கடந்த இரண்டு மாதங்களாக வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பற்றிய பேச்சுக்களே அதிகம் இருந்தன. ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்துக் கொண்டன. குருணாகல் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிரி ஜயலத் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சிங்கள பத்திரிகை ஒன்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் 4000 ஆயிரம் சிங்கள பெண்களுக்கு அவர்களின் அனுமதியின்றி கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் என்று செய்தி வெளியிட்டது. இச்செய்தியை மேலும் ஊதிப் பெருப்பிக்கும் வகையில் ரஜரட்ட பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சன்ன ஜயசுமன, குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரபண்டா ஆகியோர்களின் கருத்துக்களும் அமைந்திருந்தன.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்துரலியே ரத்ன தேரர், விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலர் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு சிங்கள மக்களிடையே காணப்பட்ட கோபத்தை மேலும் வலுப்பெறச் செய்தார்கள். வைத்தியர் ஷாபி சிங்களவர்களின் சனத் தொகையை கட்டுப்படுத்துவதற்கு சிங்களப் பெண்களுக்கு அனுமதியின்றி கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டிருந்தால் அவர் மீது சிங்கள மக்களுக்கு ஏற்படுகின்ற கோபத்தில் நியாயம் உள்ளது. ஆனால், தனிப்பிட்ட விரோதம், கட்டிடமொன்றின் கொள்வனவில் ஏற்பட்ட போட்டி ஆகியன காரணமாகவே ஷாபி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன என்பது குற்றப் புலனாய்வு பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. ஒருவரை பழிவாங்குவதற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் சட்டத்தை எந்தளவிற்கு கையில் எடுத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இரண்டு குற்றச்சாட்டுக்கள்
4000 ஆயிரம் பேருக்கு கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டு பின்னர் 8000 ஆயிரம் என்று சொல்லப்பட்டது. இந்த குற்றச்சாட்டு காட்டு தீ போல் நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலையில் வைத்தியர் ஷாபி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்தார் என்ற புதிய குற்றச்சாட்டின் பேரில் குருணாகல் பொலிஸார் அவரை கைது செய்தனர். இது ஷாபி மீதான திட்டமிட்ட நடவடிக்கை என்று புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஏனெனில், ஒரு வைத்தியரினால் தனித்து நின்று கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொள்ள முடியாது.
குருணாகல் நகரில் கட்டிடமொன்றின் கொள்வனவில் ஷாபிக்கும் சிங்களவர்த்தகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட போட்டி, குருணாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கும் வைத்தியர் ஷாபிக்கும் இடையே ஏற்கனவே ஏற்பட்டிருந்த தனிப்பட்ட பகை காரணமாகவுமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளன. ஒருவர் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களை சேர்த்தால் எந்த முறைப்பாடுகளும் இல்லாத நிலையில் அவரை பொலிஸாரினால் கைது செய்ய முடியாது. வருமானத்திற்கு மீறிய வகையில் ஒருவர் சொத்துக்களை சேர்த்திருந்தால் அதற்குரிய நடவடிக்கைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவே விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்த விதி முறை வைத்தியர் ஷாபி கைது விடயத்தில் பின்பற்றப்படவில்லை.
இவரது கைது சிங்கள மக்களிடையே பீதியையும், இனவாதிகள் மத்தியில் ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரது கைது பொலிஸ் திணைக்களத்திற்கும், சுகாதார அமைச்சுக்கும் தலையிடியை கொடுத்தது. ஒருவரை முறைப்பாடுகளின்றி கைது செய்ய முடியுமா? ஒரு வைத்தியரினால் தனியே கருத்தடை சத்திர சிகிச்சையை திட்டமிட்டு செய்ய முடியுமா? போன்ற பல கேள்விகள் தொடுக்கப்பட்டன. மேலும், வைத்தியர்கள் பலரும் மேற்படி குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாதென்று மறுத்துரைத்தார்கள்.
விசாரணைகள்
இவரது கைது தொடர்பில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இவர் கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் என்று முறைப்பாடுகள் இருக்குமாயின் அதனை பொலிஸில் பதிவு செய்யுமாறு பொது அறிவித்தல் பொலிஸ் ஊடகப் பேச்சாளரினால் விடுக்கப்பட்டது. ஒருவரை முறைப்பாடுகளின்றி கைது செய்துவிட்டு, இவர் இந்தக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அது பற்றிய முறைப்பாடுகள் இருந்தால் பொலிஸில் தெரிவியுங்கள் என்று அறிவித்தல் கொடுக்கப்பட்டமை உலகில் இதுவே முதற் தடவையாக இருக்க வேண்டும். இந்த அறிவித்தல் பொலிஸ் திணைக்களத்தின் மீது எதிர் காலத்தில் பழி வந்து விடக் கூடாதென்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே கருத வேண்டும். ஏனெனில், பதில் பொலிஸ் மாஅதிபர் இவரது கைது விடயத்தில் உள்ள பாரதூரத்தை தெளிவாக புரிந்து கொண்ட நிலையிலேயே மேற்படி பொது அறிவித்தலை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் திணைக்களத்தின் அறிவித்தலுக்கமைய வைத்தியருக்கு எதிராக முறைப்பாடுகள் செய்தால் பணப் பரிசுகள் தரப்படும் என்று ஒரு சில இனவாதிகள் தெரிவித்திருந்தார்கள். ஆயினும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளே பொலிஸில் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் குற்றப் புலனாய்வு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டார்கள். ஊடகங்களின் மூலமாக அறிந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு பொலிஸார் சட்ட விரோமாக கருத்தடை செய்தார் என்று முறைப்பாடு செய்த 601 தாய்மார்களிடமும், மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் 07 பேரிடமும், குருணாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் தரத்தையுடைய வைத்தியர் ஒருவரிடமும், குழந்தைகள் வைத்திய நிபுணர்கள் 06 பேரிடமும், சத்திர சிகிச்சை வைத்தியர்களுக்கு உதவியாக கடமையாற்றும் வைத்தியர்கள் 11 பேரிடமும், சத்திர சிகிச்சைக்காக உணர்விழக்கச் செய்யும் வைத்தியர்கள் 10 பேரிடமும், 70 தாதிகளிடமும், 18 உதவியாளர்களிடமும், பலோப்பியன் உறுப்பு பற்றி ஒரு வைத்தியரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு மொத்தமாக 758 வாக்கு மூலங்களை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் பதிவு செய்திருந்தார்கள்.
மேலும், குற்றச்சாட்டுக்களை முன் வைத்தவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் குற்றப் புலனாய்வு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கைளை மேற்கொண்டது. ஆனால், பொலிஸில் முறைப்பாடுகளை செய்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு முன் வரவில்லை. இந்நிலையில் அத்துரலியே ரத்ன தேரர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அத்தகைய பரிசோதனைகளை செய்யாது வைத்தியருக்கு தண்டனை வழங்குமாறு வலியுறுத்தினார்.
இதன் பின்னர் குற்றப் புலனாய்வு பொலிஸ் திணைக்களம் தமது விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு வழங்கியது. அதில் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கைது செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அத்தரலிய ரத்ன தேரர் குற்றப் புலனாய்வு பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக கருத்துக்களை முன் வைத்தார். வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களைக் கொண்டு வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று தெரிவித்தார்.
பிணையில் விடுதலை
இரண்டு மாதங்கள் வைத்தியர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நாளுக்கு நாள் வலுவிழந்து கொண்டு வந்தன.
இந்தப் பின்னணியில் கடந்த 25ஆம் திகதி குருநாகல் நீதிமன்றத்தில் வைத்தியர் ஷாபி மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது சாட்சியமளித்த சட்டமா அதிபர் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து நீதிமன்றம் வைத்தியரை ரூபா 250,000 ரொக்கத்திற்கும், ரூபா 2.5 மில்லியன் 04 சரிரப் பிணையிலும் விடுதலை செய்துள்ளது.
ஆயினும், வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை சேர்த்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு விசாரணைகளை மேற்கொள்ளும் என்று தெரியவந்துள்ளது.
தடுக்கப்பட வேண்டும்
பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் நினைத்தால் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து கைது செய்யலாமென்ற நிலை இனியும் தொடரக் கூடாது. யாராக இருந்தாலும், அவர் குற்றம் செய்தமைக்குரிய முறைப்பாடுகளும், ஆதாரங்களும் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், யாரும் தனிப்பட்ட பழியை தீர்த்துக் கொள்வதற்கு சட்டத்தைகையில் எடுக்கக்கூடாது. அவ்வாறு செய்வது தொடருமாயின் நாட்டு மக்களுக்கு உண்மையின் மீது நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படும்.
பேரினவாத அரசியல்வாதிகள் வாக்குகளின் கூட்டல், கழித்தல்களிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இந்த கூட்டல் கழித்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி நாட்டில் நீதியை நிலை நாட்ட வேண்டுமாயின் சிறுபான்மையினர் ஒற்றுமைப்படல் வேண்டும். தங்களின் வாக்குப் பலத்தை பயன்படுத்தி இனவாதத்தை கட்டுப்படுத்தி நாட்டில் நீதியை நிலை நாட்ட வேண்டியுள்ளது.
சிறுபான்மையினரின் வாக்குகளும், மக்கள் பிரதிநிதிகளும்தான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகள் என்று பேரினவாத கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உணர்த்தப்படல் வேண்டும். இதற்கு சிறுபான்மையினர் ஒற்றுமைப்பட வேண்டும். இன்று சிறுபான்மையினர் ஒற்றுமைப்படுவதற்கு பதிலாக தங்களுக்குள் அடித்துக் கொண்டு பிரிந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்கள் தங்களுக்குள்ளும், தமிழர்களுக்கும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களிடையே ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஒற்றுமையை குழைக்கும் வகையில் கடந்த 20ஆம் திகதி ஒலுவில் துறைமுகவிடுதியில் தங்கியிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப்போடு முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதே வேளையில் அவருடன் சென்ற குழுவினர் அப்துல்லாஹ் மஹ்றூப்பின் வாகனத்தினை தாக்கி கண்ணாடியை உடைத்துள்ளார்கள். இவ்வாறு ஒற்றுமை துளிர் விடும் போதே அதை கிள்ளி எறியும் நிலையே சிறுபான்மையினர் மத்தியில் இருந்து கொண்டிருக்கின்றது. இது தொடர்ந்தால் இனவாத நெருக்குதல்களிலிருந்து தப்ப முடியாது.
https://www.virakesari.lk/article/61406