துறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் – ஜனநாயகத்திற்கான சட்டதரணிகள் சங்கம் எச்சரிக்கை

கொழும்பு துறைமுக நகரத்துக்கான உரிமம் நாட்டு மக்களை சார்ந்ததாகும். அதனை சீனாவுக்கு வழங்குவதன் ஊடாக  இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் எதிர்ப்புகளை இலங்கை சந்திக்க நேரிடும்.

இதனால் ஏற்படக் கூடிய  போரில் எமது நாடே யுத்தகளமாக மாறும். எமது துறைமுகங்களில் சீன போர் கப்பல்களை நிறுத்திவைக்க கூடும்.

எனவே இவ்வாறான விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஜனநாயகத்திற்கான சட்டதரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் அரசாங்கம் உண்மையை மறைக்கும் வகையிலேயே செயற்பட்டுள்ளது. விடுமுறை தினங்களை கருத்தில் கொண்டு இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளதன் மூலம் அது தெளிவாகியுள்ளது. 

இந்நிலையில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது நாட்டின் சுயாதீன தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு – மருதானையில் அமைந்துள்ள சனசமூக கேந்திர மத்திய நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதன் போது உரையாற்றிய சட்டத்தரணி சுனில் வட்டகல மேலும் கூறியதாவது,

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது நாட்டின் அரசியலமைப்புக்கு முரணான வகையிலேயே முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே அதனை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதை மறைக்கும் வகையிலேயே செயற்பட்டுள்ளது. பண்டிகை கால விடுமுறை தினங்களை கருத்திற்கொண்டு அரசாங்கம் இந்த சட்டமூலத்தை கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.

இது தொடர்பில் மறுநாள் 9 ஆம் திகதியே தெரியவந்திருந்த போதிலும் அதனை நீதிமன்ற சவாலுக்குடுத்த போதிய காலம் கிடைக்கப்பெறவில்லை.

கடந்த 10 மற்றும் 11 திகதி வார இறுதி தினங்கள் என்பதால் . 12 ஆம் திகதி மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பிருந்த போதிலும் , அரச விடுமுறை தினமாக அன்றைய தினத்தை அரசாங்கம் அறிவித்தது. 15 ஆம் திகதி ஒரு நாள் மாத்திரமே மனுதாக்கல் செய்ய எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றிருந்தது.

அந்த ஒரு நாளிலும் 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டுக்கு சொந்தமான வளங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்துக்கான உரிமை நாட்டு மக்களை சார்ந்ததாகும்.

அதனை இன்னுமொரு நாட்டுக்கு வழங்குவதால் எமது சுயாதீன தன்மைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். துறைமுக நகரத்தை சீனாவுக்கு வழங்குவதன் ஊடாக  இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் நாம் எதிர்ப்பை சந்திக்க நேரிடும்.

இந்த நாடுகளுக்கிடையில் போர் ஏற்பட்டால் எமது நாடே யுத்தகளமாக காணப்படுவதுடன் ,  சீனா எமது துறைமுகத்தில் அதன் போர் கப்பல்களை நிறுத்திவைக்க கூடிய வாய்ப்புள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சிந்தித்து செயற்பட வேண்டும்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவானது 7 பேரைக் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுவதுடன் , அதற்கு பொறுப்பானவர்கள் வெளிநாடுகளுடன் இணைந்து செயற்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் , ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கோ , அமைச்சரவைக்கோ பொறுப்புக் கூற வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் அரசியலமைப்புக்கு புறம்பான செயற்பாடுகளாகும். இது ‘ஒரே நாடு ஒரே நீதி ‘என்ற தன்மைக்கு பொருத்தமானதாக அமையாது. அதனால் இதன் நன்மை தீமைகள் தொடர்பில் நாட்டு மக்களும் விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பின் 3,4 மற்றும் 12 ஆம் சரத்துகளுக்கு முரணான வகையிலேயே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இது தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவை பெற்றுக் கொள்வதுடன் , சில விடயங்களை மக்கள் தீர்ப்புக்கு விட வேண்டும்.

இதேவேளை துறைமுக நகரத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் அதற்கான மின்சக்தி , நீர் போன்ற வசதிகள் எவ்வாறு செய்துக் கொடுக்கப்படுகின்றன, அங்குள்ள கழிவுகள் எவ்வாறு அகற்றப்படும் என்பது தொடர்பிலும் முறையான விளக்கம் எதுவும் இல்லை. மின்சக்தி என்பன நாட்டு மக்களின் வரி பணத்தாலே இயங்கி வருகின்றது. எமது நாட்டுக்கு சொந்தமில்லாத ஒன்றுக்காக ஏன் எமது வளங்களை செலவிட வேண்டும்.

மேலும் நாட்டில் தொழில் வாய்ப்பில்லாத பலர் உள்ளனர் இவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதை விடுத்து வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதால் நாட்டுக்கு எந்தவொரு பயனும் கிடைக்கப்பெறாது. அதனால் இது தொடர்பில் கட்சி பேதமின்றி அனைவரும் உண்மை நிலையை உணர வேண்டும். -வீரகேசரி பத்திரிகை- (செ.தேன்மொழி)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter