பொலிஸ் உத்தியோகத்தர்களாக தம்மை அடையாளப்படுத்தி இலகுவழி பணப்பரிமாற்றம் ஊடாக (ஈஸி கேஷ்) வௌ;வேறு பிரதேச வர்த்தகர்களிடம் பணமோசடி செய்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் வீரக்கெட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரியாகத் தன்னை அடையாளப்படுத்தி பண மோசடி செய்துள்ளார்.
கண்டி – அங்கும்புர பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வீரக்கெட்டிய பகுதி வர்த்தகர் ஒருவருக்கு கடந்த 5 ஆம் திகதி தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது தான் வீரக்கெட்டிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எனவும் கடமைகளுக்காக சென்று கொண்டிருந்த போது அவரது வாகனத்தில் சிறு கோளாறு ஏற்பட்டதாகவும் அதனை பழுது பார்ப்பதற்காக பணம் தேவைப்படுவதாகவும் கூறி வர்த்தகரிடம் ஈஸி கேஷ் மூலம் பண மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் குறித்த வர்த்தகர் வீரக்கெட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கெலும் சங்கீத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சந்தேக நபர் இவ்வாறு பல்வேறு பகுதிகளிலும் உள்ள வர்த்தகர்களிடமும் தன்னையொரு பொலிஸ் உத்தியோகத்தராக அடையாளப்படுத்தி இலகுவழி பணப்பரிமாற்றல் சேவையூடாக பண மோசடி செய்து வந்துள்ளாரென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.