முஸ்லிம் அமைப்புகள் மீது தடை, புர்கா தடை, இஸ்லாமிய புத்தகங்களை இறக்குமதி செய்ய தடை, மத்ரஸாக்களுக்கு தடை என கடந்த ஓரிரு வாரங்களாக முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்த தடைகளே ஊடகங்களின் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்திருக்கின்றன. முஸ்லிம் சமய திணைக்களத்திற்கென்றே பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்ட 9 மாடிக் கட்டிடமும் பெளத்த சாசன அமைச்சுக்கென சுவீகரிக்கப்படவுள்ளது.
மறுபுறம் தீவிரவாத செயல்கள் மற்றும் அது தொடர்பான சிந்தனைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான நிலையங்களை ஸ்தாபிப்பது தொடர்பான வர்த்தமானியும் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருக்கிறது.
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 இல் கைது செய்யப்பட்டு 32 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு, பின்பு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலியும் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே அவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டும் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மையப்படுத்தியே ஹஜ்ஜுல் அக்பரும் அசாத் சாலியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் பல முஸ்லிம் பிரமுகர்களும் கைது செய்யப்படுவார்களோ என்ற அச்சமும் முஸ்லிம் வட்டாரங்களில் மேலோங்கியுள்ளது.
ஏலவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 2020 ஏப்ரல் முதலும் , கவிஞரும் ஜாமிஆ நளீமியா மாணவருமான அஹ்னாப் ஜெஸீம் 2020 மே முதலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முகநூல் பதிவொன்றுக்காக ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எழுத்தாளர் ரம்ஸி ராஸிக் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களும் இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கடியாக காலகட்டமாகவே அமையப் போகிறது என்பதையே இந்த நிகழ்வுகள் கூறிநிற்கின்றன. அவ்வாறெனில் இந்த சவால்களை எதிர்கொள்ள முஸ்லிம் சமூகம் எந்தளவு தயார்நிலையில் உள்ளது என்ற கேள்வி எழுகிறது.
முஸ்லிம் அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் அரசாங்கத்தின் கைப்பிள்ளைகளாக மாறி, சமூகத்திற்காக குரல் கொடுக்க முடியாத கையறு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். எதிரணியில் உள்ள ஓரிருவர் மாத்திரமே ஓரளவு அறிக்கைகளையாவது வெளியிடுகின்றனர். மறுபுறம் முஸ்லிம் சிவில் அமைப்புகளும் வலுவிழந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிவில் அமைப்புகளின் வீரியம் வெகுவாகவே குறைந்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகள் பகிரங்கமாக செயற்பட முடியாத அச்ச நிலை தோன்றியுள்ளது.
இந் நிலையில் தொடராக அமுல்படுத்த எத்தனிக்கப்படும் தடைகளைப் பார்த்துக் கொண்டு முஸ்லிம் சமூகம் மெளனம் காக்கப்போகிறதா அல்லது இந்த நாட்டின் அரசியலமைப்பின் மூலமும் சர்வதேச சட்டங்கள் மூலமாகவும் உரித்தாக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க சட்ட ரீதியாகவும் சாத்வீக ரீதியாகவும் போராடப் போகிறதா என்ற கேள்விக்கு உடன் விடை காணப்பட வேண்டும்.
இவ்வாறான சவால்களை தைரியமாக எதிர்கொள்ளத் தேவையான அரசியல் மற்றும் சிவில் பலத்தை இலங்கை முஸ்லிம் சமூகம் உடனடியாக கட்டியெழுப்ப வேண்டும். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் உரிமைசார் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்கின்ற, அதன் மூலம் தீர்வுகளைப் பெறக் கூடிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
ஜனாஸா அடக்கம் மற்றும் புர்கா தடை போன்ற விவகாரங்களில் முஸ்லிம்களுக்கு சாதகமான முடிவுகளை எட்டுவதில் சர்வதேசத்தின் பங்களிப்பே பெரிதும் உதவியுள்ளது. அதேபோன்று அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கும் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள அப்பாவிகளின் கைதுகளை தடுப்பதற்கும் விரைந்து செயற்பட வேண்டும். இன்றேல் முஸ்லிம் சமூகத்தின் மீதான அடக்குமுறைகள் தொடர்கதையாவதை தடுக்க முடியாது போய்விடும். – Vidivelli