Night Club மையப்படுத்தி சட்டவிரோத நடவடிக்கை – வெளியான அதிர்ச்சித் தகவல் 

சுமார் 28 மில்லியன் ரூபா வரை பெறுமதிமிக்கதாக கருதப்படும் 5600 போதை மாத்திரைகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில்  தங்கியிருந்தவாறு,  நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெறும் களியாட்ட நிக்ழ்வுகள், இரவு நேர களியாட்ட வைபவங்களை மையப்படுத்தி இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய சட்ட விரோத போதை மாத்திரை விற்பனை வலையமைப்பின் இரு சந்தேக நபர்களே இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பு மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்த விஷேட நடவடிக்கைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், சந்தேக நபர்களிடமிருந்து 5,600 போதை மாத்திரைகளுக்கு மேலதிகமாக  2400 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்,  20 மற்றும் 29 வயதுகளையுடைய  மாபோல – வத்தளை மற்றும் அங்கொடை – கொத்தடுவ பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் நெறிப்படுத்தலில் இயங்கும், கொழும்பு மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறை பதிவு செய்து தங்கியிருந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஹோட்டலுக்கு வெளியே,  அந்த ஹோட்டலை அண்மித்த பகுதியில் வைத்து ஒருவர் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து 2400 மில்லிகிராம் ஹெரோயினும் 5500 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டதாக கோட்டை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவுடன் பங்கேற்ற பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

அந்த சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே, நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த நபர் ஒருவர் 100 போதை மாத்திரைகளுடன் மீட்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன்படியே மொத்தமாக 5600 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

இவை நட்சத்திர ஹோட்டல்களிலும் அதனை அண்மித்த பகுதிகலிலும் இடம்பெறும் கையாட்ட நிகழ்வுகள், இரவு நேர களியாட்ட விடுதிகள் போன்றவற்றை இலக்கு வைத்து இடம்பெறும் சட்ட விரோத வர்த்தகம் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதில் ஒரு மாத்திரை 2500 ரூபா முதல் 5000 ரூபாவரையிலான விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில், இந்த  போதை மாத்திரைகள்,  தற்போது சிறைச்சாலையில் உள்ள ஒருவர் ஊடாகவே வெளிநாட்டிலிருந்து கூரியர் சேவை ஊடாக வரவழைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந் நிலையில் சிறையில் உள்ள குறித்த நபருக்கு மேலதிகமாக, கூரியர் சேவை ஊடாக அதனை அனுப்பி வைத்ததாக கருதப்படும் வெளிநாட்டில் உள்ள வெளிநாட்டு பிரஜை ஒருவர் தொடர்பிலும் இந்த விசரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரின்  அலோசனைகளையும் பெற்றுக்கொண்டு, இதற்கு தேவையான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்து இவ்வாறான சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதன் ஊடாக பொலிஸாரின் கண்ணில் மண்ணை தூவலாம் என சந்தேக நபர்கள் அல்லது குற்றங்களில் ஈடுபடுவோர் நினைத்தாலும்,  தற்போது அது தொடர்பில் பொலிஸார் விளிப்பான நிலையிலேயே உள்ளதாகவும் அதனாலேயே இந்த போதை மாத்திரை வலையமைப்பை கைது செய்ய முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter