முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் கோரும் இலங்கை முஸ்லிம் பெண்கள்

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் எல்லா முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும், நீதியையும் உறுதிப்படுத்தக்கூடிய வகையில் திருத்தப்பட வேண்டும் என முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுக்கின்றனர்.

முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து கொழும்பில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய முஸ்லிம் பெண்கள் இந்த கோரிக்கையை விடுத்திருந்தனர்.

9 அம்ச கோரிக்கைகள் என்ன?

  • அனைத்து முஸ்லிம்களின் திருமண வயதெல்லை 18ஆக அமைய வேண்டும்.
  • பெண்கள் காதிகளாகவோ, ஜுரிகளாகவோ, திருமணப் பதிவாளர்களாகவோ, காதிகள் சபை அங்கத்தவராகவோ நியமிக்கப்பட தகுதியுடையவர்களாக்கப்படல் வேண்டும்.
  • முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம், அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரே மாதிரியானதாக வேண்டும்.
  • அனைத்து சட்ட ரீதியிலான திருமணங்களின் போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரின் கையெழுத்து மற்றும் கைவிரல் அடையாளங்களை கட்டாயமாக பெற்றுக் கொள்ள வேண்டும். திருமண வயதை எட்டிய அனைத்து பெண்களுக்கும் சுயாதீனமாக திருமணத்தை தீர்மானிப்பதற்கு உறவு முறை ஆண்களின் அனுமதியை பெற வேண்டியது கட்டாயம் கிடையாது.
  • திருமணம், சட்ட ரீதியில் ஏற்றுக் கொள்வதற்காக, கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்ய முயற்சிக்கும்போது, விசேட காரணங்களை அடிப்படையாகவும், சாதாரண காரணங்களை கருத்திலும் வைத்து கொண்டு, நிதி இயலுமை, அனைத்து தரப்பினரின் சம்மந்தம் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதி பெறுதல் உள்ளிட்ட உரிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும். 
  • தலாக் மற்றும் பஸஹ் நடைமுறையின் கீழ் விவாகரத்து பெற்றுக் கொள்ளும் போது உரிய நிபந்தனைகள் விடுக்கப்பட வேண்டும். மேல்முறையீட்டு செயற்பாடுகளின் போது கணவர் மற்றும் மனைவி ஆகியோருக்கு விவாகரத்து நடைமுறை சமமாக காணப்பட வேண்டும். முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம், முபாரத் மற்றும் குலா ஆகிய விதத்தில் விவாகரத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  • கைக்கூலி (சீதனம்) தொடர்பான சரியான தகவல்களை பெற்று, விவாகரத்தின் போது, அதனை மீளப்பெற்றுக் கொள்ளும் விதத்தில் சட்டம் தயாரிக்கப்பட வேண்டும். திருமணத்தின் போது, சரியான முறையில் பதிவுகள் செய்யப்படாது, சீதனத்தை வழங்குதல் மற்றும் பெற்றுக் கொள்ளுதல் சட்டவிரோதமானது அல்லது தண்டனைக்குரிய குற்றம் என்ற விதத்தில் அமைய வேண்டும்.
  • முஸ்லிம் தம்பதியினால் திருமணத்திற்கு முன்னர் திருமண உடன்படிக்கையில் உள்ளடக்க வேண்டிய விடயங்களை அறிவித்து, அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய முஸ்லிம்கள் பெண்கள்

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்ட திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஜுலை 11ஆம் தேதி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் உறுப்பினர்கள் 11 பேர் ஒன்றுக்கூடி, முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் 14 திருத்தங்களை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளதாக இன்றைய தினம் ஒன்று கூடிய முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இறைவனால் கூறப்பட்டுள்ள சட்டத்தை, நாட்டிலுள்ள சட்ட திருத்தங்களின் ஊடாக அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சரான பேரியல் அஷ்ரப் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கோரிக்கை விடுத்திருந்தார்.

முன்னாள் அமைச்சரான பேரியல் அஷ்ரப்
Image captionமுன்னாள் அமைச்சரான பேரியல் அஷ்ரப்

”சுமார் 40 வருட காலம் இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தது. ஏதோ ஒரு காரணத்தினால் இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன. இந்த இடத்தில் முஸ்லிம் பெண்களே இருக்கின்றோம். இறைவன் எங்களுக்கு கூறியுள்ள விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாக சிலர் நம்புகின்றனர். இறைவன் கூறிய விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு நான் இந்த இடத்திற்கு வந்து கூறவில்லை. அதற்கான தேவை மற்றும் அவசியம் எமக்கு கிடையாது. இறைவன் எமக்கு கூறியுள்ள சட்டங்களில் எந்தவித பிரச்சினையும் எமக்கு கிடையாது. அந்த சட்டத்தை மனிதர்களுக்கு கொண்டு வரும் போது, மனிதர்களினால் தயாரிக்கப்படுகின்ற சட்டத்திலேயே பிரச்சனை காணப்படுகின்றது. மனிதர்களால் எமக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டத்திலேயே நாம் திருத்தங்களை கோருகின்றோம். இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுகின்ற எம் அனைவருக்கும் ஏதேனும் ஒரு தவறு இழைக்கப்பட்டிருக்குமாயின், அந்த தவறு இஸ்லாம் தர்மத்தில் என்றால், அது மிகவும் பிழையான கருத்தாகும். இறைவன் ஒருபோதும் எமக்கு அநீதி இழைக்கும் வகையிலான சட்டங்களை பிறப்பிக்கவில்லை. இறைவனினால் வழங்கப்பட்டுள்ள சட்டத்தை, சட்டத் திருத்தங்களின் ஊடாக மக்களுக்கு வழங்குமாறே நாம் கேட்டுக்கொள்கின்றோம்” என முன்னாள் அமைச்சரான பேரியல் அஷ்ரப் கூறினார்.

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தால் பெண்கள் மாத்திரமன்றி, சிறார்கள் மற்றும் ஆண்களும் பாதிக்கப்பட்டு வருவதாக முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை அமைப்பின் உறுப்பினரான ஜுவைதீயா தெரிவிக்கின்றார்.

முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை அமைப்பின் உறுப்பினரான ஜுவைதீயா

”இந்த முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தினால் பாதிக்கப்படுவது தனிய பெண்கள் மட்டும் இல்ல, சிறுவர்கள் மட்டும் இல்ல. ஆண்களும் பாதிக்கப்படுற ஒரு நிலைமை இருக்கின்றது. பெண்களும் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என நாங்கள் கூடுதலாக சொல்லியிருக்கின்றோம். இந்த சட்ட இடைவெளி காரணமாக ஒரு பகுதி ஆண்களும் பாதிக்கப்படுற ஒரு நிலைமை காணப்படுகின்றது. பாரபட்சமான இந்த சட்டத்தினால பல திருமணங்கள் ஒரு கணக்கில் அடங்காத அளவு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. திருமணம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில உரிய பதிவுகள் இடம்பெறாதமையினால், இன்று வரையும் பெருந்திரளான பெண்கள் எங்கட சமூகத்தில பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சட்டத்தில் இருக்கும் இடைவெளி காரணமாகத்தான் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன,” என்று முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை அமைப்பின் உறுப்பினரான ஜுவைதீயா குறிப்பிடுகின்றார்.

இறைவனால் கொண்டு வரப்பட்ட சட்டத்தை மாற்றியமைக்க கோரிக்கை விடுக்கவில்லை எனவும், மாறாக மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டத்திலேயே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் சட்டத்தரணி எமிசா டீகர் தெரிவிக்கின்றார்.

சட்டத்தரணி எமிசா டீகர்

”முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் 1951ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை சுமார் 30 வருடங்களுக்கு முன்னரே வந்துள்ளது. இது அண்மையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கிடையாது. நீண்ட காலமாக முஸ்லிம் பெண்கள் இதுகுறித்து குரல் எழுப்பியுள்ளனர். இந்த சட்டம் மாற்றப்பட வேண்டும் என்பது முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்தே இந்த கோரிக்கை விடுக்கப்படுகின்றது. ஆண்கள் அதிகளிவிலும், மனிதர்களினாலும் கொண்டு வரப்பட்ட சட்டமே இது. இந்த நாட்டிலுள்ள ஏனைய சட்டங்களை போன்றே நாடாளுமன்றத்தில் மனிதர்களால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போன்று முன்பு காணப்பட்ட பல முஸ்லிம் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. மாற்ற முடியாது என கூறுவது புதிய யோசனை அல்ல. இன்று அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டத்தை மாற்றியமைக்க முடியும். மதத்தை மாற்றியமைக்குமாறு நாம் கோரவில்லை. சட்டத்தை மாற்றியமைக்குமாறே கோருகின்றோம்.” என சட்டத்தரணி எமிசா டீகர் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/india-49127126

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter