ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க் கூலிக்காக குழாய்க்கிணறு வெட்டப்போனவன் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பிடிக்கப்பட்டு 3 மாதமாக சிறையில் இருக்கிறான். பருவ வயது அடைந்து தானாக விரும்பி முகத்தை மூடிய ஆயிரக்கணக்கான பெண்கள் அழுத கண்ணீரோடு வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கிறார்கள் இன்னும்.குற்றமிழைக்காத நூற்றுக் கணக்கான அப்பாவிகள் இன்னும் சிறையில் வாடுகிறார்கள்.
முஸ்லிம் தனியார் சட்டம்,முஸ்லிம் பெண்களின் ஆடை,மத்ரஸா கல்வி,முஸ்லிம்களின் வியாபாரம் என்று அனைத்தும் குறிவைக்கப்படுகின்றன.
முஸ்லிம் சட்டத்தரணிகள், முஸ்லிம் சமுக செயற்பாட்டாளர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.
முஸ்லிம் சமுகத்தின் தலைக்கு மேல் ஒரு நிரந்தரமான கத்தி கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கிறது.
ஒரு சமுகமே அநாதையாய்க் கிடக்கிறது.
இதில் எந்தப் பிரச்சினையை தீர்க்கப்படவில்லை என்பதற்காக இவர்கள் பதவி துறந்தார்கள்?
எந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்ட மகிழ்ச்சியில் பதவி ஏற்றார்கள்?
இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதற்காகவும், முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதற்காகவும் பதவி துறந்தார்கள் என்றுதானே நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம்?
என்ன செய்தாலும் கடைசியாகப் பதவியை விட்டுவிட்டார்கள்தானே என்று வாய் நிறையப்பாராட்டினோம் அப்படித்தானே.
இங்கே எங்கே தவறு நடக்கிறது? அரசியல்வாதிகள் பதவி ஏற்றதிலா? அல்லது எமது அரசியல் பற்றிய புரிதலிலா?
இந்த ராஜனாமா விவகாரத்தை நாம் புரிந்ததில் மிகவும் தவறு இருக்கிறது.
ஜனாநாயக அரசியலில் ஒரு நிகழ்வைப் புரிந்து கொள்ள வேண்டுமாக இருந்தால் அந்த நிகழ்வு சார்ந்த அனைத்து நிகழ்வுகளையும் ஒன்றாகக் கோர்த்துப் பார்க்க வேண்டும். ஒரு அரசியல் நிகழ்வுக்கு தனியே ஒரு வியாக்கியானம் கொடுக்கக் கூடாது. அரசியல்வாதி ஒரு நிகழ்வுக்கு வெளிப்படையாகச் சொல்லும் காரணத்தை நம்பவே கூடாது. அந்தக் காரணத்தைப் பிரித்து மேய்ந்து அதற்குள் இருக்கும் உண்மையான காரணத்தை புரிந்து கொள்ள முனைய வேண்டும். ஒரு அரசியல்வாதியின் மேடைப்பேச்சு, பேட்டி என்பவற்றில் அவன் சொல்லும் விடயங்களை ஒரு போதுமே நம்பக் கூடாது.
சரி.இப்போது ராஜநாமா விவகாரத்தை சரியான வழியில் புரிய முனைவோம்.
ராஜநாமாவோடு ஒன்றாகச் சேர்த்துப்பார்க்க மறந்த நிகழ்வுகள்:
01.றிஷாடுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை
02.ஏன் அந்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை விவாதத்திற்கு வரவில்லை
03.ரத்ன தேரரின் உண்ணா விரதம்
04.ஏன் ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் ராஜநாமா செய்தார்கள்
05.ஏன் ராஜநாமாச் செய்தவர்கள் எதிர்க்கட்சியில் உட்காரவில்லை.
06.ராஜநாமாச் செய்தபோது வைத்த கோரிக்கைகளின் பட்டியல் என்ன?
இவை அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால் எமக்கு ராஜநாமாவின் உண்மையான காரணம் புரியும்.
றிஷாடுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்தால் அது வாக்களிப்புக்குச் செல்லும்.ரிஷாடுக்கு எதிராக வாக்களிப்பதில் ஐ.தே.கட்சிக்குள்ளேயே பல குழப்பங்கள் இருந்தன.பலர் ரிஷாடுக்கு எதிராக வாக்களிக்கவே இருந்தார்கள்.அதனால் வாக்களிப்பை நடக்காமல் செய்ய வேண்டும்.
இது முதலாவது,
இரண்டாவது ரத்ன தேரரின் உண்ணாவிரதம் சிங்கள சமுகத்தை உசுப்பேற்றிவிட்டது.ரிஷாட் பதவியை இழக்காவிட்டால் பல சிங்கள வாக்குகளை ஐக்கிய தேசியக்கட்சி இழக்கும். சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த ரிஷாடின் பதிவியைப் பறிக்க வேண்டும்.
மூன்றாவது ரிஷாடின் பதவியை ரத்ன தேரருக்காக பறித்தால் அல்லது ராஜநாமா செய்ய வைத்தால் இந்த அரசாங்கத்தின் மீது ஏற்கனவே முஸ்லிம்கள் கொண்டிருந்த அபிப்பிராயமும் அழிந்து விடும்.
ஒரு இனவாதியின் உண்ணாவிரதத்திற்குப் பயந்து ஒரு முஸ்லிம் அமைச்சரை ராஜநாமாச் செய்ய வைத்த அரசாங்கம் என்ற பழியால் முஸ்லிம் வாக்குகளை ஐக்கிய தேசியக்கட்சி இழக்கும்.
அது ஆபத்தானது.
ஆகவே அன்று ரணிலுக்கு முன்னிருந்த சவால்கள்,
01.சிங்கள மக்களையும் திருப்திப்படுத்த வேண்டும்
02.முஸ்லிம்களின் வாக்குகளையும் இழக்கக் கூடாது
03.நம்பிக்கையில்லாம் பிரேரணையை வாக்களிப்புக்கு கொண்டுவரக்கூடாது.
ரிஷாடைத் தனியாக ராஜநாமாச் செய்யச் சொன்னால்தானே பிரச்சினை.
இதோ அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் ராஜநாமாச் செய்யுங்கள்.ஐ.தே.கட்சி உட்பட.
அவ்வாறு செய்தால்,
01.சிங்கள மக்களும் திருப்தி அடைவார்கள். உண்ணாவிரதம் கைவிடப்படும்.
02.முஸ்லிம் வாக்களுகள் இழக்கப்படாது.மாறாக பதவியைத் துறந்தமைக்காக முஸ்லிம் அரசியல்வாதிகளின் நன்மதிப்பு முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிகரிக்கும்.
03.ரிஷாடுக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்புக்கு வராது.
ஒரு கல்லில் பல மாங்காய்.தலைவலியும் முடிந்தது.முஸ்லிம் வாக்கும் கிடைத்தது.
ஆகவே அனைவரும் ராஜநாமாச் செய்வார்கள்.அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகக் காட்டுவார்கள்.ஆனால் ஒரு போதும் எதிர்க்கட்சியில் உட்காரமாட்டார்கள். உட்கார்ந்தால் அரசாங்கம் ஆட்டம் கண்டுவிடும்.
சரி அப்படியென்றால் ரிஷாட் ராஜநாமாச் செய்தால் ரவூப் ஹக்கீமுக்கு நல்ல விடயம்தானே ஏன், ரவூப் ஹக்கீம் ரிஷாடைக் காப்பாற்ற முனைந்தார்?
ரிஷாடுக்கு எய்யப்பட்ட அம்பை இப்போது தடுக்காவிட்டால் அடுத்தது அந்த அம்பு தன்னைப் பதம் பார்க்கும் என்பதை அவர் நன்கறிவார். ரிஷாடைக் காப்பாற்றுவதன் மூலம் ரவூப் ஹக்கீம் தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டார். அவ்வளவுதான்.
ஆகவே
ராஜநாமாச் செய்த போது சொன்ன காரணம்- முஸ்லிம் சமுகத்தின் நன் மைக்காக
ராஜநாமாச் செய்ததன் உண்மை நோக்கம் -ரிஷாட்டையும் ரணிலின் அரசாங்கத்தையும் காப்பாற்றி இழக்கவிருந்த முஸ்லிம் வாக்குகளைக் மீளப்பெற்று முஸ்லிம் அரசியல்வாதிகளை செயல் வீரரகளாகக் காட்டுவது.
பதவிகளை மீளப்பெற்றமைக்கான காரணம் – மேற் சொன்ன நோக்கம் நிறைவேறிவிட்டது.மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வது.
முட்டாளாக்கியது – முழு முஸ்லிம் சமுகத்தை.
படு முட்டாளாகியது -பதவி துறந்தவுடன் மாஷா அல்லாஹ்,தன்மானத் தலைவர்கள் என்று போஸ்ட் போட்டவர்கள்.
அடிமுட்டாள்கள் – இன்னும் இவர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள்.
Raazi Muhammadh Jabir
via JaffnaMuslim