பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்

விடுமுறை காலப்பகுதியில் கொவிட்-19 வைரஸ் பரவல் மற்றும் வாகன விபத்துகள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது ,

வாகன விபத்துகள் மற்றும் கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பில் மீண்டும் அதிக அவதானத்துடன் செயற்படவேண்டி ஏற்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை முதல்  திங்கட்கிழமை வரை தொடர்ச்சியான விடுமுறைக்காணப்படுவதால் , இந்த காலப்பகுதிகளில் விநோத பயணங்கள் மற்றும் சுற்றுலாக்கள் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

வீதி விபத்துகளை பொருத்தமட்டில் இன்னமும் திருப்தியடைக்கூடிய நிலைமை ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியுடன்  நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் 7 பேர் மரணித்துள்ளனர். 

கடந்த தினங்களில் 16 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் , தற்போது உயிரிழப்புகள் சற்று குறைவடைந்திருந்தாலும் அதனை எண்ணி எம்மால் மகிழ்ச்சியடைய முடியாது. 

இந்நிலையில் இந்த தொடர்ச்சியான விடுமுறைகாலத்தில் வீதி விபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்காக வாகன சாரதிகள் முயற்சிக்க வேண்டும். இதன்போது பயணிகளும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.

இதேவேளை , கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பான நெருக்கடி நிலைமை இன்னமும் குறைவடையவில்லை. வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் சில பகுதிகள் தற்போதும் முடக்கப்பட்டுள்ளன. அதனால் வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை பின்பற்றுவதை கைவிடவேண்டாம். 

முகக்கவசம் அணிதல் , சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் கைகளை சுத்தம் செய்துக் கொள்ளல் என்பவற்றை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். -வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter