கைது செய்வதற்காக கடந்த 90 மணி நேரத்துக்கு அதிகமாக சிஐடியினர் ரிஷாத் பதியுதீனை தேடிவரும் நிலையில், அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும் அவரை மிக விரைவாக கைது செய்ய முடியும் என நம்புவதாகவும் அது தொடர்பில் தொடர்ச்சியான தேடுதல்கள் இடம்பெற்று வருவதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இவ்வாறான பின்னணியில், ரிஷாத் பதியுதீனை தேடிவரும் சிஐடியின் வணிக குற்ற விசாரணைப் பிரிவு – இலக்கம் 2 இன் அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரிடம் இன்று (16) சிறப்பு விசாரணைகளை நடத்தியதக சிஐடிதகவல்க்ள் தெரிவித்தன.
இதற்கு மேலதிகமாக நேற்று ரிஷாத் பதியுதீன் மனைவி கே.எம்.ஏ. ஆய்ஷாவிடமும் சி.ஐ.டி.யினர் 6 மணி நேர விசாரணைகளை முன்னெடுத்ததாக சிஐடி தகவல்கள் தெரிவித்தன.
நேற்று கொழும்பு – கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெளத்தாலோக்க மாவத்தையில் உள்ள ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு சென்ற சிஐடியினர், ரிஷாத்தின் மனைவி ஆயிஷாவிடம் சிறப்பு விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.
இந்தக் குழு, ரிஷாத்தின் மனைவியிடம் காலையில் 3 மணி நேரமும் மாலையில் 3 மணி நேரமும் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளது. இதன்போது வீட்டின் சிசிரிவி. கமெராக்களையும் ஆராய்ந்துள்ள சி.ஐ.டி. மனைவியின் தொலைபேசி தரவுகளையும் பரிசோதித்துள்ளது.
இதன்போது, தான் ரிஷாத் பதியுதீனை இறுதியாக கடந்த 12 ஆம் திகதியே பார்த்ததாகவும் அதன் பின்னர் தொலைபேசியில் கூட அவருடன் தொடர்பினை பேணவில்லை எனவும் ரிஷாத்தின் மனைவி ஆய்ஷா சிஐடியினரிடம் தெரிவித்ததாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.