சீனாவின் வுகான் நகரில் கடந்த வருடம் December மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இவ் வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷ்யா, அமெரிக்கா, சீனா, UK போன்ற நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் பல நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
இந் நிறுவனங்களில் அமெரிக்காவின் மொடர்னா இங்க் ( moderna inc ) மருந்து நிறுவனம் கொரோனா தடுப்பூசியொன்றை உருவாக்கி இருந்தது. இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் முழுமையான இறுதிகட்ட பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மாடர்னா கொரோனா தடுப்பூசி 94.1% செயல்திறன் கொண்டது என உறுதியாகியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த தடுப்பூசியால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படவில்லையென்பதே.
மேலும், இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ் பாதிப்பால் மிகவும் தீவிரமாக உள்ள நபர்களிடம் 100% செயல்திறன் கொண்டதாக உள்ளது. மொத்தமாக 30 ஆயிரம் பேர்களிடம் நடத்தப்பட்ட இறுதிகட்ட பரிசோதனையின் மூலம் இத் தடுப்பூசி 94.1% செயல்திறன் கொண்டது என முடிவுகள் வெளியாகியுள்ளது.
மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 94.1% செயல்திறன் கொண்டுள்ளது என்பது உறுதியானதையடுத்து தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதியளிக்குமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் மொடர்னா நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமான FDAயிடமும், ஐரோப்பிய நாடுகளின் சுகாதாரத்துறையிடமும் தங்கள் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்குமாறு மொடர்னா விண்ணப்பித்துள்ளது.
அமெரிக்காவில் மொடர்னா மருந்து நிறுவனம் தாக்கல் செய்துள்ள விண்ணப்பம் குறித்து FDA ( Food and Drug Administration ) அமைப்பினால் எதிர்வரும் 17ம் திகதி கூட்டம் கூடியே முடிவெடுக்கப்படவுள்ளது. FDAயின் கூட்டத்தில் மொடர்னா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதியளிக்கும் பட்சத்தில் உடனடியாக அமெரிக்காவில் December மாதமே தடுப்பூசி அமெரிக்கர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 95% செயல்திறன் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ள பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவரசகால பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதியளிக்ககோரி பைசர் நிறுவனமும் அமெரிக்க அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.