சுயஸ் கால்வாயில் சிக்கிய பாரிய சரக்கு கப்பல் மீட்கப்பட்டு தற்போது மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
எகிப்தின் கட்டுப்பாட்டிலுள்ள சுயஸ் கால்வாய் சர்வதேச சரக்கு வணிக பரிமாற்றத்தில் சுமார் 12 சத வீத பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்தளவுக்கு அதிகமான சரக்கு கப்பல்கள் இந்த வழியாக பயணிக்கின்றன.
நேற்று (29) பிடிக்கப்பட்ட செய்மதி ஊடான படம்.
இந்நிலையில், சீனாவிலிருந்து நெதர்லாந்து சென்ற பாரிய சரக்கு கப்பலான ‘எவர் கிவன்’ கடந்த செவ்வாய்க்கிழமை சுயஸ் கால்வாய் பகுதியில் சிக்கிக் கொண்டது. மணல் புயல் வீசியதன் காரணமாக மாலுமி வழிதெரியாமல் தடுமாறியதால், சகதியில் சரக்கு கப்பல் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து கப்பலிலிருந்து பாரம் குறைக்கும் பணிகள் இடம்பெற்றன. இழுவைப் படகுகள் மூலமாக மீட்புக் குழுவினர் இந்த கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்ட நிலையில் தற்போது அந்தப் பணி சாத்தியப்பட்டுள்ளது.