எதற்காக ஓடுகிறோம்?

வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டால் போதும். மனிதர்களுக்கு ஒரே ஓட்டம்தான். பஸ்ள்ஸப் பிடிக்க வேண்டும். ரயிலைப் பிடிக்க வேண்டும். தொழிற்சாலைக்குச் செல்ல வேண்டும். அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். பல வேலைகள், பல பிரச்னைகள் என நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

எல்லோரும் எங்கே ஓடுகிறோம்? பணம் சம்பாதிக்கவா? பணம் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானதுதான். ஆனால், பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடுமா? லட்சியத்தை அடையவா? லட்சியம் என்பது கடைசி நிலைதானே. அதனை அடைய நாம் செல்லும் பயணம் சுகமானதாக இருக்க வேண்டாமா?

வாழ்வின் முடிவை நோக்கி ஓடுகிறோமா, வாழ்க்கையை நாம் அனுபவிக்க வேண்டாமா?

ஒரு கதை சொல்கிறேன். ஒருவர் தன் வீட்டுக்கு வந்தார். அப்போதுதான் அவரது பையன் பள்ளி விட்டு வந்திருந்தான். தந்தை பையனைப் பார்த்து, “என்ன பள்ளிக்குச் சென்று வந்துவிட்டாயா? இன்று என்ன பாடம் படித்தாய். மற்றவர்களிடம் நீ நல்ல பையனாக நடந்துகொள்ள வேண்டும்’ என்றார். “சரி அப்பா!’ என்றான் பையன். “சரி, எனது மேஜையின் மேல் உள்ள டைரியை எடுத்து வா. போன் பேச வேண்டும்’ என்றார் தந்தை. பையன் தயங்கியபடியே “அப்பா, அந்த டைரியில் என்ன இருக்கிறது?’ என்றான்.

“அந்த டைரியில் முக்கியமானவர்களின் முகவரி, போன் நம்பர் உள்ளது’ என்றார் தந்தை. “அப்பா அந்த டைரியில் எனது பெயர் உள்ளதா’ என சட்டென கேட்டான் பையன். சாட்டையால் அடித்தது போல இருந்தது தந்தைக்கு. அவரால் எதுவும் பேச இயலவில்லை. வாழ்க்கை என்னும் பாதையில் வேகமாக ஓடும் நாம், உறவுகளையும், பந்தங்களையும் சற்று ஒதுக்கி வைத்துள்ளோம் என்பது சரிதான். சிலர் உறவுகளை புறக்கணிப்பதும் உண்டு.

எதற்காக வாழ்கிறோம்? வேலைக்காகவா? அல்லது வேலை பார்ப்பதற்காக வாழ்கிறோமா? இல்லை குடும்பத்துக்குச் சம்பாதிக்கவா இந்த ஓட்டம். வேகம், போட்டி, நேரமின்மை, நெருக்கடி இதற்கு எல்லாம் எது மூலம்? ஆசைதான் காரணம் எனக் கூறலாம். சாதிக்கப் பிறந்தவன் என அடையாளம் காட்ட வேண்டும் என்ற காரணத்தைச் சொல்லலாம். மனிதர்கள் ஆசையின் பின்னால் ஓடுகிறார்கள்.

இந்த சமுதாயம், ஆசைகளின் பின்னால் மனிதர்களை ஓட வைக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கிறது. தொழிலாளியாக வேலை செய்பவர், தானும் ஓர் ஆலை அமைக்க வேண்டும் என எண்ணுகிறார். ஆலை உரிமையாளர்கள் மேலும் வேறு ஓர் ஆலையை நிறுவ வேண்டும் என எண்ணுகிறார்கள். மனிதர்கள் ஆசை என்னும் கடலில் நீந்தி வெற்றி பெற வேண்டும் என ஓடுகிறார்களா?

மகாத்மா காந்தியின் உடைமைகள் என அருங்காட்சியகத்தில் வைத்திருந்தார்கள். ஒரு ஜோடி செருப்பு. ஒரு மூக்குக் கண்ணாடி. அவர் உபயோகித்த கடிகாரம். மகாத்மா தனக்கு இதுபோதும், இதற்குமேல் தேவை இல்லை என எண்ணியுள்ளார்.

இன்று நமது தேவைகள் அதிகரித்துவிட்டன. ஆனால், ஒன்றை நாம் மறந்து விட்டோம். பணம் என்பது நமது தேவையைப் பூர்த்தி செய்யாது. மாறாக, அது நமது தேவையை விரிவடையச் செய்யும். எது நமது தேவை? அதற்கு எதுவும் எல்லை உண்டா அல்லது எல்லையை வகுத்துக் கொள்ளாமல் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோமா?

நண்பர் ஒருவர் காரை வேகமாக ஓட்டி சென்றார். போலீஸ்காரர்கள் பல இடங்களில் நிறுத்தி எச்சரித்தார்கள். இனி வேகமாக ஓட்டினால் அபராதம் விதிப்போம் என போலீஸப்ர் கூறினர். எனினும், அவர் வேகமாகச் செல்வதை நிறுத்தவில்லை. “ஏன் இப்படி? போலீஸ்காரர் முதல்முறை எச்சரித்ததும் வேகத்தைச் சற்று குறைத்திருகலாமே’ எனக் கேட்டேன். “வேகமாகச் செல்லாவிட்டால் நாம் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிட்ட நேரத்தில் அடைய முடியாது’ என்றார். நான் அவரிடம் முயலும், ஆமையும் கதையைக் கூறினேன். “அது சிறுவர்களுக்கான கதை. இன்று நாம் ஓடாவிட்டால், நம்மைப் பிடித்துத் தள்ளிவிட்டு வேறு நபர் ஓடி விடுவார். இதுதான் இன்றைய யதார்த்தம்’ என்றார் நண்பர்.

வாழ்க்கையின் லட்சியமென்ன? சந்தோஷமா? மனநிறைவா? மனித உறவிலா? சிறு சிறு சாதனைகளிலா? பிறர்க்கு உதவுவதிலா? பணம் சம்பாதிப்பதிலா? நமது வாழ்வின் அர்த்தம் என்ன? இதனை நமது எண்ணம் என்னும் உரைகல்லில் உரசிப் பார்த்து செயல்பட வேண்டும். ஆனால் ஒன்று. ஓட்டப் போட்டியில் ஓடாவிட்டால் நீங்கள் வெற்றி பெற இயலாது. வாழ்க்கையில் ஓடிக் கொண்டே இருந்தால் வாழ்வின் பயனை அனுபவிக்கவும் இயலாது.

-எஸ். பாலசுந்தரராஜ்

source: Dinamani

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter