ஜனாதிபதியைக் கண்டு அஞ்சும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

தனிநபரிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளதாலும் சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறைகளின் சுயாதீன தன்மையின்மையாலும் நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வருவதற்கு அஞ்சுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாரளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2020ம் நிதியாண்டுக்கான வரவு –செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கூறியதாவது:-

எதிர்க்கட்சியினர் முதலீட்டாளர்களை தைரியமிழக்கச் செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. அரசாங்கம்தான் அவர்களை தைரியமிழக்கச் செய்கின்றது.

20வது திருத்தச்சட்டத்தின் ஊடாக அரசியலமைப்பில் உள்ள அனைத்து பதவிகளுக்குமான நியமனங்களை வழங்கும் அதிகாரம் ஒரு தனிநபரான ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரதான அடிப்படைதான் அதிகாரங்கள் பரவலாக்கல். ஆனால், இங்கு அனைத்து அதிகாரங்களும் ஒரு தனிநபரிடம் குவிக்கப்பட்டுள்ளது. முத்துறைகளுக்கும் அதிகாரம் பகிரப்பட வேண்டும். சட்டவாக்கத்துறை மற்றும் அரச சேவையில் சுயாதீனம் இல்லாதுள்ளது.

இவ்வாறு இருந்தால் நாட்டுக்கு எவ்வாறு முதலீட்டாளர்கள் வருவார்கள். தனிநபர் அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் போது முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வரமாட்டார்கள்.

25 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முதலீட்டாளர்கள் சீனாவுக்கு செல்வதற்கு 3 வருடங்களுக்கு முன்பாக சீனாவின் நீதித்துறையே மறுசீரமைக்கப்பட்டது. சீனாவின் நீதித்துறையை சுயாதீனமாக்கினார்கள். சீனாவில் நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்த அதிகாரம் நீதித்துறைக்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர்தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திருப்தியடைந்தனர்.

ஆனால், எமது நாட்டில் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள 75 நியமனங்களும் ஒரு தனிநபரான ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறன்றன. அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம்தான் முதலீட்டாள்ரகள் நாட்டுக்கு வருவார்கள்.

80 ஆயிரம் கோடி முதலீட்டை நாட்டுக் கொண்டுவருவோம் என்றனர். இன்று 40 ஆயிரம் கோடி முதலீட்டைக்கூட இவர்களால் கொண்டுவர முடியாத நிலைமையே இன்று ஏற்பட்டுள்ளது என்றார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter