கொரோனாவால் மரணிப்பவர்களின் இறுதிக்கிரியைக்கு பெட்டியை பெற்றுக்கொள்ள வசதி இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கின்றோம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கையில், கொவிட் மரணங்களில் அதிகமானவை கொழும்பிலேயே இடம்பெற்றிருக்கின்றன.
இவ்வாறு மரணிப்பவர்களை தகனம் செய்வதற்காக கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் 58ஆயிரம் ரூபா அறவிடப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்தி வெளியிடப்படுகின்றது. இதன் உண்மை நிலை என்ன என கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொவிட் காரணமாக ஒருவர் மரணித்தால் அதனை தகனம் செய்வதற்கான செலவினங்களை மரணித்தவரின் குடும்பமே மேற்கொள்கின்றது.
குறிப்பாக சடத்தை எந்தவகையான பெட்டியை பெற்றுக்கொள்வது, எங்கிருந்து பெற்றுக்கொள்வது போன்ற விடயங்களை அந்த குடும்பமே மேற்கொள்கின்றது.
இறுதிக்கிரியை மேற்கொள்ள பெட்டியை பெற்றுக்கொள்ள வசதி இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க நன்கொடையாளர்களுடன் கதைத்து தேவையான வசதிகளை செய்துகொடுக்கின்றோம் என்றார்.