பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் சமூகத்தை விற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

மனச்சாட்சியோ சுய மரியாதையோ கண்ணியமோ அவர்களுக்கு இல்லை
தமது பதவிகளை சமூகத்தைக காரணம் காட்டி இராஜினாமாச் செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுள் பலர் மிகவும் வெற்கக்கேடான வெறுக்கத்தக்க விதத்தில் மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் தமது பதவிகளை ஏற்றுள்ளனர்.
உயிர்த்தஞாயிறு சம்பவங்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுக்களை சுதந்திரமாக விசாரிக்க வழியமைக்கும் வகையில் தாங்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்வதாகவே இவர்கள் முன்னர் அறிவித்திருந்தனர். ஆனால் எதிர்ப்பார்க்கப்பட்டது போலவே இந்த விசாரணைகள் முழுமையாகப் பூர்த்தி அடையும் முன்பே அவர்கள் தமது பதவிகளை மீண்டும் ஏற்றுள்ளனர்.

இதுவொன்றும் எதிர்ப்hர்க்கப்படாத ஒரு விடயம் அல்ல. சமூகத்தை ஏமாற்றும் ஒரு விளையாட்டே அவர்களது இராஜினாமா. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது சுய நிகழ்ச்சி நிரலுக்கு எற்றவாறு நெறிப்படுத்திய நாடகத்தில் வெற்கக் கேடான பாத்திரங்களை ஏற்ற நடிகர்கள் தான் இவர்கள்.

ஏப்பிரல் 21 உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின் முஸ்லிம் சமூகத்தின் மீதான துன்புறுத்தல்களுக்குக் காரணமாக இருந்த மைத்திரி – ரணில் அரசோடுதான் இவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். இது தான் அவர்களின் பாரம்பரியமாக இருக்கின்றது. குறிப்பாக ஐக்கியம் எனும் சுலோகத்தை முன்வைத்து வந்து இன்று பல கூறுகளாகப் பிளவு பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலை இதுதான். அவர்கள் தாங்கி வந்த சமயக் கோஷங்கள் அந்தக் கட்சியின் பிறப்பிலேயே மரணித்தும் விட்டன.

உயிர்த்தஞாயிறு சம்பவம் இடம்பெற்ற முதலே அந்த நிகழ்வுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முஸ்லிம் சமூகம் சார்பாக தெளிவாகக் கூறப்பட்டு வந்துள்ளது. இந்த சம்பவத்தில் பங்கேற்ற உள்ளுர் முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாட்டு சக்திகளால் தவறாக வழி நடத்தப்பட்டவர்கள். இவர்களின் பின்புலத்தில் பாரிய வெளிநாட்டு சக்திகள் உள்ளன என்று கர்தினால் மல்கம் ரன்ஜித் பல இடங்களில் பல தடவைகள் தெளிவாகக் கூறி உள்ளார்.

இருந்தாலும் கூட இந்தச் சம்பவத்தின் பின் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளையும் அட்டூழியங்களையும் தடுக்கத் தவறியவர்களாகவே ஜனாதிபதியும் பிரதமரும் காணப்பட்டனர். அர்த்தமற்ற அழிவை ஏற்படுத்தும் முஸ்லிம் விரோத நாசகார பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதை அவர்கள் கண்டும் காணாமால் நாட்டு மக்களின் கவனம் வேறு பக்கத்தில் திசை திரும்ப அவர்கள் வழிவிட்டனர்.

இந்தப் பிரசாரமானது முஸ்லிம் சமூகத்தை அழிக்கும் நோக்கில் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது உயிர்த்தஞாயிறு சம்பவம் இடம்பெற்று மூன்று மாத காலம் முடிந்துள்ள நிலையில் தெளிவாகப் புரிந்துள்ளது. அரசும் எதிர் தரப்பும் கூட்டாகவும், இனவாத மதகுருமார், இனவாத ஊடகம், இனவாத வர்த்தகர்கள், இனவாத அரச இயந்திரம் என எல்லாமே தத்தமது பாத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளன. இந்த நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட விரிவான கட்டமைப்பைக் கொண்ட முஸ்லிம்களின் அடித்தளம் வெறும் 20 நிமிட நேர குண்டு வெடிப்பில் சிதைக்கப்பட்டு விட்டது.

முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் உற்பட அவர்களுக்கு சொந்தமான மற்றும் பல இடங்களில் தேடுதல் நடத்த அவசரகால சட்டத்தை அறிமுகம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டார். இந்தத் தேடுதல் முஸ்லிம் குடும்பங்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியது. அற்பசொற்ப காரணங்களுக்காக நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் பலர் இன்னும் தடுத்து வைக்கப்படடுள்ளனர். அவர்கள் மோசமாக நடத்தப்படுவதாகக் கூட தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தத் தேடுதல் போர்வையில் புனித றமழான் மாத காலத்தில் முஸ்லிம்களின் அடிப்படை உணர்வுகளைப் புன்படுத்தும் வகையில் படையினர் சப்பாத்துக் கால்களோடும் மோப்ப நாய்களுடனும் பள்ளிவாசல்கள் உற்பட பல இடங்களுக்குள் பிரவேசித்தனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையிலும் கைவைத்தார் ஜனாதிபதி சிறிசேன. குருணாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் இன்னும் பல இடங்களிலும் முஸ்லிம்களைக் கொல்லவும் அவர்களின் சொத்துக்களுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் சேதங்களை ஏற்படுத்தவும் இனவாத காடையர்களுக்கு தாராளமாக இடமளிக்கப்பட்டது. இதுவரை வெளியாகி உள்ள சில அறிக்கைகளின் படியும் தகவல்களின் படியும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பற்றி ஜனாதிபதி முன்கூட்டியே அறிந்திருந்தும் அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முஸ்லிம்கள் இதை அனுபவிக்கட்டும் என்று விட்டுவிட்டு அவர் வெளிநாடு சென்றார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில் தான் முஸ்லிம்களின் வீடுகளும் வர்த்தக நிலையங்களும ஏனைய வாழ்வாதாரங்களும்; சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன. உயிர்ச்சேதமும் ஏற்படுத்தப்பட்டது. இந்த வன்முறைகளுக்காகவும் குற்றங்களுக்காகவும் பெயரளவில் கைது செய்யப்பட்ட பலரும் கூட இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களுக்காக ஆஜராக சிங்கள சட்டத்தரணிகள் மறுத்துள்ளனர். முஸ்லிம்;களுக்கு மருத்துவம் பாhக்க சிங்கள வைத்தியர்கள் மறுத்துள்ளனர். சில இடங்களில் முஸ்லிம் பெண்கள் தமது முக்காட்டை நீக்கினால் தான் மருத்துவம் செய்ய முடியும் என வற்புறுத்தி உள்ளனர். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களைப் பகிஷ்கரிக்கின்றனர். முஸ்லிம்கள் தனது பிரதேச சந்தையில் வர்த்தகம் செய்ய முடியாது என பிரதேச சபைத் தலைவர் ஒருவர் தெரிவித்தார். முஸ்லிம்களோடு எந்தத் தொடர்புகளும் வைத்துக் கொள்ள வேண்டாம் என சில பௌத்த ஆலயங்களில் போதனை செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலைமைகள் பற்றி ஒரு பத்தி எழுத்தாளர் இவ்வாறு வர்ணித்துள்ளார். “சாதாரண மக்களின் அன்றாட வாழ்ககை சங்கடம் மிக்கதாக ஆகிவிட்டது. இந்த நாட்டு முஸ்லிம்களின் வாழ்க்கைப் போக்கு இப்போது பெரும்பாலும் மாறி வருகின்றது. நெருக்குதல், பாரபட்சம், நன்கு திட்டமிடப்பட்ட வெறுப்பு பிரசாரம் என்பன பொது அரங்கில் நன்கு உருவெடுத்துள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான மோசமான மனநிலைகளை இவை பெருமளவில் உருவாக்கி உள்ளன. இனவாதம் இலங்கையில் புதிய அர்த்தத்தைப் பெற்றுள்ளது. முஸ்லிம்களுக்கு சொந்தமான எல்லாமே இலக்கு வைக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் முஸ்லிம்கள் முழு அளவில் நெருக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். பொதுப் போக்குவரத்துக்கள் வாடகைப் போக்குவரத்துக்கள் வேலை செய்யும் இடங்கள் என எல்லா இடங்களிலும் இது தொடருகின்றது. ஓவ்வொரு முஸ்லிமும் எந்த பாகுபாடும் இன்றி சந்தேகத்தோடு நோக்கப்படும் நிலை தோன்றி உள்ளது. வெறுப்பும் கசப்புணாவும் எல்லா இடங்களிலும் பரவி விட்டன. ஆஸ்பத்திரி காவலர்கள் மட்டும் அன்றி சுபர் மார்க்கெடடுக்கள் மற்றும் ஏனைய கடைகளிலும் கூட முஸ்லிம் பெண்கள் தமது பாரம்பரிய முந்தானையைக் கூட நீக்கிவிட்டு வரவேண்டும் என்று வற்புறுத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. முஸ்லிம்களின் நிலைமையை சுறுக்கமாக விளக்கும் வகையில் பத்தி எழுத்தாளர் எஸ்.எம்.எம். பஸீர் எழுதி உள்ள ஒரு ஆக்கத்தில் இலங்கையில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் முற்றுகைக்கு ஆளாக்கப்பட்டுள்ள நிலை பெரும் கவலை அளிக்கின்றது. அவர்கள் தமது அன்றாட வாழ்வை முன்னெடுப்பதில் கூட பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் மீது பெரும்பான்மையினர் மேற்கொள்ளும் நெருக்குதல்கள் தாக்குதல்கள் போன்ற தகவல்களோடு தான் ஒவ்வொரு நாளும் விடிகின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அநீதிகளைக் கட்டுப்படுத்த திராணி அற்றவர்களாகவே படையினரும் பொலிஸாரும் காணப்படுகின்றனர். முஸ்லிம்களும் அவர்களின் சொத்துக்களும் உடைமைகளும் எல்லா இடங்களிலும் சோதனைக்கு ஆளாகி உள்ளன. முஸ்லிம் நிறுவனங்கள் சந்தேகத்தோடு பார்க்கப்படுகின்றன. முஸ்லிம்களும் பயங்கரவாதிகளாகவும் தற்கொலை குண்டுதாரிகளாகவும் நோக்கப்படுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமகளைப் பயன்படுத்தி ஜனாதிபதி முஸ்லிம் பெண்களின் ஆடைகளில் கை வைத்தது போல் பிரதம மந்திரி முஸ்லிம்களின் மத்ரஸா கல்வி முறையிலும் அவர்களின் தனியார் சட்டத்திலும் கை வைத்தார்.

முஸ்லிம் சமூகத்தின் மீது மிக ஆழமாகக் கை வைக்கும் வகையில் பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் போதனைகளின் பிரதியை முன்கூட்டியே அரசுக்கு வழங்கி அனுமதி பெறும் ஒரு முறை குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரசாரம் எந்தளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதென்றால் ஒரு முஸ்லிம் நிறுவனம் பிரபல அரச ஆஸ்பத்திரிகளுக்கு அருகில் அங்கு சிகிச்சை பெற வரும் ஏழை மக்களுக்காக கடந்த பல ஆண்டுகளாக விநியோகித்து வந்த இலவச உணவுத் திட்டத்தையும் இந்தப் பிரசாரத்தின் மூலம் சந்தேகத்துக்கு உரியதாக்கி இப்போது அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு மோசமான பின்னணியில் தான் இனங்களுக்கு இடையிலான பிளவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பௌத்த உயர் பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் இன்றைய தலைவர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் முஸ்லிம்கள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டியவர்கள் எனக் குறிப்பிட்டு முஸ்லிம்களின் கடைகளுக்கு செல்ல வேண்டாம் அவர்களால் வழங்கப்படும் எந்த ஒரு உணவையும் உற்கொள்ள வேண்டாம் என்று பொது மேடையில் பகிரங்கமாகக் கூறினார். முஸ்லிம்கள் சிங்களவர்களை நேசிப்பவர்கள் அல்ல என்றும் அவர் கூறினார்.

இதேவேளை அமெரிக்க இஸ்ரேல் யுத்த வெறியர்களால் இந்த நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இஸ்லாமோபோபியா அல்லது இஸ்லாத்துக்கு எதிரான அதீத அச்சம் அதன் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. அதன் விளைவாக முஸ்லிம்கள் ஒரு கோணத்தை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றனர். இது அவர்களால் எதிர்ப்பார்க்கப்படும் அரசியல் கொந்தளிப்பு மற்றும் பொருளாதாரச் சீரழிவு என்பனவற்றை நாட்டில் ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் குழப்பங்களின் நடுவே நாட்டின் பிரதான பிரிவு ஊடகமும் முழு அளவில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டு முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகளாக சித்தரித்தது. இதனை ‘ஊடக பயங்கரவாதம்’ என வர்ணிக்கும் அளவுக்கு ஊடகங்கள் நடந்து கொண்டன. சுமார் மூன்று வார காலங்களாக இந்தத் தீய பிரசாரங்கள் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டன. அவசரகால சட்டத்தின் கீழ் அமுல் செய்யப்பட்ட ஊரடங்கு சட்டத்தின் கீழ் முஸ்லிம் வீடுகளில் தேடுதல் நடத்தி சமையல் அறை கத்திகளைக் கூட பயங்கர ஆயுதங்களாக சித்தரித்துக் காட்டும் பணியை ஆயுதப் படையினரின் துணையோடு ஊடகங்கள் சிறப்பாக அரங்கேற்றின.

முஸ்லிம் அல்லாதவர்களை முஸ்லிம்களுக்கு எதிராக வேண்டும் என்றே தூண்டிவிடும் ஒரு முயற்சியாகவே இவை முன்னெடுக்கப்பட்டன. இதே காலப் பகுதியில் தான் குருணாகல் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான சிங்களத் தாய்மாரின் கருப்பைக் குழாயை சிதைத்தார் என்ற பொய்யான பிரசாரத்தையும் டொக்டர் ஷாபிக்கு எதிராக இனவாத ஊடகங்கள் முன்னெடுத்தன. இன்னொரு 83 ஜுலையை உருவாக்க எல்லா முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் டொக்டர் ஷாபி தொடர்பான வழக்கு குருணாகல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டபோது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான எந்த விதமான ஆதாரங்களையும் தாங்கள் மேற்கொண்ட விசாரணைகளின் போது பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர். அவர் பெண்களின் கருப்பையை சிதைத்தமைக்கோ அல்லது வருமானத்துக்கு மிஞ்சிய சொத்துக்களை குவித்தமைக்கோ அல்லது பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தமைக்கோ எவ்வித ஆதாரமும் இல்லை என்று பொலிஸார் தரப்பில் நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டது.

பின்னர் அவர் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்சலெட் முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி தனக்கு கிடைத்துள்ள அறிக்கைகளும் வன்முறைகளைத் தூண்டும் வகையிலான சில சமயத் தலைவர்களின் அண்மைக்கால கருத்துக்களும். தன்னை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் இங்கே இப்போது சமூகங்கள் தோல்வி கண்டுள்ளன. ஆழமான அரசியல் சர்ச்சைகளின் கனத்தை தாங்க முடியாமல் அதற்குள் நாடு மூழ்கிக் கொண்டு இருக்கின்றது. பொருளாதாரமும் சமூகமும் சிதைவடைந்து வருகின்றன.

மைத்திரி – ரணில் அரசு இந்த நாட்டுக்கு ஒரு சாபமாகவே முடிந்துள்ளது. இவ்வாறு இந்த சமூகம் எதிர்நோக்கியுள்ள எந்தப் பிரச்சினைக்கும் நெருக்கடிக்கும் எவ்விதமான உறுதியான முடிவுகளும் தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் தான் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் சமூகத்துக்காகப் பதவி துறந்ததாகக் கூறிக் கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளனர்.

-லதீப் பாரூக்-
(முற்றும்)

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter