அசாத் சாலி விவகாரம்: நீதிமன்ற உத்தரவு பெற பொலிஸார் நடவடிக்கை!

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அசாத் சாலியை விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் ஐவர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சிஐடி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த டி சொய்ஸாவின் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணைகளை குறித்த தனிப்படை முன்னெடுக்கவுள்ளது.

பொலிஸ் தலைமையகத்துக்கும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் கடந்த இரு நாட்களில் கிடைக்கப் பெற்றுள்ள 5க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை மையப்படுத்தி, விசாரணைகளுக்காக இந்த தனிப்படை அமைக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நாட்டின் பொதுச் சட்டத்துக்கு எதிராக அசாத் சாலி வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் நாட்டின் சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளதா, அந்தக் கருத்துக்கள் ஊடாக இனங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டுள்ளாரா என இந்த விசாரணைகளில் ஆராயப்படவுள்ளது.
அதன்படி அசாத் சாலியினால், தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் கருத்துக்கள் அடங்கிய ஊடக சந்திப்பு, ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அது தொடர்பிலான பதில்கள், அந்த ஊடக சந்திப்பு குறித்து கடந்த 13 ஆம் திகதி மீள விளக்கமளிக்கும் விதமாக அசாத் சாலி வெளியிட்ட கருத்துக்கள் என அனைத்து விடயங்களையும் இந்த தனிப்படை ஆராயவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த விசாரணைகளுக்கான விசாரணை திட்டம் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் இந்த விசாரணைகளுக்கு தேவையான நீதிமன்ற உத்தரவுகள் சிலவற்றை பெறவும் விசாரணையாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அசாத் சாலியை விசாரணைக்கு அழைப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த 9 ஆம் திகதி அசாத் சாலி, முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பிலும் நாட்டின் பொதுச் சட்டம் தொடர்பிலும் முன்வைத்த கருத்துக்கள் தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter