கீழே ஒப்பமிட்டுள்ள பெண்களாகிய நாம், உயிர்கள் காவுகொள்ளப்படும், நிலையற்ற இக்காலப்பகுதியில் முஸ்லிம் சகோதர சகோதரிகளின் சார்பாக இம்மடலை எழுதுகின்றோம். கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் அதனால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகின்றவர்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் உடனடித் தேவை கருதி இம்மடல் எழுதப்படுகின்றது.
கொவிட் 19 வைரசானது நம் அனைவரையும் சமமாக தாக்குவதில்லை. இதன் பரவலைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் ஏற்கனவே காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை இன்னும் உக்கிரமாக்கியுள்ளன. அவ்வாறு அளவிற்கொவ்வாத, நியாயமற்ற, தேவையற்ற வகையில் பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழுவே எமது முஸ்லிம் சகோதர சகோதரிகளாவர். அவர்கள் இவ்வைரசினால் பாதிக்கப்படுதல், இனவாத நோக்கில் புறவுருப்படுத்தப்படுதல் போன்ற அச்சங்களைத் தாண்டி உயிரிழந்தால் மறுக்கப்படும் இறுதிக்கிரியைகள் தொடர்பான அச்சம் காரணமாகவும் இந்த உயிர்க்கொல்லி நோயின் கொடும்பிடியில் வாழ திணிக்கப்பட்டுள்ளனர்.
நீங்கள் சந்தேகமற அறிந்துள்ள வகையில் இறந்த உடலை எரியூட்டலானது இஸ்லாத்தின் அடிப்படை கற்பித்தல்களுக்கு முரணானது. இறப்பின் பின் ஆன்மாவும் உடலும் இணைந்தே இருக்கும் என நம்பும் இஸ்லாம், எரியூட்டலை இறந்தவர்களின் தூய்மை கெடும் செயலாகப் பார்க்கின்றது. நோயுற்றவர்களும் முதியவர்களும் எவ்வளவு அச்சத்துடன் வாழ்கின்றார்கள் என்பதை எமது முஸ்லிம் சகோதர சகோதரிகள் மூலம் அறியக்கிடைக்கின்றது. வேறொரு நோயின் காரணமாக இறக்க நேரிட்டாலும் தங்களின் உடல்கள் மார்க்க மற்றும் கலாசார ரீதியில் அன்றி எரியூட்டப்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவர்களை சூழ்ந்துள்ளது.
கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வாறு கொண்டுசெல்லப்பட்டு தங்கள் குடும்பங்களிலிருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்பதை நாங்கள் கேள்விப்படுகின்றோம். அந்தக் குடும்பங்கள் நோயுற்றவரை அணுக பகுதியளவில் அல்லது முழுதாக மறுக்கப்படுகின்றன. தனியார் ஆடம்பர தனிமைப்படுத்தல் நிலையங்களில் கழிக்க வசதியற்ற குடும்பங்கள் தங்கள் சொந்தங்களினின்றும் தொலைவிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களாவர். இருந்தும், இவர்கள் முகங்கொடுக்கும் இவ்வாறான நிதியியல் நெருக்கீடுகளைத் தாண்டி, கொவிட் 19 ஆல் இறந்த அங்கத்தவர்களைக் கொண்ட முஸ்லிம் குடும்பங்கள் பிணப்பெட்டிகளுக்காக பல ஆயிரங்களை செலவளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இறந்த உடல்கள் துணிகளால் போர்த்தப்பட்டு புதைக்கப்படும் வழக்கம் கொண்ட முஸ்லிம் சமூகத்தில் பிணப்பெட்டிகள் வாங்கும் வழக்கம் காணப்படுவதில்லை.
சுகாதார நடைமுறைகளைப் பேணி, இறந்தோருக்கு இறுதி மரியாதையை செலுத்த முடியாத அதே வேளையில், அவர்களின் மார்க்கத்துக்கு முரணான வகையில் முன்னெடுக்கப்படும் ஒரு வழக்கத்தை அவர்களுக்கு திணிப்பதன் மூலம் இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் எதிர்கொள்ளும் கடுந்துயரை நாம் விளங்கப்படுத்த வேண்டியதில்லை.
இவ்வாறான துயரை முஸ்லிம் சமூகத்தின் மீது திணிப்பதற்கான எந்த தேவையும் இல்லை. அதிக உயிரிழப்புகளை சந்தித்த இத்தாலி, சிறிய நிலப்பரப்பைக் கொண்ட மாலைதீவுகள் போன்ற நாடுகளில் இறந்த உடல்களை புதைப்பதற்கெதிரான எவ்வித கேள்விகளும் எழுப்பப்படவில்லை. அவர்கள் ஏனைய நோய்களைப்போலவே வழமையான நடைமுறைகளுடன் மேலதிக முற்காப்பு நடவடிக்கைகளைக் கைக்கொண்டு இறந்த உடல்களுக்கான கடமைகளை நிறைவேற்றுகின்றனர். உலக சுகாதார நிறுவனமானது புதைப்பு எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அதில், இறுதிக்கிரியைகள் முழுவதுமாக “இறந்தவர்களின் கண்ணியம், அவர்களின் கலாசார மற்றும் மார்க்க வழமைகள், குடும்பங்கள் என்பன மதிக்கப்பட்டு பாதுகாக்கப்ப வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை சுகாதார அமைச்சின் பரிந்துரைகளில் கொவிட் 19ஆல் இறந்தவர்களின் இறுதிக்கிரியைகளை நிறைவேற்றுவதற்கான பரிந்துரைகளில் நிலத்தடி நீர் மாசடைவதைக் குறைத்து இறந்த உடல்களை எவ்வாறு புதைப்பது என்பதற்கான பாதுகாப்பு பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முதலாவது எரியூட்டல் முறையற்று உத்தரவிடப்பட்டு நடத்திமுடிக்கப்பட்டதன் பின்னரே உள்நாட்டு சுகாதார பரிந்துரைகள் சீர்திருத்தப்பட்டு தகனம் கட்டாயமாக்கப்பட்டது என்பதை கலக்கத்துடனும் அதிர்ச்சியுடனும் குறிப்பிட்டுக்கொள்கின்றோம். ஆட்கொல்லி நோய் ஒன்றின் பரவலை தடுப்பதற்காக உடனடி முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளதை நாம் விளங்கிக்கொள்கின்றோம். இருந்தும், SARS-CoV-2 வைரஸ் ஆனது (கொரோனா வைரஸ்) இறந்த உடல்களில் இருந்து பரவாது என்பதும் அது நிலத்தடி நீருக்கு குறைந்த அல்லது எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதும் விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்த முன்னர் இவ்வாறான விஞ்ஞான ஆய்வுகள் கருத்திலெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
புத்தாகமத்தின் கற்பித்தலின் படி, இறந்த உடல்களை அணுகும் முறைகளுக்கும் இறந்தவர்களின் நலன்களுக்கும் எந்த நேரடியான தொடர்புமில்லையெனினும் நம்மீது இரக்கம் கொண்ட அவர்களை மரியாதைக்குறைவாக நடத்துவதை அது அனுமதிக்கமாட்டாது. விருப்பத்துக்குரியவர்கள் பிரியும் போது உயிரோடு இருப்பவர்களுக்கு ஏற்படும் வலியை நாம் உணர்ந்துள்ளோம். எனவே அவர்களுக்காக நல்லுணர்வை (மெத்தா) நாடுவது உயிரோடு இருப்பவர்களின் பொறுப்பாகும். மார்க்க அனுஷ்டானங்கள், இறுதிக்கிரியைகள் என்பன மனிதாபிமானத்துடனும் சக மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும், குறிப்பிட்ட சமூகங்கள் பொது சுகாதார நோக்கத்துக்காக மேலதிக சுமையை தாங்கிக்கொள்ள கட்டாயப்படுத்தப்படக் கூடாது.
இறந்த உடல்களை புதைத்தல் தொடர்பான செயற்குழு முடிவுகளை துரிதப்படுத்தவும் உங்கள் அரசியல் பற்றுறுதியைத் தாண்டி பாராளுமன்ற உறுப்புரிமையைப் பயன்படுத்தவும் இறந்த உடல்களின் கட்டாய தகனத்துக்கு எதிராகக் கேள்வியெழுப்பவும் நாம் சுகாதார அமைச்சர் மற்றும் ஏனைய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களான உங்களைத் தூண்டுகின்றோம். முஸ்லிம் சகோதர சகோதரிகளின் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த தேவையற்ற இடர் மற்றும் அச்சத்தை நீங்கள் முடிவுக்குக் கொண்டு வருவீர்கள் என்ற எதிர்பார்ப்பில் நாம் இதனை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
மேற்படி கோரிக்கையில் மூவினங்களையும் சேர்ந்த 2000 இற்கும் அதிகமானோர் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.