ஸஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு அளுத்கமை சம்பவமும் காரணமானது -ரிஷாத் பதியுதீன்

சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள்வதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருந்த இனவாத சக்திகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் விளம்பரமாக தொடர்ந்தும் பாவித்து வருவதாகவும், இதிலுள்ள பின்புல சக்திகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அணியின் கொழும்பு மாவட்ட “இளைஞர் மாநாடு” முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் உயர்பீட அங்கத்தவருமான பாயிஸின் ஏற்பாட்டில் மட்டக்குளியில் நேற்று (28) நடைபெற்றபோது, பிரதம அதிதியாக கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் மேலும் கூறியதாவது, அரசியல் இருப்பை மீண்டும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே இனவாத சக்திகள் எங்களை மையமாக வைத்து, அரசியல் செய்து மீண்டும் ஆட்சியை பெற்றுக்கொண்டனர். சிறுபான்மை சக்திகளை ஒடுக்குவதும், அக்கட்சித் தலைமைகளின் குரல்வளையை நசுக்குவதும் அதன்மூலம் தமது இலக்கை அடைவதுமே இவர்களின் நீண்டகாலத் திட்டம்.

இனவாதத்தையும், இனக்குரோத சிந்தனையையும் முதலீடாகக் கொண்டே இவர்கள் இன்னும் அரசியலில் நீடிக்கின்றனர். நாட்டையோ மக்களையோ பொருளாதாரத்தையோ இவர்கள் பெரிதாகக் கருதவில்லை. அவைபற்றி எந்தக் கவலைகளும் இருப்பதாகவும் தெரியவில்லை.

அமைச்சர்கள் சிலர் தினந்தோறும் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் புனித வேதமான அல்குர்ஆன் பற்றியும் பொய்யான கருத்துக்களை அப்பாவி மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். தீவிரவாதத்தை இந்த நாட்டில் தூண்டுவதற்கு வித்திட்டவர்கள் இவர்கள்தான். ஸஹ்ரான் என்ற கயவனும், அவனது அடியாட்களும் மிலேச்சத்தனமான செயலை மேற்கொள்வதற்கு, அளுத்கமையில் இடம்பெற்ற சம்பவங்களும் காரணமாயிருந்தன என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மனித நாகரீகத்துக்கு அப்பாற்பட்ட இந்தப் படுபாதக செயலை முஸ்லிம் சமூகம் ஒருபோதுமே அங்கீகரிக்கவில்லை. இன நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் தமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும் இந்தச் சமூகம் தீவிரவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் ஒருபோதுமே துணைபோன வரலாறும் இல்லை. பேரினவாதிகளின் ஏஜண்டுகளே இந்த கொலைகாரர்களை உருவாக்க தூபமிட்டனர் என்ற உண்மையை, இனியாவது நல்லெண்ணத்தை விரும்புவோர் புரிந்துகொள்ள வேண்டும். உயிர்த்த ஞாயிறு அறிக்கையில் இந்த விடயங்கள் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

முஸ்லிம் இளைஞர்களை பொறுத்தவரையில், இது மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் செயற்பட வேண்டிய காலம். அவ்வாறான காலத்தின் கட்டாயத்தில் நாம் வாழ்கிறோம் என்றார். Metro News

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter