ஹக்கீமும், ரிஷாத்தும் பொறுப்பு கூறவேண்டும்! முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா செவ்வி

தமது அரசியல் இருப்புக்காக இனவாதத்தினை கையிலெடுத்த ரவூப் ஹக்கீமும், ரிஷாத் பதியுதீனும் முஸ்லிம்களை ஏனைய சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்தி சில பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர். 

ஆகவே முஸ்லிம் சமூகத்திற்கு அவர்களே பொறுப்புக்கூற வேண்டியவர்களாக உள்ளனர் என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.  

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- அரசியலிலில் இருந்து முழுமையாக விடைபெற்று விட்டீர்களா?

பதில்:- இல்லை, நான் தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளராக இருக்கின்றேன். அரசியலில் எனது ஈடுபாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஆனால் தேர்தல் அரசியலிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்கின்றேன்.

கேள்வி:- அமைச்சரவை அமைச்சராக இருந்த நீங்கள் தேர்தல் அரசியலிலிருந்து திடீரென ஒதுங்கியமைக்கான காரணம் என்ன?

பதில்:- நான் சட்டத்துறை சார்ந்த பின்னணியைக் கொண்டவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது துறைசார் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் காரணமாக சொற்பகாலம் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதென்று தீர்மானம் எடுத்தேன். 

எனினும் சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக எனது செயற்பாடுகள் தொடர்கின்றன. சுதந்திரக்கட்சி அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி என்ற வகையில் அரசாங்கத்தின் சுபீட்சமான எதிர்காலம் நோக்கிய செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவினை வழங்கி செயற்பட்டு வருகின்றேன். மக்கள் சேவையையும் தொடருகின்றேன்.

கேள்வி:- கடந்த தேர்தலில் உங்களைப் போட்டியிட வைப்பதற்கும் பின்னர் பாராளுமன்ற அரசியலில் உள்வாங்குவதற்கும் கடுமையான பிரயத்தனம் செய்யப்பட்டமை உண்மையா?

பதில்:- ஆம், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுமாறு வெகுவாக வலியுத்தப்பட்டது. அதன் பின்னரும் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதற்காகவும் பல அழைப்புக்கள் விடுக்கப்பட்டன. இருப்பினும் நான் எனது தனிப்பட்ட தீர்மானத்தில் உறுதியாக இருந்தேன். 

கேள்வி:- முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கம் என்பது இஸ்லாமிய மதத்தின் அடிப்படயில் நடைபெறுகின்ற விடயமொன்றாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மரணிக்கும், முஸ்லிம்களின் உடல்கள் துரதிஷ்டவசமாக தகனம் செய்யப்படுகின்றன. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டியது அனைத்து முஸ்லிம்களின் கடமையாகின்றது. 

அவ்வாறிருக்கையில் முஸ்லிம்களை தம்பக்கம் ஈர்ப்பதற்காகவும், முஸ்லிம் அரசியலில் தமது இருப்பினை நிலைப்படுத்துவதற்காகவும் தற்போது ஜனாஸா நல்லடக்க விடயம் அரசியலாக்கப்பட்டுள்ளது. இதனால் நிலைமைகள் மென்மேலும் மோசமடைந்துள்ளன.  உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைவாக இலங்கையில் முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இவ்வி;டயம் சம்பந்தமாக ஆராய்வதற்கு சுகாதார தொழில்நுட்பக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் அனைவரும் அரசியல் பேதங்களை துறந்து ஒன்றிணைந்து ஒரே குரலில் சமூகத்தின் பாரம்பரிய உரிமைக்காக செயற்பட வேண்டும். தொடர்ச்சியாக உரிய தெளிவுபடுத்தல்களைச் செய்ய வேண்டும். முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் முட்டிமோதி தீர்வுகளைப் பெறமுடியாது. 

கேள்வி:- சுகாதார தொழில்நுட்ப குழுவானது தற்போது நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பில் கரிசனை கொள்கின்றதல்லவா?

பதில்:- உலக சுகாதார ஸ்தாபனத்தின் விதிகளை சுட்டிக்காட்டுகின்ற போது அண்மைய நாட்களில் நிலத்தடி நீர் மாசடைதல் என்ற விடயத்தினை முன்வைத்து வாதப்பிரதிவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சைகள் வைத்தியசாலைகளில் வைத்து அளிக்கப்படுகின்றன. 

அதேபோன்று, தொற்றாளர்கள் தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அச்சந்தர்ப்பங்களில் அவர்களின் கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் அனைத்துமே கங்கையிலும், கடலிலும், நிலத்திற்கு கீழும் தான் செல்கின்றன என்ற விடயத்தினை சுட்டிக்காட்டி பதில் தர்க்கம் செய்ய முடியும். ஆனால் வாதப்பிரதிவாதற்களை விடவும் சுமுகமான பேச்சுவார்த்தைகள் மூலமாக இந்த விடயத்திற்கு தீர்வினை எட்டுவதே சிறந்ததாகும். 

கேள்வி:- அரசாங்கத்தினுள் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதா? 

பதில்:- ஆளும் தரப்பில் மூன்று முஸ்லிம் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். அவர்களும் சமூகம் சார்ந்து பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளர்கள். அதற்காக அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அரசியல் காரணங்களுக்காக அவர்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமை கவலையளிக்கும் விடயமாகும். 

கேள்வி:-முஸ்லிம்களின் அதிகமான பிரதிநிதிகள் எதிரணியில் இருக்கின்றபோது நீங்கள் குறிப்பிட்டவாறு ஓரணியில் திரள்வது சாத்தியமாகுமா?

பதில்:- முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை பார்த்தீர்களானால், மர்ஹ{ம் அஷ்ரப் ஆரம்பகர்த்தவாக இருந்தார். பின்னர் அதாவுல்லா, தொடர்ந்து ஹக்கீம், ரிஷாத், ஹிஸ்புல்லா என்று பிளவுகளே அதிகரித்தன. இது முஸ்லிம்களுக்கு பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளன. 

சிறுபான்மை அரசியலை சிறப்பாக முன்னெடுத்தவர்களில் ஒருவரான சௌமியமூர்த்தி தொண்டமான், ‘பெரும்பான்மையுடன் இணைந்து சிறுபான்மையினர் பயணித்து தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதே மதிநுட்பமான சிறுபான்மை அரசியலாக இருக்கும்’ என்று கூறியிருக்கின்றார். 

அதேநேரம், ஹக்கீமும், ரிஷாத்தும் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களின் போது தமது இருப்புக்காக இனவாதத்தினை கையிலெடுத்தார்கள். முஸ்லிம்களை ஏனைய சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்தினார்கள். இதனால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் சில தீர்க்க முடியாத அளவுக்கு தற்போது நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு ஹக்கீமும் ரிஷாத்தும் பொறுப்புக் கூற வேண்டும். 

அதுமட்டுமன்றி, 20ஆவது திருத்தச்சட்ட நிறைவேற்றப்பட்டபோது அவர்கள் இருவரும் அரசியல் நாடகமாடியுள்ளனர். அவர்கள் இருவரும் திருத்தச்சட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்தபோதும் அவர்களுடைய கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்துள்ளனர். இதன்மூலம் ஹக்கீமும், ரிஷாத்தும் சமூகம் சார்ந்த அரசியலை பின்பற்றவில்லை என்பது வெளியாகியுள்ளது. அவர்களிடத்தில் கொள்கை ரீதியான அரசியல் காணப்படவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது. 

அவர்கள் இருவரும் தமது எதிர்காலம் சார்ந்தே சிந்தித்துள்ளனர். தாங்கள் எவ்வாறு ‘தீர்மானிக்கும் சக்திகளாக’ நீடிக்க முடியும் என்றே கருதியிருக்கின்றார்கள். இதனால் தான் முஸ்லிம்களின் நிலைமை தற்போது மோசமடைந்துள்ளது. 

கேள்வி:- பௌத்த, சிங்கள பெரும்பான்மையின் ஆதரவுடன் ஆட்சியாளர்கள் தெரிவாகியுள்ளமையால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்ற நிலைமையொன்று காணப்படுவதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- ஜனாதிபதி உட்பட அரசாங்கம் சிங்கள பௌத்தர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆகவே அதற்குரிய முக்கியத்துவம் அவர்களால் வழங்கப்படும். இருப்பினும், சகல மக்களுக்கும் தான் ஜனாதிபதியாக இருப்பதுடன் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் சமத்துவமாக வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்துவேன் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். அக்கூற்றின் மீது எனக்கு பெருநம்பிக்கை உள்ளது. இருப்பினும், வடக்கு கிழக்கில் இனவாதம் தலைதூக்குகின்ற தருணங்களில் எல்லாம் தென்னிலங்கையிலும் இனவாதம் வலுக்கின்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

கேள்வி:- உங்களினதும், சுதந்திரக்கட்சியினதும் அரசியல் எதிர்காலம் எவ்வாறிருக்கப்போகின்றது?

பதில்:- நான் சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக தொடர்ந்தும் செயற்படுவேன். எதிர்காலத் தேர்தல்களின்போது உரிய தீர்மானங்களை எடுப்பேன். சுதந்திரக்கட்சிக்கு பல நெருக்கடிகள் இருந்தபோதும் 14ஆசனங்களை கைப்பற்றி பாராளுமன்றில் மூன்றாவது அரசியல் சக்தியாக உள்ளது. எதிர்காலத்தில் கட்சி மீள கட்டியெழுப்பபட்டு மேலும் முன்னேற்றங்களை காணும்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter