தமிழ்- சிங்கள புத்தாண்டை கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு கொண்டாடினோம்.
இந்த ஆண்டு புற்று நோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெயுடன் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாட வேண்டியுள்ளது.
மக்களை உயிருடன் வாழ வைக்காமல் எமனிடம் அனுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் கடமையாகியுள்ளது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
திஸ்ஸமகாராமையில் நடைபெற்ற பொது மக்களுக்கான நடமாடும் சேவையொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
“புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ஆயிரக்கணக்கான மெற்றிக் தொன் எடையுடைய தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்க்கு மாற்றீடுகளை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ளனர்.
இவற்றை திருட்டுத்தனமாக செய்துள்ளனர். புற்று நோயை ஏற்படுத்தக்கூடியது என சுகாதார பிரிவினரால் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் தடை செய்துள்ளனர்.
எனினும் இதனை நாட்டுக்கு கொண்டுவந்த நிறுவனங்கள் அவற்றை சுத்திகரித்து தரச் சான்றிதழ்களையும் கூட்டாக இணைந்து பெற்றுக்கொண்டுள்ளன.
மேலும் சுங்கத் திணைக்களமும் அவற்றை வெளியே கொண்டு வருவதற்கான அனுமதியை கொடுத்துள்ளது.
தற்போது அவை சந்தைக்கு வந்துள்ளன. தமிழ் – சிங்கள பண்டிகைக் காலத்தின்போது தேங்காய் எண்ணெயின் பாவனை அதிகமாகக் காணப்படும். இவ்வாறான நிலையில் மக்களை புற்றுநோய்க்காரர்களாக சாகடிக்கச் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நாட்டு மக்களை உயிருடன் வாழ வைப்பதல்ல, எமனிடம் அனுப்பி வைப்பதே தற்போதுள்ள அரசாங்கத்தின் பொறுப்பாகவுள்ளது.
இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த 69 இலட்சம் வாக்காளர்களும் பதிலளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழ்- சிங்கள புத்தாண்டை கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொண்டாடினோம். இந்த ஆண்டு புற்று நோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்யுடன் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாட வேண்டியுள்ளது” என்றார்.