உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான ஸஹ்ரான் ஹாஷிமினால் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் மத்ரஸா பள்ளியில் பணிபுரிந்த இளைஞர்கள் இருவரைக் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் இருவரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு எட்படுத்துவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது , புத்தளம் பகுதியில் இயங்கிவரும் மத்ரஸா பள்ளி ஒன்றில் பணி புரிந்து வந்த இளைஞர்கள் இருவரை நேற்று ( 26)குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்யுமாறு சட்ட மா அதிபரினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமையவே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் மற்றும் மதுரங்குளி பகுதியைச் சேர்ந்த 26,27 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களால் செயற்படுத்தப்பட்டுவரும் , மேற்படி மத்ரஸா பள்ளியில் ஸஹ்ரான் ஹாஷிம் வகுப்புகளை நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளுக்காகவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். (செ.தேன்மொழி)