வீதியோர சமிக்ஞை விளக்குகளில் இருந்தவாறே யாசகம் பெறுவதும் வழங்குவதும் குற்றம் என்றும் அவ்வாறு எவரும் ஈடுபடுவார்களேயானால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வாகன போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவிப்பதன் காரணமாகவும் அநேகமானவர்கள் உண்மையிலேயே யாசகர்கள் அல்ல என்பதாலும் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் உண்மை இல்லாமல் இல்லை. கடந்த காலங்களில் குழந்தைகளைக்கூட திருடி யாசகத்துக்கு பயன்படுத்தியது மற்றும் இதனையே ஒரு தொழிலாக மேற்கொள்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அதுமாத்திரமன்றி யாசகத்தில் ஈடுபட்ட சிலரது வங்கிக் கணக்குகளில் பெருந்தொகைப் பணம் ஆச்சரியம் அளிக்கும் வகையில் வைப்பிலிடப்பட்டிருந்தமையும் கூட அண்மையில் கண்டறியப்பட்டது.
பாதாள உலகக் கோஷ்டியினர் மற்றும் போதைவஸ்துக்களை பயன்படுத்தும் பலர் இவ்வாறு தமது தேவைக்காக யாசகர்களைப் பயன்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டது.
இவற்றுக்கு அப்பால் உண்மையிலேயே பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், வறுமையால் வாடுபவர்கள், வயோதிபர்கள், உழைத்து வாழ முடியாதோர் என்ற மற்றுமொரு பிரிவினரும் இருக்கின்றனர் என்பதை மறந்து போகக் கூடாது.
இதன் காரணமாகவே இவர்கள் வீதிக்கு வந்துள்ளனர். அதுவும் தற்போதைய நிலைமையில் இவ்வாறானவர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக மாறியுள்ளது.
எனவே, வேறு வழியின்றி யாசகம் பெற வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் குறித்து சிந்திப்பது அவசியம்.
அவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தமது இறுதிக் காலத்தில் நிம்மதியாக வாழ தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
இன்றைய சூழலில் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் நோக்க இயலாது.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெரும் எண்ணிக்கையான வயோதிபர்கள் வீதியோரங்களில் படுத்துறங்குவதுடன் பிறர் கொடுப்பதை வாங்கி உண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறானவர்களுக்கு மக்களும் உதவ காத்திருக்கின்றனர்.
எனவே, யாசகம் பெறுவதை, வழங்குவதை அரசு தடை செய்யும் அதேவேளை, உறவுகள் எதுவுமற்ற நிலையில் கைவிடப்பட்டவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிக்கரம் கொடுப்பதும் இன்றியமையாதது.
மறுபுறம் இவ்வாறான சட்டம் போட்டு மக்களை தடுக்க இயலாது என்பதே யதார்த்தம் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.