2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஒரு கிலோ மிளகின் விலை ரூபா 1300 -1500க்கு இடைப்பட்டதாக இருந்தது. தற்போது அது ரூபா 450 – 500 வரை வீழ்ச்சியடைந்துள்ளது. பச்சை மிளகு கிலோவொன்றின் விலை ரூபா 150- 175 ஆகும்.
இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ள மிளகின் விலையை அதிகரித்து செய்கையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த நாட்களில் சில மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இப்பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வை கண்டறிவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
உலகின் உயர்ந்த தரத்தில் மிளகை உற்பத்தி செய்யும் நாடு இலங்கையாகும். இலங்கையின் மிளகுக்கு உலக சந்தையில் நல்ல கேள்வி இருந்துவந்தது. ஏற்றுமதியில் சுமார் 75வீதத்தை கொள்வனவு செய்வது இந்தியாவாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் அதிக கேள்வி இருந்தது.
தரம் குறைந்த மிளகை வியட்நாமிலிருந்து கொண்டுவந்து சுதேச மிளகுடன் அதனை கலந்து உலக சந்தைக்கு மீள் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் இருந்து மிளகுக்கான கேள்வி வேகமாக வீழ்ச்சியடைந்தது.
“நான் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் மிளகு இறக்குமதியை முழுமையாக நிறுத்தினேன். அதன் மூலம் தரம்வாய்ந்த மிளகு ஏற்றுமதிக்கு மீண்டும் சந்தர்ப்பம் உருவானது. அனைத்து தூதுவர் அலுவலகங்களின் ஊடாகவும் இது பற்றி கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு விளக்கமளித்து வெளிநாட்டு சந்தைவாய்ப்பை வெற்றிபெற வேண்டும்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்தியாவுடன் கலந்துரையாடி தற்போது அதிகளவு மிளகை விநியோகிப்பது குறித்தும் இன்றைய கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தியாக மிளகை உலக சந்தைக்கு விநியோகிப்பது முக்கிய மூலோபாயமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்கி எமது மிளகுக்கு உலக சந்தையில் கேள்வியை அதிகரித்தல் மற்றும் அறுவடைக்கு பிந்திய தொழிநுட்ப முறைமைகளை மேம்படுத்தல் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
காயவைத்தல்இ கிருமி நாசினி தெளித்தல், மாவட்ட மட்டத்தில் செயன்முறை மத்திய நிலையங்களை தாபித்து மிளகுக்கு அதிக பெறுமதி சேர்க்கக்கூடிய வகையில் செயன்முறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை விவசாய அமைச்சின் தலைமையிலான நிறுவனங்கள் இணைந்து திட்டமிடுமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார். தேவையான இயந்திரங்களுக்கு அடுத்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அதிக விலையை பெற்றுக்கொள்ளக் கூடிய மிளகு வகைகளை பயிரிட விவசாயிகளை ஊக்குவிப்பதற்கும் தேவையான அறிவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மிளகு அறுவடைக்கு அதிக விலையை உறுதி செய்வது அனைத்து தீர்மானங்களினதும் இறுதி பெறுபேறாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். அனைத்து தீர்மானங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள்இ எதிர் வரும் இரண்டு ஆண்டுகளில் மிளகுக்கு அதிக விலையை பெற்றுக்கொள்வதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல, விவசாய அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, பெருந்தோட்ட, ஏற்றுமதி விவசாய அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண, கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம்.பீ.டீ.யு.கே. மாபா பதிரண, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.ஏ. ரஞ்சித் ஆகியோரும் முன்னணி மிளகு ஏற்றுமதியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.