ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வருகை பற்றி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை!

ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் நேற்று 21.10.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். சமயத்தலைவர்களை சந்திக்கும் தொடரிலேயே அவர் ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதன் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 1924 ஆம் ஆண்டு இஸ்தாபிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். நீங்களும் இங்கு வந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.

எந்தவொரு அரசியல் சாயத்தையும் பூசிக் கொள்ளாத எமது இந்நிறுவனம் அவ்வப்போது ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுக்கு ஒத்துழைத்து வந்துள்ளது. அவ்வாறே நாட்டில் சகல சமூகத்தவர் மத்தியிலும் சமாதானமும் சகவாழ்வும் மலர தன்னாலான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.

எமது நிறுவனம் இந்நாட்டின் வளர்ச்சிக்காக தன்னாலான பல பணிகளை செய்து வருகின்றது. குறிப்பாக சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தவும் சகவாழ்வை கட்டியெழுப்பவும் பல முயற்சிகளை செய்து வந்திருக்கின்றது. அத்துடன் தீவிரவாத, வன்முறை மற்றும் வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை ஜம்இய்யா மேற்கொண்டு வந்துள்ளது. இவற்றுல் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தீவிரவாதத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டுப் பிரகடனம் குறிப்பிடத்தக்கதாகும்.

எமது தாய் நாட்டின் வளர்ச்சிக்கு உங்களது தந்தை முன்னாள் ஜனாதிபதி பிரமேதாச அவர்கள் பாரிய பங்காற்றியுள்ளார். அந்த வகையில் தொடரான அரசியல் பாரம்பரியத்தை கொண்ட நீங்கள் நாம் அனைவரும் இலங்கையராவர் என்ற உணர்வோடு உங்கள் சகல முயற்சிகளையும் அமைத்துக் கொள்வீர்கள் எனவும், இதனை உங்களது இலட்சியமாக எடுத்துக் கொள்வீர்கள் என்றும் எதிர்ப்பார்க்கின்றேன். இந்நாட்டில் சகல சமூகங்களும் ஐக்கியமாக வாழவும், பொருளாதாரம் உட்பட சகல துறைகளிலும் இந்நாடு முன்னேற்றம் அடையவும் எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிக்க வேண்டுகிறேன் என்று தனதுரையை முடித்தார்.

இதனை தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது தேர்தல் தொடர்பான கொள்கைகளில் சிலதை எடுத்துரைத்ததுடன் தான் இன, மத பேதமின்றி நாட்டு மக்களுக்கு சேவை செய்து வருவதாகவும் தொடர்ந்தும் அதே முறையில் சேவைகளை முன்னெடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தனது திட்டங்களை வகுப்பதாகும் தெரிவித்தார்.

அதே போன்று இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் பேச்சுக்கள் யாவற்றையும் தாம் இந்நாட்டில் தடை செய்ய போவதாகவும், அனைத்து இனங்களையும் ஒற்றுமைப்படுத்துவதினூடாக நாம் இலங்கையர் என்ற உணர்வோடு வாழ வழிவகுப்பதாவும் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப செயலாளர்களில் ஒருவரான அஷ்-ஷைக் முர்ஷித் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாலர் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பௌஷி, ரவூப் ஹகீம், றிஷாத் பதீயுத்தீன், முஜீபுர் ரஹ்மான், மரிக்கார் ஆகியோரும் இன்னும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter