முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமற்றது, கொரோனா உடல்களை அடக்க அனுமதிக்க கோருவதா? ஐநா மீது பாயும் விமல்

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என இலங்கைக்கான ஐக்கியநாடுகள் வதிவிடப்பிரதிநிதி வேண்டுகோள் விடுத்துள்ளமை குறித்து ஐலன்டிற்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ்நிலவரம் மோசமானதாக மாறிக்கொண்டிருக்கின்ற நிலையில் உடல்களை அடக்கம் செய்யுமாறு ஐநா வேண்டுகோள் விடுப்பதை எந்த காரணத்தினால் நியாயப்படுத்த முடியாது என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பெருமளவான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலைமை மேலும் மோசமடைகின்ற ஆபத்தை இலங்கை எதிர்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்குடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளாமல் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதி ஹனா சிங்கர் உடல்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள் என்ற வேண்டுகோளை விடுத்திருக்கமாட்டார் என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதற்கு அனுமதி மறுப்பதால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகள் எந்தவொரு சாத்தியமான நடவடிக்கைகளினால் ஏற்படக்கூடிய நன்மையையும் விட அதிகமாக காணப்படுகின்றது என ஐநாவின் வதிவிடப்பிரதிநிதி தெரிவித்துள்ளமை குறித்தும் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

 கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை பாராபட்சமான நடவடிக்கையாக கருதி இலங்கைக்கு உள்ளிருந்தும் வெளியேயிருந்தும் தனக்கு உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ள என ஹனா சிங்கர் தெரிவித்துள்ளமை, உறுதிப்படுத்தப்படாத யுத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெனீவாவில் பிரேரணையை கொண்டுவருவதற்கு சமமானது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஐநா ஆழ்ந்த கரிசனை கொண்டிருந்தால், கடிதங்களை வெளியிடுவதற்கு பதில் விசாரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மதவேறுபாடுகள் இன்றி அனைத்து சமூகத்தினரையும் பாதித்துள்ளது என்பதை ஐநா தனக்கு சாதகமான விதத்தில் மறந்துவிட்டது,இந்த கட்டுப்பாடுகள் முஸ்லீம் சமூகத்தினரை மாத்திரம் பாதித்துள்ளது போன்று ஐநா பிரதமருக்கான தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபரான சட்டத்தரணி ஹெஜாஸ் ஹில்புல்லா கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து பிரிட்டன் சமீபத்தில் கண்டனம் வெளியிட்டுள்ளமை பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர், இந்த விவகாரம் இலங்கையின் உச்சநீதிமன்றத்தின் கவனத்தில் உள்ள வேளையில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இது குறித்து ஆராய்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் தற்போதைய நடவடிக்கைகளை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளாவிட்டால், அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் விவகாரம் ஜெனீவா வரை செல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐநா பிரதிநிதியின் கடிதம் குறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை எதனை குறித்தும் ஆராயலாம் என தெரிவித்துள்ள அமைச்சர், உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம் அமைச்சரவையின் தனிமையுரிமைக்குட்பட்ட விவகாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம், புத்திதெளிவுள்ள எந்த அரசாங்கமும் நாட்டின் நலனை விட்டுக்கொடுக்கின்ற நிகழ்ச்சி நிரலை பின்பற்றாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்கள் வசிக்காத இடங்களில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பது குறித்து கருத்து வெளியிடப்படுவதை அர்த்தமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார நிர்வாகம்,பாதுகாப்பு தரப்பினர் பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக மிகவும் கடினமான சூழலில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ள விமல் வீரவன்ச இந்த தருணத்தில் ஒரு சமூகம் த ங்கள் உடல்களை புதைப்பது தொடர்பான உரிமைகளை கோருவது நியாயமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகள் கடும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகியுள்ளன,அந்த பகுதிகளிலேயே அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அமைச்சர் சந்தர்ப்பவாதிகளை திருப்திப்படுத்தாமல் அரசாங்கம் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்களின் உடல்களை புதைக்கவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் வேணடுகோள் விடுக்கலாம் என தெரிவித்துள்ள அமைச்சர் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை இன்னமும் ஜீரணிக்க முடியாதவர்கள் நாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர், யுத்தத்தில வென்ற அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளமை அவர்களிற்கு தலையிடியாக மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


ஜப்னா முஸ்லிம்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter