போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலமாகாதிருக்கவே பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனும் பாதாள உலகத் தலைவருமான மாகந்துரே மதுஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
நாடாளுமன்றத்தில் இன்று -20- உரையாற்றிய ஜே.வி.பியின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளை காப்பாற்றவா மதுஷ் படுகொலை செய்யப்பட்டார் என்று கேள்வி எழுப்பினார்.
மாகந்துரே மதுஷ் கொலை செய்யப்பட்ட விவகாரம் இன்று மிகப்பெரிய விடயமல்ல. அதுபோன்ற கொலைகள் இந்த நாட்டில் இதற்கு முன்னரும் அரங்கேறியிருக்கின்றன. ஆனால் இந்தக் கொலை மூலம் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட மற்றும் அதனுடன் தொடர்பிருந்த அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலமாவது தடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டுபாயில் இருந்து தனியார் ஊடகமொன்றுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் மதுஷ் பேட்டியொன்றை வழங்கியிருந்தார். அதில் 80க்கும் அதிகமான அரசியல்வாதிகள் தன்னுடன் கடத்தல் விவகாரத்தில் தொடர்பில் இருப்பதை கூறியிருந்தார். அவர் கைது செய்யப்பட்டு தடுப்பில் இருந்த நிலையில் இன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒருவேளை அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தால் அவருடன் போதைப்பொருள் வர்த்தகம் செய்த அரசியல்வாதிகளின் பட்டியலும் அம்பலமாகியிருக்கும். ஆகவேதான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் உருவாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹேஷா வித்தானகே, கொலை செய்யப்பட்ட மாகந்துர மதுஷ் விவகாரத்தில் உரிய சட்டமுறைமைகள் பின்பற்றப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல கேள்விக்கான நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இந்த நாட்டிலுள்ள எந்தக் குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் கொண்டு சென்றதன் பின்னர் அவர் தவறுகள் அற்ற மனிதராக மாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது. ஆனால் அவ்வாறானர்களின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து கொலை செய்கின்ற அளவுக்கு இந்த அரசாங்கம் மாறியுள்ளதெனில் அது நாட்டின் எதிர்காலம் தொடர்பில் கேள்வியை எழுப்புகின்றது.
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய மாகந்துர மதுஷை கொலை செய்துள்ளார்கள். நாட்டில் உரிய சட்டமுறைமைகள் இருக்கின்ற நிலையில், இவ்வாறு மிருகங்களைப் போன்று கொலை செய்யும் அளவுக்கு இந்த நாடு வந்துள்ளமையானது ஒரே சட்டம் ஒரே நாடு என்பதையா மக்கள் எதிர்பார்த்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.