பௌத்த துறவிகள் போல் வேடமிட்டு தாக்குதல் நடத்தலாம் – ஞானசார தேரர் 

இஸ்லாமிய அடிப்படைவாதம்  நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை. அடிப்படைவாதிகள் தாக்குதல்களை  பௌத்த துறவிகளை போல் வேடமிட்டும் முன்னெடுக்கலாம். 

குண்டுத்தாக்குதலின் உண்மை சூத்திரதாரியை எதிர்தரப்பினர் அறிந்திருப்பார்களாயின் நாட்டு மக்களுக்கு உண்மையினை  பகிரங்கப்படுத்த வேண்டும் என  பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று  இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து  பல விடயங்களை குறிப்பிட்டோம். 

அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காக  முஸ்லிம் அரசியல் தலைவர்களும், ஆட்சியில் இருந்த அரச தலைவர்களும் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. 

மாறாக எம்மை அடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.  இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் அலட்சியப் போக்கில் செயற்பட்ட  பொறுப்பில் இருந்த  அனைத்து தரப்பினரும்  ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் தற்போது போர்க் கொடி தூக்குவது வேடிக்கையானது.

மக்கள் விடுதலை முன்னணியினர்  2018 ஆம் ஆண்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் தொடர்புகொண்டு பல செயற்திட்டங்களை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்தார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக இப்பராஹிம் தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையாவார் .இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது  என மக்கள் விடுதலை முன்னணியினர்  குறிப்பிட முடியாது.

குண்டுத்தாக்குதலின் இரண்டாம் வருட நிறைவை முன்னிட்டு  சஜித் பிரேமதாஸ உட்பட எதிர்க்கட்சியினர் கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றில் ஆக்கிரோசமாக கருத்துரைப்பதை காண கூடியதாக  முடிந்தது.  சர்வதே மட்டத்தில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தொடர்பு வைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இலங்கையில் கட்டார் சரிட்டி எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

சர்வதேச மட்டத்தில் செயற்பட்ட மற்றும் தற்போது செயற்படுகின்ற பயங்கரமான இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும்  கட்டார் சரிட்டி அமைப்பு நிதியுதவி வழங்கியுள்ளது. இந்நிறுவனம் இலங்கையில் செயற்படும் .இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைக்கு ஈர்க்கப்பட்டவர்களுக்கு  புனருத்தாபனம் வழங்குவதுடன் இஸ்லாமிய அடிப்படைவாத விளைவுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும்,  மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் பாடம் புகட்டவேண்டும்.

இவர்கள் தங்களின் குறுகிய அரசியல் தேவையினை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நல்லாட்சி அரசாங்கத்தை இயக்கினார்கள். அரச ஆதரவுடன் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைத்தூக்கியது.

 ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை கொண்டு மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டனை அரசாங்கத்திற்கு தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிக்கிறார். 

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குவின் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார். ஆனால் குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் குறித்து எவ்விடத்திலும் இவர் குறிப்பிடவில்லை.

பயங்கரவாதி சஹ்ரான் 2019 ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத்தாக்குதலை முன்னெடுப்பதற்கு முன்னர்  அடிப்படைவாத செயற்பாடுகளை பகிரங்மாக முன்னெடுத்துள்ளான்.  

வவுணதீவு போக்குவரத்து  பொலிஸார்  கழுத்தறுத்து கொலை, மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவம்,  சஹ்ரான் குறித்து தகவல் கொடுத்த தஸ்லின் தாக்கப்பட்டமை, தாளம் குடாவில்  வெடி குண்டு ஒத்திகை, வனாத்தவில்லு பிரதேசத்தில் பெருந்தொகையான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டமை  ஆகிய சம்பவங்கள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் முறையாக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் ஏப்ரல் 21  குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்றிருக்காது.

அனைத்து தரப்பினரது பொறுப்பற்ற தன்மையினை அடிப்படைவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பல விடயங்களை  அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது.  

பல விடயங்கள் தற்போதும் செயற்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திற்கு தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிப்பது பயனற்றது. தேவையற்ற அழுத்தங்கள் உண்மையான குற்றவாளியை  காப்பாற்றும்.

குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மை குற்றவாளியை தாம் அறிவதாக  எதிர்கட்சியினர் குறிப்பிட்டுள்ளார்கள். 

ஆகவே  இவ்விடயம் குறித்து உண்மை காரணியை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். 

இஸ்லாமிய அடிப்படைவாதம் புற்றுநோய் போன்றது. அதனை விரைவாக  இல்லாதொழிக்க முடியாது பொறுமையுடன் கையாள  வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாத  அமைப்புக்கள் மாத்திரமே தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வமைப்புக்களின் கொள்கைகள் வியாபித்துள்ளது. ஆகவே அடிப்படைவாதிகள் எந்நேரத்திலும் தாக்குதல்களை முன்னெடுக்கலாம்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பௌத்த துறவி போன்று வேடமிட்டும் தாக்குதல்களை நடத்தலாம். மீகலாவ பிரதேசத்தில் ஒருவர் பௌத்த பிக்கு போல் வேடமிட்டு பௌத்த விகாரைக்கு வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே பௌத்த பிக்குகளை கருவியாக கொண்டு தாக்குதல்கள் இடம் பெறலாம் ஆகவே அனைத்து தரப்பினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

(இராஜதுரை ஹஷான்) -வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter