அடிப்படைவாத பிரசாங்களில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் மாத்தளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடிப்படைவாத பிரசாரங்களில் ஈடுபட்டமை, அடிப்படைவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நிதி திரட்டியமை மற்றும் சமூக வலைத்தளங்களில் அடிப்படைவாத கருத்துக்களைப் பரப்பியமை தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று (25) வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவர் 46 வயதுடைய மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவராவார். குறித்த சந்தேக நபர் கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரட் இராச்சியத்திலிருந்து நாட்டுக்கு வந்துள்ளார். அங்கிருந்து இணையதளங்கள் ஊடாக அடிப்படைவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளதோடு, இலங்கையில் அடிப்படைவாதத்தை பரப்பியவர் என்று தெரிய வந்துள்ளது.
அத்தோடு இலங்கையில் அடிப்படைவாதத்தை பரப்பி தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஐக்கிய அரபு இராச்சியத்தில் இவர் நிதி திரட்டியுள்ளமையும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இவர் மாத்தளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் 49 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பேஸ்புக் ஊடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் , அதனை நியாயப்படுத்தும் வகையிலும் வௌ;வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் இவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான ஸஹ்ரானுடன் தொடர்புடையவர் என்றும் தெரிய வந்துள்ளது. மட்டக்களப்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர் , கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதுபோன்று முன்னெடுக்கப்படும் வெவ்வேறு விசாரணைகளின் ஊடாக அடிப்படைவாதம் தொடர்பில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்பட்டு வருகிறோம்.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் அதேவேளை , அதனுடன் தொடர்புடையதும் மற்றும் அதையொத்த வேறு செயற்பாடுகளுடன் தொடர்புடையதுமான வௌ;வேறு விசாரணைகளின் போது இவ்வாறான தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன என்றார்.(எம்.மனோசித்ரா)