் அது பரவ வாய்ப்பு உள்ளது.

அறிகுறிகள் என்னென்ன

கொரோனா தொற்று ஏற்படும் குழந்தைகளில் 95 சதவீதம் பேர் அறிகுறிகள் இல்லாமல் அல்லது மிதமான அறிகுறிகள் உள்ளவர்களாகவும்தான் இருக்கின்றனர். மீதி 5 சதவீதம் பேர்தான் மோசமான அறிகுறிகளுடன் ஆபத்தான நிலைமைக்குச் செல்கின்றனர். எனவே பெற்றோர் பயப்பட வேண்டாம்.

குழந்தைகளுக்கு பெரும்பாலும் சாதாரண புளூ காய்ச்சலைப்போல கொரோனா தொற்று இருக்கிறது. ஆரம்பகட்டத்தில் மூக்கு ஒழுகல், காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகியவை பொதுவான மிதமான அறிகுறிகள். முதல் அலையில் மூக்கு மற்றும் சுவாச உறுப்புகளின் செல்களில் உள்ள ‘ஏசிஈ2’ புரத ஏற்பிகளுடன் கொரோனா வைரஸின் கூர்ப்புரதங்கள் இணைந்து உடலுக்குள் நுழைந்ததால், இந்த அறிகுறிகள் பிரதானமாக இருந்தன. இப்போது பசிக்குறைவு, வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஆகியவையும் காணப்படுகின்றன.

இரண்டாம் அலையில், குடலில் இருக்கும் ‘ஏசிஈ2’ புரத ஏற்பிகளுடன் கொரோனா கூர்ப்புரதங்கள் இணைந்து உடலுக்குள் நுழைகின்றன. இதனால் இந்த அறிகுறிகளே இப்போது முதன்மையாகின்றன. இவற்றை அஜீரணத்தின் அறிகுறிகள் என்று எண்ணி பெற்றோர் அலட்சியப்படுத்தி

விடக்கூடாது. இவற்றை கவனிக்கத் தவறினால் குழந்தை அடுத்தகட்ட ஆபத்துக்குச் சென்றுவிடும்.அப்போது குழந்தைக்கு தொடர்ச்சியான வறட்டு இருமல், மூச்சுத் திணறல் ஏற்படலாம். எப்போதும் சோர்வாக இருக்கலாம். எதையும் சாப்பிட முடியாத நிலைமை உருவாகலாம். உடலில் நீர் வறட்சி ஏற்படலாம். எந்நேரமும் அழுதுகொண்டு இருக்கலாம். இப்போதும் கவனிக்கத் தவறினால், அடுத்ததாக வருவதுதான் மோசமான கட்டம். இதில் குழந்தை மயக்கநிலைக்குச் செல்லலாம்; வலிப்பு வரலாம்.

என்ன செய்ய வேண்டும்

கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரியும் குழந்தைகளுக்கு ‘ஆர்.டி.பி.சி.ஆர்.’ பரிசோதனை அவசியம். தவிர கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டில் இருந்தால், அந்த வீட்டுக் குழந்தைகளுக்கும் இந்தப் பரிசோதனை அவசியம்.பெரும்பாலான குழந்தைகளுக்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொண்ட பின்னர், அவரின் மேற்பார்வையில், வீட்டிலேயே அவர்களை இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம். காய்ச்சல், சளிக்கு மருந்து கொடுப்பது, வைட்டமின் சி, டி, ஜிங்க் சத்து மாத்திரை அல்லது மருந்துகள் கொடுப்பது போன்ற சாதாரண சிகிச்சையிலேயே ஒரு வாரத்தில் குழந்தைக்கு அறிகுறிகள் மறைந்துவிடும்; அடுத்த வாரத்தில் தொற்று குணமாகிவிடும். சோர்வு மட்டும் சில தினங்களுக்கு இருக்கும். ஊட்டச் சத்துள்ள உணவுகளைக் கொடுத்து வந்தால் அதுவும் சரியாகிவிடும்.

எப்போது கவனம் தேவை

குழந்தைக்கு காய்ச்சல் 5 நாட்களுக்கு மேல் நீடிக்கிறது, வேக வேகமாக மூச்சு விடுகிறது, உதடுகள் நீலம் பூத்துக் காணப்படுகிறது, கடுமையான சோர்வு, எதையும் சாப்பிட முடியவில்லை, படுத்த படுக்கையாக இருக்கிறது, சுயநினவை இழக்கிறது, பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் குழந்தையின் ஆக்ஸிஜன் அளவு 95 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறது… இப்படியான மோசமான அறிகுறிகள் தோன்றுமானால் உடனடியாகக் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டும். அப்போது அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுவது, ஆக்ஸிஜன் செலுத்துவது, ஸ்டீராய்டு மருந்துகள் கொடுப்பது, ‘ரெம்டெசிவிர்’ ஊசி செலுத்துவது, வென்டிலேட்டர் சிகிச்சை தருவது உள்ளிட்ட தீவிர சிகிச்சைகள் தேவைப்படும்.

கொரோனாவை தடுப்பது எப்படிவீட்டில் யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால், குழந்தையை அவர்களுக்கு அருகில் விடக்கூடாது. தொற்றுள்ளவர்களும் சரி, குழந்தையும் சரி, முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தனிமனித இடைவெளி காக்கப்பட வேண்டும். கொரோனா தொற்று வேகமாகப் பரவும் இக்காலத்தில் குழந்தையை வெளியிலோ பக்கத்து வீடுகளிலோ விளையாடச் செல்ல அனுமதிக்கக் கூடாது. கைகளைச் சோப்புப் போட்டு அடிக்கடி கழுவச் சொல்ல வேண்டும். சந்தை, திருமணவிழா, திருவிழா, பிறந்தநாள் விழா போன்ற கூட்டம் கூடும் இடங்களுக்குக் குழந்தையை அழைத்துச் செல்லக்கூடாது.

கவனிப்பது எப்படி

தொற்றுள்ள குழந்தையை இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்த வேண்டும். இது நடைமுறைச் சிரமம்தான். இதில் பெற்றோர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மருத்துவர் கூறும் மருந்துகளோடு நிறைய தண்ணீர் அருந்தச் செய்ய வேண்டும். பழங்களும் பழச்சாறுகளும் கொடுக்கப்பட வேண்டும். பால், பருப்பு, முட்டை, மீன் போன்ற புரதச் சத்துள்ள உணவுகள் தரப்பட வேண்டியது முக்கியம்.குழந்தைக்கு ஓய்வு அவசியம். விளையாடவிடக்கூடாது. சிறு குழந்தைகளுக்கு வீட்டில் முகக்கவசம் அணியத் தேவையில்லை.

ஆனாலும், குழந்தைகள் வாய், மூக்கு, கண், முகத்தைத் தேவையில்லாமல் தொடுவது கூடாது என்பதைப் புரிய வைக்க வேண்டும். இருமும்போதும் தும்மும்போதும் முகத்தைக் கைக்குட்டை அல்லது மென்தாளால் மூடிக்கொள்வதையும் பழக்கப்படுத்த வேண்டும்.தொற்றுள்ள பெரிய குழந்தைகள் முகக்கவசம் அணிவது கட்டாயம். குழந்தையைக் கவனிக்கும் பெற்றோர் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டியது அவசியம். பெற்றோரும் அடிக்கடி கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் பயன்படுத்தும் அலைபேசி, விளையாட்டுப் பொருள்கள், ரிமோட் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றைச் சுத்தப்படுத்துங்கள். குழந்தைகள் அதிகம் தொடும் கதவு, தாழ்ப்பாள், தண்ணீர்க் குழாய் போன்றவற்றையும் தரைதளத்தையும் அடிக்கடி சுத்தப்படுத்துங்கள். குழந்தையின் அறை காற்றோட்டமாக இருப்பது நல்லது. ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். ஏசி போட வேண்டாம். அடுத்த வீட்டுக் குழந்தைகள் விளையாட வருவதைத் தவிருங்கள். உறவினர்களையும் விருந்தினர்களையும் அனுமதிக்காதீர்கள். குழந்தைக்குத் தனியாகச் சாப்பாடுத் தட்டு, டம்ளர்களை பயன்படுத்துங்கள். அவற்றை கொதிக்கும் நீரில் கழுவுங்கள்.குழந்தைக்கு கொரோனா தொற்றியதும் பெற்றோர் பயப்பட வேண்டியதில்லை; குழந்தையையும் பயமுறுத்தத் தேவையில்லை; கவனத்துடன் கவனித்தால் போதும். குழந்தையை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டுவிடலாம்.

தடுப்பூசி உண்டா

நாட்டில் தற்போது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதில்லை. மேல்நாடுகளில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தி ஆராய்ச்சி செய்கிறார்கள். இங்கிலாந்திலும் இஸ்ரேலிலும் அடுத்த 6 மாதங்களில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட இருக்கிறார்கள். இது இந்தியாவில் சாத்தியப்பட இன்னும் சில வருடங்கள் ஆகும். அதுவரை தகுந்த முன்னெச்சரிக்கைகளை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பது தான் கொரோனாவை வீழ்த்தும் முக்கிய வழி.
-டாக்டர் கு. கணேசன்

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter