புர்காவுக்கான தடை பற்றிய ஊடக செய்திகளின்போது புர்கா அணியாமல் நிகாப்- மாஸ்க் அணிந்த பெண்களின் போட்டோக்களை போட்டு இதுதான் புர்கா என்பதுபோல் செய்தி வெளியிடுவதன் மூலம் புர்கா என்றால் என்ன என்று பலருக்கும் தெரியவில்லை.
புர்கா என்றால் முகத்தை முழுவதும் மூடுவதாகும். கண்கள் திறந்திருந்தால் அதன் பெயர் புர்கா அல்ல. மாஸ்க் ஆகும் என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத், அரசின் புர்கா தடை தொடர்பிலான நிலைப்பாடு குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரபு வார்த்தையின் அர்த்தம் புரியாமல் ஊடகங்கள் புர்காவுக்கு தடை என்ற வார்த்தையை பாவிப்பதை தகவல் அமைச்சு தடை செய்ய வேண்டும். முகத்தை முழுவதும் மறைப்பதனை தடை செய்யும் அமைச்சரவை பத்திரமே அமைச்சர் சரத் வீரசேகராவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை என்பது நமது நாட்டுக்கு புதிதல்ல.
கடந்த மைத்திரி, ரணில், சஜித், ஹக்கீம் ஆட்சியில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ந் திகதி இந்தச் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அதே போல் இச்சட்டம் கொண்டுவர வேண்டும் என கடந்த அரசில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவில் அங்கம் வகித்த முஸ்லிம் காங்கிரஸும் அதற்கு அனுமதித்துள்ளது. அப்போதெல்லாம் மௌனமாக இருந்த முஸ்லிம்கள் இப்போது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு ஏசுவது அர்த்தமற்றதாகும்.
முஸ்லிம்களின் 98 சத வீதம் வாக்குப் பெற்ற கடந்த அரசு கொண்டுவந்த சட்டமே தொடராகவே இப்போது மீண்டும் கொண்டு வரப்படுகிறது.
முகத்தை முழுவதும் மூடும் தடை சட்டம் முஸ்லிம் சமூகத்துக்கு நன்மையே தவிர தீமை இல்லை.
ஆகவே, முகத்தை முழுவதுமாக மறைக்கும் தடைச்சட்டம் என்ற வார்த்தையை சகலரும் பயன் படுத்துவதே சரியானது. கண்கள் திறந்து முகத்தின் ஏனைய பகுதிகள் திறந்திருப்பதற்கு தடை சட்டம் இல்லை. மாறாக கண்களைத்தவிர அனைத்தையும் மறைக்க வேண்டும் என்றுதான் கொரோனா காரணமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இதனை அரபியில் நிகாப் என்றும் ஆங்கிலத்தில் மாஸ்க் என்றும் சொல்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.