உறுப்பினர்கள் அனுமதி வழங்கவில்லை – ஹக்கீம் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள்

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே தமது உறுப்பினர்கள் தன்னிடத்தில் அனுமதி பெற்று ஆதரவை வெளியிட்டதாக கூறியிருக்கின்றார்கள், அது முற்றிலும் தவறான விடயமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு அத்தகைய ஒரு அனுமதியை வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்கள் இருவர் உட்பட நான்கு உறுப்பினர்கள் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வெளியிட்டமை, அதுபற்றி எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள், முஸ்லிம் காங்கிரஸ் மீது எழுந்துள்ள விமர்சனங்கள், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக நேற்றையதினம் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இதன்போதே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை வாழ் முஸ்லிம்களின் அடையாளமாக செயற்பட்டு வருகின்ற அரசியல் கட்சியாகும்.

அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலத்தில் தேசிய ரீதியில் தனது சமூகம் சார்ந்து உரிய தருணங்களில் சரியான தீர்மானங்களை எடுத்தே வந்திருக்கின்றது.

அவ்வாறான நிலையில் கடந்த காலத்தில் 18ஆவது திருத்தினை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தது. இந்த பாவத்தினை கழுவுவதற்காக 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதனை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்திருந்தது.

அதுமட்டுமன்றி தற்போதைய ஆட்சியாளர்கள் நீண்டகால நோக்கில் ஜனநாயகத்தினை ஒழிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டத்தினை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்திருந்தது.

நாடாளுமன்றத்தின் ஊடாக 20ஆவது திருத்தினை நிறைவேற்றும் செயற்பாட்டை தடுக்க முடியாது என்பதற்காகவே அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தினையும் முஸ்லிம் காங்கிரஸ் நாடியிருந்தது.

இறுதி தீர்மானம் எடுக்கவில்லை இவ்வாறான நிலையில் எமது கட்சியின் உயர்பீடத்தில் 20ஆவது திருத்தம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடல்கள் நடைபெற்றிருந்தான.

அச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் கிழக்கு மாகாண மக்களின் நிலைமைகள், அங்குள்ள சூழல்கள் தொடர்பில் அதிகளவான கரிசனைகளை வெளியிட்டார்கள்.

இதனால் ஒரு தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. எனினும், நீண்டகால அடிப்படையில் ஜனநாயகத்தினை ஒழிக்கும் விடயத்திற்கு ஆதரவளித்து நாட்டை தாரைவார்க்க முடியாது என்ற நிலைப்பாட்டினை தலைவர் என்ற வகையில் உறுதியாக கூறியிருந்தேன்.

இவ்வாறான நிலையில் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே எமது உறுப்பினர்கள் என்னிடத்தில் அனுமதி பெற்று ஆதரவை வெளியிட்டதாக கூறியிருக்கின்றார்கள். அது முற்றிலும் தவறான விடயமாகும்.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு அத்தகைய ஒரு அனுமதியை வழங்கவில்லை. மேலும் உயர்பீடத்தில் தீர்மானம் இறுதியாகாத நிலையில் கட்சியின் தலைமையின் தீர்மானம் தொடர்பில் அவர்கள் புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக அந்த விடயத்தில் அவர்கள் அக்கறை காட்டவே இல்லை.

இந்த நிலையில் நான் அவர்களுடன் சந்திப்பினை (நேற்று முன்தினம்) நடத்தியிருந்தேன். அதன்போது அவர்கள் கட்சியையும், தலைமையையும் விட்டுப் பிரிந்து செல்லும் நோக்கமில்லை என்று உறுதிபடக் கூறியுள்ளார்கள்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் ஏனைய பிரதேசங்களை விடவும் மாறுபட்டதாக உள்ளதால் தான் அவ்விதமான முடிவினை எடுக்க வேண்டி ஏற்பட்டதாக திரும்பத்திரும்ப என்னிடத்தில் கூறினார்கள்.

அனைத்தும் நடந்து முடிந்து விட்ட நிலையில் என்னிடத்தில் விளக்கங்களை அளிப்பதால் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களும் தர்மசங்கடமான நிலைமைகளும் மாறப்போவதில்லை என்பதை அவர்களிடத்தில் கூறினேன்.

ஆகவே அடுத்த கட்டமாக எதிரணியுடன் நாம் எவ்வாறு தொடர்ந்தும் ஐக்கியமாக செயற்படுவது, நம்பிக்கையை கட்டியெழுப்புவது, தற்போது ஏற்பட்டுள்ள குழப்பமான நிலைமைகளுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது உள்ளிட்ட அடுத்தகட்ட விடயங்கள் தொடர்பில் உயர்பீடத்தில் இறுதி முடிவு எடுப்போம் என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். Posted in:

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter