ஐ.பி.எல். கிரிக்கெட் லீக்கை எப்போது வேண்டுமென்றாலும் நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபை தொடர்ச்சியாக கூறி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஐ.பி.எல். 2020 டி20 லீக் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கிண்ண போட்டியை நடத்த வாய்ப்பில்லாததால் செப்டம்பர், அக்டோபரில் ஐ.பி.எல். லீக்கை நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தியாவைத் தவிர்த்து வெளியில் போட்டியை நடத்தும் எண்ணம் இல்லை. அப்படி இருந்தாலும் அது இறுதி கட்ட முயற்சியாகத்தான் அது இருக்கும் பி.சி.சி.ஐ தரப்பு கூறுகிறது. இதனால் ஐ.பி.எல். லீக் நடந்தால் இந்தியாவில்தான் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் போட்டி நடந்தாலும் பரவாயில்லை. ஒருவேளை இந்தியாவில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், கடைசி நேரத்தில் அழைக்கலாம் என்பதால் நாங்கள் தயார் நிலையிலேயே இருக்கிறோம் என்று டுபாய் விளையாட்டு சிட்டியின் கிரிக்கெட் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான தலைவர் சல்மான் ஹனிப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சல்மான் ஹனிப் கூறுகையில்,
‘‘டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் ஐ.சி.சி. அகடமி டி20 லீக் போட்டிக்கு தயாராக இருப்பதற்காக சாத்தியக்கூறு உள்ள மைதானம். இங்கு 9 ஆடுகளங்கள் உள்ளன. குறுகிய நாட்களுக்குள் அதிகப்படியாக போட்டிகளை நடத்திட முடியும். நாங்கள் எந்த போட்டிக்கான அட்டவணையையும் தயார் செய்யாததால் ஆடுகளங்கள் புதிதாக இருக்கின்றன’’ என்றார்.