உயிர்த்த ஞாயிறு விசாரணை – கைதானவரின் வீட்டுக்கு சென்ற முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள்!!

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்ப்ட்ட மொஹினுதீன் இஹ்சான் எனும் சந்தேக நபரின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் மொஹம்மட் ஹலீம்  ஆகியோர் பல சந்தர்ப்பங்களில் சென்று வந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் நேற்று (17) வெளிப்படுத்தப்பட்டது.

குறித்த சந்தேக நபரின் வீடு அமைந்துள்ள கிராம சேவகர் பிரிவின், கிராம சேவகர் நிலந்த சஞ்ஜீவ பொன்சேகா நேற்று குறித்த ஆணைக் குழுவில் சாட்சியம் அளித்தே இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்க்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்றைய தினம் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கிராம சேவகர் நிலந்த சஞ்ஜீவ பொன்சேகாவிடம், உங்கள் பிரிவில் மொஹம்மட் ஹனீபா முஹினுதீன் எனும்பெயர் கொண்ட ஒருவர் வசிக்கிறாரா என அரச சிரேஷ்ட சட்டவாதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், இலக்கம் 213/3, கல்வல வீதி, தெஹிவளை எனும் முகவரியில் முஹினுத்தீன் என்பவர் வசித்ததாக கூறினார். முஹினுதீனுடன் அவரது மனைவி அஹமட் லசீம் காரியப்பர் பாத்திமா, மகன் மொஹம்மட் மொஹினுதீன் இஹ்சான் அஹமட், மகள் அஹமட் துஷ்ரா இஸ்லாம் ஆகியோரும் அவ்வீட்டில் வசித்ததாக கிராம சேவகர் சாட்சியமளித்தார்.

எவ்வாறாயினும், தாக்குதல்கள் இடம்பெற்ற 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஆகும்போது, அவர்கள் குறித்த 213/3 ஆம் இலக்க வீட்டில் வசிக்கவில்லை எனவும் அதிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள, 211/8 எனும் இலக்கத்தை கொண்ட வீட்டிலேயே அப்போது அவர்கள் வசித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்களது வீடு திருத்தப்பட்டுக் கொண்டிருந்தமையால் இவ்வாறு அவர்கள் வாடகை வீட்டில் அப்போது வசித்தனர். என சாட்சியமளித்தார். இது தொடர்பில் தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,

அந்த வாடகை வீட்டில் வசிக்கும்போது, இஹ்ஸான் அஹமட் எனும் இளைஞர் அடிக்கடி இளைஞர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்துவது தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றது. அவர் தனியார் கல்வி நிறுவனத்தில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேவேளை, தனியார் நிறுவனம் ஒன்றில் சேவையாற்றிக் கொண்டிருந்தார் என குறிப்பிட்டார்.

இதன்போது, அவரின் வீட்டுக்கு வந்து சென்றவர்கள் தொடர்பில் ஏதும் தகவல்கள் கிடைத்தனவா என ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த குறித்த கிராம சேவகர், ரிஷாத் பதியுதீன், ஹலீம் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல பிரபுக்கள் வந்து சென்றுள்ளதாக கூறினார்.
அத்துடன் இஹ்ஸான் அஹமட், பிரதேசத்தில் உள்ள தெளஹீத் ஜமா அத் பள்ளிவாசலுக்கு தொழுகைகளுக்காக சென்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், குறிப்பிட்டார்.

அப்பகுதியில் இரு பள்ளிவாசல்கள் இருப்பதாக சுட்டிக்காட்டிய கிராம சேவகர், அதில் ஒன்று தெளஹீத் ஜமா அத் பள்ளிவாசள் எனவும் அதனால் அப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அமையற்ற நிலைமைகள் தோன்றியதாகவும் சாட்சியமளித்தார்.

இதனையடுத்து, அப்பகுதியில் இஹ்ஸான் அஹமட்டுக்கு மேலதிகமாக வேறு எவரேனும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டனரா என அரசின் சிரேஷ்ட சட்டவாதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கிராமசேவகர், அந்த பகுதியில் வசித்த மொஹம்மட் அக்ரம் அவ்கம், மொஹம்மட் அக்ரம் சாஜிபா ஆகிய சகோதரர்களும், புஹாரி மொஹம்மட் ரபீக் எனும் நபரும் கைது செய்யப்பட்டதாக கூறினார்.
இதனைவிட, இஹ்ஸான் அஹமட் வாடகைக்கு வசித்த வீட்டின் உரிமையாளரான தம்மிக பிரியந்த சமரசிங்கவும் நேற்று ஆணைக் குழுவில் சாட்சியமளித்தார்.

தனது மனைவிக்கு சொந்தமான வீட்டையே வாடகைக்கு கொடுத்திருந்ததாக சாட்சியமளித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இஹ்சான் அஹமட் கைது செய்யப்படும் வரை அவர் தொடர்பில் அறிந்திருக்கவில்லை என தெரிவித்தார். எவ்வாறாயினும் இரவு வேளைகளில் பல்வேறு இளஞர்கள் அங்கு வந்து சென்றதாகவும் அவர் சாட்சியமளித்தார்.

இதன்போது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு வந்து செல்வதை அறிந்திருந்தீரா என ஆணைக் குழு வீட்டு உரிமையாளரிடம் வினவியது. அதற்கு பதிலளித்த அவர், இஹ்ஸான் அஹமட் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கடந்த 2019 ஏபரல் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்ட பின்னர் இரு நாட்களுக்குள் ரிஷாத் பதியுதீன் அங்கு வந்து செல்வதை கண்டதாகவும், சுமார் 30 நிமிடங்கள் அவரை அவர் அவ்வீட்டில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் சேவையாற்றிய பொலிஸ் பரிசோதகர் சமந்த ஜயமஹமுதலியும் சாட்சியமளித்தார். தான் முஹினுத்தீன் மற்றும் இஹ்ஸான் அஹமட் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்துகொண்டதாக கூறினார்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் பிரதி அமைச்சர் புத்திக பத்திரன, அமைச்சின் செயலர் ரஞ்சித் அசோக, மேலதிக செயலர் ஜே.எம்.எஸ்.என். ஜயசிங்க ஆகியோர் பயன்படுத்திய வாகனங்களின் இலக்கங்கள் குறித்த தகவல்களையும் பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது சாட்சியாளர்களை குறுக்கு விசாரணை செய்ய, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுக்கு அளிக்கப்பட்டது. எவ்வாறாயினும் ரிஷாத் பதியுதீன் தற்போது விளக்கமறியலில் உள்ள நிலையில், குறுக்கு கேள்விகள் தொடுக்க முன்னர் அவரின் ஆலோனைகளை பெற வேண்டியது அவசியம் எனவும், அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறும் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கோரினார்.

அதனை ஏற்றுக்கொண்ட ஆணைக்குழு, அதற்கன வசதிகளை செய்துகொடுக்க ஆணைக் குழுவின் செயலருக்கு உத்தரவிட்டது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter