போர்ட்சிட்டி துறைமுக நகர் விவகாரம், மாகாண சபைத் தேர்தல் உட்பட்ட ஆளுங்கட்சிக்குள் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளை பேசுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை அலரி மாளிகையில் நடத்திய கூட்டத்தில் ஆளுங்கட்சியின் முக்கிய தலைவர்களான அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உட்பட்டோரும். இதர சில கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளவில்லை.
அண்மைக்காலமாக ஆளுங்கட்சிக்குள் எழுந்திருக்கும் சர்ச்சைகளை தீர்த்துக்கொள்ளும் வகையில் இந்த கட்சித் தலைவர்களின். கூட்டத்தை நேற்றைய தினம் நடத்த சித்திரை புதுவருடத்திற்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந் தது. ஆனால் நேற்றைய தினம் கட்சித் தலைவர்களை அழைக்காமல் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அழைக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கு எதிர்ப்பினை வெளியிட்ட மேற்படி கட்சித்தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்தனரென்றும் நேற்றிரவு அறியமுடிந்தது.
நேற்றைய கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதிநேரத்தில் கலந்துகொண்டதாக அறியமுடிந்தது.
மேதின கூட்டத்தை ஆளுங்கட்சியுடன் சேர்ந்து நடத்துமாறு இந்த கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கட்சிகளின் தலைவர்மாரை கேட்டுக்கொண்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் தத்தமது கட்சி ஆதரவாளர்களுடன் ஆளுங்கட்சி மேதின கூட்டத்துடன் இணைந்துகொள்ள சம்மதம் வெளியிட்டுள்ளனர். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தமது கட்சி தனியே மேதின கூட்டத்தை நடத்தவுள்ளதாக இங்கு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இது தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்குமென அதன் தலைவர் மைத்ரிபால சிறிசேன இங்கு தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் மற்றும் அது தொடர்பில் செய்யப்படவேண்டிய சட்டத் திருத்தங்கள் குறித்தான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இந்த கூட்டத்தில் விளக்கமளித்துள்ளார்.
தொகுதிவாரி மற்றும் கலப்பு முறை தேர்தல் நடத்தப்படும்போது மலையகத்தில் உள்ள சிறிய கட்சிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து இங்கு இராஜாங்க அமைச்சர் ஜீவள் தொண்டமான் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார், அந்தப் பிரச்சினைகளை எழுத்து மூலம் தந்தால் அவற்றையும் கவனத்திற்கொண்டு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமெனவும் பரில் ராஜபக்ஷ இங்கு உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், நேற்றைய கூட்டத்தினை புறக்க ணித்த கட்சித் தலைவர்களுக்காக, பிறிதொரு தினத்தில் விசேட கூட்டமொன்றை நடத்த ஏற்பாடுகளை செய்யு மாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது அதிகாரிகளை பணித்துள்ளதாக அறியமுடிந்தது.
மஹிந்தவை தனியாக சந்தித்த அமைச்சர்மார்
நேற்றைய கூட்டத்தை புறக்கணித்த அமைச்சர்கள் விமல், கம்மன்பில, வாசுதேவ ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியதாகவும், ஆளுங்கட்சியில் 14 கட்சிகள் இருக்கும் நிலையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 51 எம்.பிக்கள் கலந்து கொள்வது எப்படியென்று இதன்போது அவர்கள் பிரதமரிடம் விளவியதாகவும் அறியமுடிந்தது.
விமலின் வீட்டில் கூட்டம்
இதேவேளை நேற்றைய கலந்துரையாடலின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக அமைச்சர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு (18) விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் வாகதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, டிரான் அலெஸ், அசங்க நவரத்ன, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜி.வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். சுமார் 51 எம்பிக்களை இந்த கூட்டத்திற்கு பசில் ராஜபக்ஷ அழைத்திருப்பது தெரியவந்ததால், விமல் வீரவன்சவும் அவரது குழுவும் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என உடனடியாக முடிவு செய்யப்பட்டது.
அரசு எம்.பி.க்கள் குழு சந்திப்பு
இதற்கிடையில், ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் அவசரக் கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றிரவு அலரி மாளிகையில் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் பிரேரிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர விசேட ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இதில் பேசப்பட்டுள்ளது.