அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நான்கு ஆண்டுக்கு ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையில் நடைபெறுவது வழக்கம் .
அமெரிக்க அரசியல் அமைப்பில் குடியரசு கட்சியும் ஜனநாயக கட்சிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன.
குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் 74 வயதான டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
ஜனநாயக கட்சி சார்பில் 78 வயதான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
இன்றைய தேர்தலில் அமெரிக்க மக்கள் ட்ரம்புக்கோ பைடனுக்கோ நேரடியாக வாக்களிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். இதனை வாக்காளர்கள் குழு என்று அழைக்கலாம்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், மக்களால் ஜனாதிபதி நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் போது தகுதியற்ற யாரேனும் ஒருவர் ஜனாதிபதியாகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்டது தான் “எலக்டோரல் காலேஜ்” எனப்படும் வாக்காளர் குழு அமைப்பு.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப, வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். இன்று அமெரிக்காவில் மொத்தம் 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை கொண்ட வேட்பாளர்தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைய முடியும். பெரும்பாலான மாகாணங்களில், எந்த வேட்பாளருக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கிறதோ, அவருக்குதான் அந்த மாகாணத்தின் மொத்த வாக்காளர் குழு உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும்.
உதாரணமாக, கலிபோர்னியா மாகாணத்தில் அங்கு வெற்றி பெரும் வாக்காளருக்கு 99% வாக்குகள் கிடைத்தாலும் சரி அல்லது வெறும் 51% வாக்குகள் கிடைத்தாலும் சரி, அந்த மாகாணத்துக்கான மொத்த 55 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளும் வெற்றியாளருக்கே கிடைக்கும். அதனால் தான் மக்களின் குறைந்த வாக்குகளை பெற்ற வேட்பாளரால் கூட, அமெரிக்காவில் ஜனாதிபதியாக முடியும்.
கடந்த தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்ப் வெற்றி பெற்றதும் இப்படித்தான்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்று முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் முழுமையாக வெளியாக நீண்ட நேரம் ஆகும்.
வெற்றி பெறுபவர் வொஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டடத்தில் ஜனவரி 20 ஆம் திகதி, புதிய ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவி ஏற்பார்.
வெல்லப்போவது ட்ரம்பா ஜோ பைடனா என்பது நாளை மறு நாள் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தெரிந்துவிடும்.
வீரகேசரி பத்திரிகை