மஹிந்தவுடன் நேற்றைய கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு மைத்திரி இன்று அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை மே தினக் கூட்டத்தை தனித்து நடத்த தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய குழு மற்றும் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு மற்றும் பாராளுமன்ற குழு என்பன சுதந்திரக் கட்சி வழமையைப் போன்று மே தினக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தீர்மானித்துள்ளன.  அதற்கமைய கொழும்பில் மே தினக் கூட்டத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர கட்சியின் வரலாற்றை அவதானிக்கும் போது கீழ் மட்டத்திலுள்ள மக்களை உயர்மட்டத்திற்கு கொண்டு வந்தததும் சுதந்திர கட்சியாகும். எனவே நாம் மே தினக் கூட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை வெகுவிரைவில் எடுக்கவும், மே தின கூட்டத்தை  ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிகள் அனைத்து ஒன்றிணைத்து நடத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் அலரிமாளிகையில் பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேதினக் கூட்டத்தை தனித்து நடத்தப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான பங்காளி கட்சிகளின் தலைவர்கள் பிரதமருடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை.  

கூட்டணி, மற்றும் அரசாங்கத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து தனிப்பட்ட முறையில் கலந்துரையாட பிரதமரிடம் பங்காளி கட்சிகளின் தலைவர்கள்  அனுமதி கோரியுள்ளார்கள்.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில்  சுதந்திர கட்சியின்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன,  பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ,வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன,கல்வி அமைச்சர்  ஜி.எல் பீரிஸ், நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார   ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள். பங்காளி கட்சியின் முக்கிய தரப்பினர்களாக கருதப்படும்  அமைச்சர்களான   விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், இது குறித்து கட்சியின்  பொது செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில் ,

சுதந்திர கட்சி இம்முறை மே தினக் கூட்டத்தை தனித்து நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதோடு , பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஏனைய சகல தரப்பிற்கும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் என்ற ரீதியில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்து கொள்வார் என்றார். -வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter