இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மைக் பொம்பியோ இன்று (27) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.
இந்தநிலையில் அவரின் இலங்கை விஜயம் குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் விசேட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.
முக்கிய கருத்துக்களை உள்ளடக்கிய வகையில் அந்த அறிக்கையில் சீனா தனது அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் தனது இலங்கை விஜயத்தின் போது, உள்நாட்டு எதிர்பார்ப்புகளுக்கு தன்னிச்சையான வகையில் தலையிடக் கூடாது என்று சீன தூதரகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை கொவிட் 19 தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தருணத்திலேயே அமெரிக்க ராஜாங்க செயலாளர் தனது அரசு முறை விஜயத்தை மேற்கொள்கிறார்.
அமெரிக்காவில் தற்போதைய நிலையில் சுமார் 8.8 மில்லியன் பேர் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மைக் பொம்பியோவின் விஜயத்துக்கு முன்னதாக பெருமளவான அரச பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்புவது சுகாதார நடைமுறைகளை மீறும் செயல் என்று சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, பொம்பியோவின் இலங்கை விஜயத்தின் போது வீதி கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யுமாறு கோருவது இந்த நாட்டின் கௌரவத்தை பாதிக்கும் செயலாக அமையாதா என்று சீனா கேள்வி எழுப்பியுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையானது வௌிநாட்டு உறவுகளை தேவையறிந்து தெரிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதி ராஜாங்க செயலாளர் டீன் தொம்சன் விடுத்துள்ள அறிவித்தல், சீன – இலங்கை ராஜதந்திர உறவை பாதிக்கும் செயல் என சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
இதனூடாக மற்ற நாடுகளின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளின் தன்னிச்சையான தலையீட்டிலும், சிறிய மற்றும் நடுத்தர நாடுகளை தங்களுக்கான உறவுகளை நாடுகளை தேர்ந்தெடுப்பதில் கட்டாயப்படுத்துவதிலும் உள்ள அமெரிக்க தலையீட்டை மேலும் அம்பலப்படுத்துகின்றது என்று சீனா சுட்டிக்காட்டியுள்ளது. Ada-Derana