ராஜகிரிய, ரோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளியாக தண்டனை விதிக்கப்பட்டு ஆயுட்தண்டனை அனுபவித்துவரும் 34 வயதுடைய டொன் ஸ்ரமந்த ஜூட் அந்தணி ஜயமக என்பவருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு மதத் தலைவர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர் அணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூலமான கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர்.
இவ் இளைஞருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்காக தலைமை ஏற்று செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இவ் இளைஞரின் பெற்றோர்களையும், உறவினர்களையும் ஜனாதிபதியுடன் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு இவ்விடயம் தொடர்பிலான விரிவான விளக்கமும் மேற்கொள்ளப்பட்டது.
ரத்தன தேரரால் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்துமூல கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் குறித்த சம்பவம் காதலர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை என்றும், ஸ்ரமந்த ஜூட் அந்தணி என்பவர் சிறைச்சாலையில் நன்னடத்தையுடன் செயற்பட்டதாகவும் சிறைச்சாலையில் இருந்தவாறே வெளிவாரி பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து தற்போது கலாநிதி பட்டப்படிப்புக்கு தேவையான கற்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆளுமை திறன், அறிவுடன்கூடிய இவ் இளைஞருக்கு மேற்படி விடயங்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது நியாயமானதும் மனிதாபிமான ரீதியிலான விடயம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று புத்த பகவானின் போதனைகளுக்கமைய கருணையும் இரக்கத்துடனும் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அத்துரலியே ரத்தன தேரர் ஜனாதிபதிக்கு வலியுறுத்தியுள்ளார்.
சங்கைக்குரிய பத்தேகம சமித்த தேரரும் இவ் இளைஞருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது குறித்து வலியுறுத்தியுள்ளதுடன், இவ் இளைஞர் சிறந்த பிரஜையாகவும் கல்விமானாகவும் எதிர்காலத்தில் செயற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதை தன்னால் யூகிக்க முடியுமென்றும் அதன் காரணத்தினால் இரக்க மனதுடன், ஸ்ரமந்த ஜூட் அந்தணிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் பரிசீலித்து பார்க்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
கலாநிதி சங்கைக்குரிய கெரதேவல புண்ணியரத்தன நாயக்க தேரர் எழுத்து மூலமான கோரிக்கையினூடாக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் இளைஞர், குறிப்பிட்ட குற்றத்தை தவிர்த்து வேறு குற்றங்கள் புரியாததாலும், கல்விகற்று, புனர்வாழ்வு பெற்று, சிறந்த பிரஜையாகுவதற்கான கனவு காணும் கல்வி கற்ற இளம் சிறைக் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி கருணை உள்ளத்துடன் கவனம் செலுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் சங்கைக்குரிய பலங்கொட புத்தகோஷ தேரரும் இவ்வாறான படித்த இளம் சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது முக்கியமான விடயம் என ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளார்.
தென் மாகாண கத்தோலிக்க ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க, ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இளம் புனர்வாழ்வுக்குட்பட்டுள்ள கற்ற சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுவது சம்பந்தமாக அவர் தனது ஆசீர்வாதம் உள்ளதாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரிவித்திருக்கின்றார்.
முன்னாள் உயர் நிதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க ஜனாதிபதி அவர்களுக்கு இந்த வழக்கு சம்பந்தமாக விரிவாக விடயங்களை உள்ளடக்கிய கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த ஸ்ரமந்த ஜூட் அந்தணி என்பவர் தற்போது சுமார் 15 வருடங்கள் சிறையில் இருப்பதாகவும், அவர் சிறைச்சாலையில் இருக்கின்றபோது இலண்டன் பல்கலைக்கழகத்தில் பொருளியல் மற்றும் நிதி சம்பந்தமாக வெளிவாரி பட்டப்படிப்பை நிறைவு செய்து கலாநிதி பட்டப்படிப்புக்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு கற்கை ஒன்றை தொடர்ந்து வருவதாகவும், அவரது கல்வி சம்பந்தமாக கருத்திற்கொண்டு அவர் சிறையில் கழித்திருக்கும் தண்டனை காலத்தையும் கருத்திற்கொண்டு அவருக்கு மன்னிப்பு வழங்குவது நியாயமானது எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் சட்டத்தரணி மகேஷ் மடவெல, சட்டத்தரணி நாலனி மனதுங்க, சட்டத்தரணி நில்ரூக் இகலகத்ரிகே, சட்டத்தரணி குமுது நாணயக்கார ஆகியோரும் காலி வெலிவத்த விஜயானந்த விகாரையின் விஜயானந்த சமூக சேவை அபிவிருத்தி மன்றம், உனவட்டுன ரூமஸ்ஸல நவ ஜீவன அமதியாப ஹண்ட ஆகிய சிவில் அமைப்புகளும் ஸ்ரமந்த ஜூட்டின் பெற்றோரும் மனிதாபிமான அடிப்படையில் அவரது நன்நடத்தையால் சுதந்திர பிரஜையாக எதிர்காலத்தில் சமூகத்திற்கும் நாட்டுக்கும் செய்யக்கூடிய நற்பணிகளையும் கருத்திற்கொண்டு அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.
அதேபோன்று அமைச்சரவை அங்கீகாரத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதியரசர்களைக் கொண்ட மூவர் அடங்கிய விசேட குழுவொன்றினால் சிறைச்சாலையில் ஸ்ரமந்த ஜூட் அந்தணியின் நன்நடத்தை காரணமாக அவருக்கு வழங்கப்பட்டுள்ள மரணதண்டனையை ஆயுட் தண்டனையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், இது சம்பந்தமாக நீதி அமைச்சின் மூலம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவொன்றின் மூலம் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் கருத்துக்களும் ஜனாதிபதியினால் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு ஸ்ரமந்த ஜூட் அந்தணியின் நடவடிக்கைகள் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்திடமிருந்தும் அறிக்கையைப் பெற்று ஏனைய சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் மூலமும் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களையும் ஜனாதிபதி கருத்திற் கொண்டு செயற்பட்டிருந்தார்.
இந்த குற்றம் இடம்பெற்ற 2005ஆம் ஆண்டு ஸ்ரமந்த ஜூட் அந்தணி என்பவர் 19 வயது இளைஞராக இருந்ததும் இந்த நிகழ்வு கொலை ஒன்றை மேற்கொள்ளும் எண்ணத்தில் இடம்பெற்ற ஒன்று அல்ல என்பதும், திடீர் கோபத்தின் அடியாக இடம்பெற்ற ஒன்று என்ற விடயத்தையும் குறித்த இளைஞர் சிறைச்சாலையில் இருந்த சுமார் 15 வருட காலப் பகுதியில் நற்செயல்களில் ஈடுபட்டு தனது உயர் கல்வி நடவடிக்கைகளையும் நிறைவு செய்து கலாநிதி பட்டப் படிப்பு வரை கல்வி பெற்றுக்கொள்வதற்கு பட்டப்பின் படிப்பு கல்வி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்ததும் அவர் கல்வி மற்றும் அனுபவங்களில் முதிர்ச்சியையும் பெற்று புனர்வாழ்வளிக்கப்பட்டிருப்பதும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த குற்றம் தவிர்ந்த வேறு எவ்விதமான குற்றங்களிலும் இதற்கு முன்னர் ஈடுபடாத ஒருவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 34 வயது இளைஞரான அவருக்கு சிறந்த கற்ற ஒரு இளைஞராக நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய இயலுமையையும் உலகில் வேறு நாடுகளிலும் இவ்விதமாக சிறைக் கைதிகள் சம்பந்தமாக மனிதாபிமான அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதனையும் கருத்திற்கொண்டு ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஸ்ரமந்த ஜூட் என்பவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்தார்.
(ஜனாதிபதி ஊடக பிரிவு)