தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த சர்ச்சைக்குரிய கார் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த காரின் சாரதி மற்றும் பயணிகள் நால்வரும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை பாதுகாப்பற்ற முறையில் காரின் ஜன்னலில் அமர்ந்து பயணித்ததாக காரின் சாரதி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் , இன்று மீண்டும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர்களை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன் , இந்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளது.
இதேவேளை , இந்த சம்பவத்துடன் தொடர்புக் கொண்டுள்ள கார் கண்டி – பேராதனை பகுதியைச் சேர்ந்த நபரொருவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. குறித்த நபர் உரிய சட்டவிதிகளுக்கு புறம்பாக இன்னுமொருவருக்கு காரை பொறுப்பளித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அதற்கமைய அவரிடமிருந்து 5,000 ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள வழக்கு விசாரணைகளின் போது சந்தேக நபர்கள் ஐந்து பேருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. -வீரகேசரி பத்திரிகை-