சீனத் தூதர்கள் மற்றும் பிரதான முக்கியஸ்தர்கள் எமது நாட்டுக்குள் வருகை தரும் போது, அவர்கள் ஏற்கனவே பி.ஸி.ஆர் சோதனைகளை செய்த பிறகே இங்கு வருகிறார்கள்.
மேலும், இம் முக்கியஸ்தர்கள் ஒரு குறுகிய காலத்திற்கு -அதாவது 24 மணி நேர கால அவகாசத்திற்குள் இலங்கையின் உயர் நிலைப் பதவியில் இருப்பவர்களை சந்தித்துக் கலந்துரையாடி விட்டுச் செல்லும் ஏற்பாட்டில் வந்து செல்கிறார்கள். அவர்களைப் பதினான்கு நாட்கள் தனிமைப் படுத்தல் முகாம்களுக்குள் உட்படுத்துவது சாத்தியமற்றது.
மேலும்- குறித்த கால அவகாசத்திற்குள் பி.ஸி.ஆர் சோதனைகளுக்கு மற்றும் கொவிட் 19 தொடர்பான சோதனைகளுக்கு உட்படுத்தும் தொழினுட்ப வசதிகளும் நம் நாட்டில் இல்லை
இவையே சீனாவின் முக்கிய பிரமுகர்கள் மேற்குறித்த சோதனைகளுக்கு உட்படாமைக்கான முக்கிய காரணங்களாகும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, நேற்றிரவு நடந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
குறித்த தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ஏன் சீன அதிகாரிகள் கொவிட் 19 சோதனைகளுக்கு உட்படுத்தப் படுவதில்லை என்று கேட்கப் பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற் கண்டவாறு தெரிவித்தார்.
சீனா இதுகால வரையும் இலங்கையுடன் பேணி வரும் நீண்ட கால உறவு முறையும் அதே நேரம் அவர்கள் வழங்கி வரும் பொருளாதார உதவிகள் பற்றியும் அமைச்சர் சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது.