இந்தியாவின் முகவரா ஷாரா?

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் ஒரு பெரும் திருப்பம் நிகழ்ந்திருக்கிறது.

கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல்களை நடத்திய ஆச்சி முகமட் ஹஸ்தூனின் மனைவியான ஷாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், உயிரிழக்கவில்லை என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் காசிம் உள்ளிட்டவர்களின் குடும்பத்தினர் சாய்ந்தமருதில் மறைந்திருந்த இடத்தை ஏப்ரல் 26ஆம் திகதி இராணுவத்தினர் சுற்றிவளைத்த போது, அவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்தனர்.

அந்தச் சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்த அதேவேளை, சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் மாத்திரமே காயங்களுடன் உயிர் தப்பியிருந்தனர்.

குண்டுவெடிப்புகளில் சிதைந்து போன உடல்கள் பல அடையாளம் காணக் கூடிய நிலையில் இருக்கவில்லை. 

இந்தச் சம்பவத்தில் ஷாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரனும் உயிரிழந்து விட்டார் என்றே புலனாய்வு அதிகாரிகள் கருதியிருந்தனர்.

பொலிஸ் பதிவுகள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிவுகளிலும் ஷாரா இறந்து விட்டதாகவே கூறப்பட்டிருந்தது.

ஆனால், சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் உடற்பாகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை வைத்து நடத்தப்பட்ட மரபணுச் சோதனையில் ஷாராவின் மாதிரி மட்டும் பொருந்தவில்லை.

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல் ஒரு ...

ஷாராவின் தாயார் மற்றும் குடும்பத்தினரிடம் பெறப்பட்ட மரபணு மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனைகள் அங்கிருந்து சேகரிக்கப்பட்ட எந்த மாதிரியுடனும் பொருந்தியிருக்கவில்லை.

இதனால், ஷாரா பிறந்த மருத்துவமனையில், குறித்த தினத்தில் வேறு குழந்தைகள் பிறந்தனவா என்று விசாரணைகள் நடத்தப்பட்டன.

சில வேளைகளில் குழந்தைகள் மாறியிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே இவ்வாறான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், குறித்த மருத்துவமனையில் அன்று ஒரே ஒரு பிரசவம் மாத்திரம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே தான் சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் ஷாரா உயிரிழக்கவில்லை என்ற முடிவுக்கு புலனாய்வாளர்கள் வந்துள்ளனர்.

இந்தநிலையில் விசாரணை அதிகாரிகளுக்கு புதிய தலைவலி ஆரம்பித்திருக்கிறது.

ஷாரா உயிரிழக்கவில்லை என்றால், அவர் எங்கே என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் ஒன்றில் தொடர்புடைய முக்கியமான ஒருவர் உயிர் தப்பியிருப்பதே, அரச புலனாய்வாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்தே தெரியவந்திருக்கிறது.

இது இந்த விசாரணைகளில் மிகப்பெரிய ஓட்டை இருப்பதை உறுதி செய்துள்ளது. 

அமெரிக்கா, இந்தியா, போன்ற பல நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் உதவிகள் பெறப்பட்டு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதும், கண்டறியப்படாத பல மர்மங்கள் இன்னமும் உள்ளது என்பதை அண்மைய சில சாட்சியங்கள், சம்பவங்களில் இருந்து உணர முடிந்திருக்கிறது.

அவ்வாறான ஒன்று தான் ஷாரா பற்றிய மர்மம்.

ஷாரா உயிருடன் இருந்தால் அவர் எப்படித் தப்பினார், அதற்கு யார் யார் உதவினார்கள், இப்போது எங்கே இருக்கிறார் என்று அடுக்கடுக்கான கேள்விகள் வருகின்றன.

இந்த விடயத்தில் புலனாய்வு அமைப்புகள் மற்றும் பொலிஸ் தரப்பு உள்ளிட்டவற்றுக்கிடையில் முரண்பாடான கருத்துக்கள் நிலவுவதாகவும் தெரிகிறது.

ஷாரா பற்றிய தகவல்களை கண்டறியும் முயற்சிகளில் புலனாய்வு அமைப்புகள் ஈடுபட்டுள்ள அதேவேளை, இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளும் சமநேரத்தில் நடந்து வருகின்றன.

எனவே, மாறி மாறி வெளியாகும் பல்வேறு தகவல்கள் குழப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கின்றன.

ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்துள்ள அரச புலனாய்வுச் சேவையில் பணியாற்றும் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன மஹீன்கந்த, தமக்கு தகவல் அளிப்பவர் மூலமாக கடந்த 6ஆம் திகதி ஷாரா உயிருடன் இருப்பது தொடர்பாக தகவல் கிடைத்தது என்று கூறியிருக்கிறார்.

அவர் மட்டக்களப்பு- மாங்காடு பகுதியில் மறைந்திருந்தார் என்றும், அதனை அறிந்து அங்கு சென்ற போது, ஷாரா நம்பப்படும் பெண்ணை கண்ட ஒருவரை சந்தித்ததாகவும் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் அதிகாலை 3 மணியளவில் மட்டக்களப்பு –கல்முனை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கப் வாகனம் ஒன்றில் ஷாரா என நம்பப்படும் பெண் இரண்டு ஆண்களுடன் ஏறிச் சென்றதைக் கண்டதாக அந்த நபர் கூறியதாகவும் சாட்சியமளித்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் அர்ஜூன மஹீன்கந்த.

அத்துடன் ஷாரா மன்னார் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்றும், அவர் தப்பிச் செல்வதற்கு ஷாராவின் மாமாவும், சகோதரரும் உதவியுள்ளனர் என்றும் அந்த அதிகாரி சாட்சியம் அளித்திருக்கிறார்.

ஷாரா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி பி.ரி.ஐ செய்தி நிறுவனம் கேள்வி எழுப்பிய போது, பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, அதனை உறுதி செய்ய மறுத்திருக்கிறார்.

இரண்டு பேரைக் கைது செய்திருக்கிறோம், ஆனால் ஷாரா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார் என்பதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேவேளை, மற்றொரு அரச புலனாய்வுச் சேவை அதிகாரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் அளித்துள்ள சாட்சியம் இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தச் சாட்சியம், ஷாரா இந்தியப் புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் வழங்குபவராக , இருந்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இந்திய புலனாய்வு அமைப்பு முன்கூட்டியே பலமுறை எச்சரிக்கைகளை அனுப்பியிருந்தது.

Map showing locations of attacks

அந்த எச்சரிக்கைகள் தாக்குதல் நடத்தப்படக் கூடிய இடங்கள் மற்றும் தாக்குதல் நடத்தப் போகும் நபர்கள் பற்றிய துல்லிமான தகவல்களை உள்ளடக்கியதாகவும் இருந்தன.

இந்திய புலனாய்வு அமைப்பின் அந்த எச்சரிக்கை இலங்கை அதிகாரிகளால் சரியாக கவனத்தில் கொள்ளப்படவில்லை.

தாக்குதல் முடிந்த பின்னர், இந்திய புலனாய்வு அமைப்புக்கு எவ்வாறு இந்த தகவல்கள் கிடைத்தன என்ற கேள்வி எழுந்தது.

இதுவரையில் அந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை. 

இலங்கை புலனாய்வு அதிகாரிகளுக்கு குறித்த தகவலை அளித்த இந்திய புலனாய்வு அமைப்பு எது என்பது போன்ற விபரங்களும் கூட இரகசியமாகவே பேணப்பட்டு வருகிறது.

எவ்வாறாயினும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான துல்லியமான விபரங்களை பெறும் அளவுக்கு, இந்திய புலனாய்வு அமைப்பு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உள்ளக வட்டத்துக்குள் ஊடுருவியிருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது.

சஹ்ரானின் மனைவி மற்றும் சஹ்ரானுக்கு நெருக்கமான நௌபர் மௌலவி ஆகியோரிடம்  நடத்தப்பட்ட விசாரணைகளில் இருந்து, இந்த தாக்குதல் தொடர்பாக உயர்மட்டத்தில் இருந்து சிலர் மாத்திரமே அறிந்திருந்தனர் என்பது உறுதியாகியிருப்பதாக அரச புலனாய்வுச் சேவை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

ஷாரா அவ்வாறு உள்ளகத் தகவல்களை அறியக் கூடியளவுக்கு நெருக்கமானவராக இருந்தார் என்பதையும், சஹ்ரானின் மனைவி உறுதிப்படுத்தியிருக்கிறார் என்றும் அந்த அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார்.

இந்தச் சூழலின் தான், இந்திய புலனாய்வு அமைப்புகளின் முகவராக ஷாரா இருந்தாரா, அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தான் இந்திய புலனாய்வு அமைப்பு இலங்கை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்ததா என்ற சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.

இதனால், இப்போது இந்திய புலனாய்வு அமைப்புகளின் தொடர்புகள், மற்றும் ஷாரா தொடர்பான தகவல்களைத் திரட்டி விசாரணைகளை முன்னெடுப்பதில், புலனாய்வு அமைப்புகள் இறங்கியிருக்கின்றன.

பெயர் வெளியிடப்படாத அரச புலனாய்வுச் சேவை அதிகாரியிடம், ஷாராவுக்கும், இந்தியப் புலனாய்வு அமைப்புக்கும் இடையில் உள்ள தொடர்புகள் குறித்து கேள்வி எழுப்பிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர், இந்திய புலனாய்வு அமைப்பு, தமது நடவடிக்கை முடிந்ததும் தமது முகவரான ஷாராவை காப்பாற்றியிருக்குமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அந்த புலனாய்வு அதிகாரி, அவர்கள் தீவிரவாத வலையமைப்புக்குள் அவரை புகுத்தியிருந்தால், அவரை அந்த நடவடிக்கைக்குப் பின்னர் பாதுகாப்பாக வெளியேற்றியிருப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

தாங்கள் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டாலும், அதில் தொடர்புபட்ட தமது சகாவை பாதுகாப்பாக வெளியேற்றும் திட்டத்தை வைத்திருப்போம் என்றும் அவர் உறுதியாக தெரிவித்திருக்கிறார்.

அவரது இந்த சாட்சியம் கிட்டத்தட்ட ஷாராவை ஒரு இந்திய புலனாய்வு முகவராக அடையாளப்படுத்துவதாகவே உள்ளது.

இப்போதைய நிலையில் ஷாராவையும் இந்திய புலனாய்வு அமைப்புகளையும் தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் உள்நோக்கம் கொண்டவையாகவும் இருக்கக் கூடும்.

தேர்தல் நேரத்தில் திருப்பங்கள், விளைவுகளை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான உத்திகள் கையாளப்படலாம்.

ஏனென்றால், பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியுள்ள மக்களின் கவனத்தை ஷாராவின் பக்கமும், இந்தியாவின் பக்கமும் திருப்புவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.

ஒருவேளை, ஷாரா இந்தியப் புலனாய்வு அமைப்பின் முகவராக இருந்தால், ஏன் அவரைக் கொண்டு இந்த விசாரணை வலையமைப்பு முழுவதையும் கண்டறிவதற்கு இந்தியா உதவ முன்வரவில்லை. என்ற கேள்வி இருக்கிறது.

புலனாய்வு தகவல்களைக் கொடுத்து முன்கூட்டியே எச்சரித்த இந்தியா, ஏன் இப்போது அந்த வலையமைப்பை உடைக்கத் தயங்க வேண்டும்?

அவ்வாறாயின், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான புலனாய்வு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இன்னமும் ஒரு இடைவெளி இருப்பதாகவே கருத வேண்டியும் இருக்கிறது.

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter