ரிஷாத் பதியுதீனைக் கைது செய்ய வேண்டாம் என்று இங்கு நாம் குரல் கொடுக்க முடியாது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனை அரசாங்கம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதால் இதற்குக் கண்டனம் தெரிவித்து இந்தச் சபை தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என மன்னார் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இன்சாப் கொண்டு வந்த பிரேரணையை ஏகமனதாக தீர்மானிக்க சபை மறுத்துள்ளது.

நேற்று மன்னார் பிரதேச சபையின் 31 வது அமர்வு தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹீர் தலைமையில் இடம்பெற்றது. அமர்வில் 21 உறுப்பினர்களில் 20 பேர் கலந்து கொண்டனர்.

இதன்போது, மன்னார் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஐ. இன்சாப் உரையாற்றுகையில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதியை நசுக்கும் நோக்குடன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாத் பதியுதீனைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, இவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் கைது நடவடிக்கையைக் கண்டித்து இந்தச் சபை தீர்மானம் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதன்போது, இந்த வேண்டுகோளை இந்தச் சபை ஏகமனதாக தீர்மானிக்கலாமா என தவிசாளரால் முன்வைக்கப்பட்டபோது அங்கு பல தரப்பட்ட கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஏ.ரி.லுஸ்ரின் கருத்து தெரிவிக்கையில், இந்த விடயத்தில் சிறுபான்மை என்ற விடயம் ஒருபுறமிருக்க அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது கைது செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அவர் குற்றவாளியா, சுற்றவாளியா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். ரிஷாத் பதியுதீனைக் கைது செய்ய வேண்டாம் என்று இங்கு நாம் குரல் கொடுக்க முடியாது.

மேலும், இந்த விடயத்தில் அரசியல் நாடகம்தான் நடக்கிறது. ஆகவே இது விடயமாக நாம் இங்கு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. மேலும், சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் எவருக்கும் அநீதிகள் இழைக்கப்படும் போதான கைதுகள் சட்ட ரீதியான கைதாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும் என தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கைதுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter