சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பொறுப்பை இராணுவத்தினருக்கு ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தனியார் நிறுவனத்தினால் அச்சிடப்படுவதனால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பணம் தானியார் துறையை சென்றடைவதாகவும், அதனை தடுக்கும் நோக்கிலே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் திணைக்களம் மேலும் கூறியுள்ளதாவது,
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவது தொடர்பான சிக்கல்கள் தொடர்பில் இன்று புதன்கிழமை போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர , பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத்தினர் கலந்துரையாடியிருந்ததுடன். இதன்போது தனியார் நிறுவனத்தின் ஊடாகவே அச்சிடப்பட்டு வரும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்போது இலத்திரனியல் முறை பயன்படுத்தப்பட்டு அச்சிடப்பட்டு வருவதனால் , ஏற்படும் அதிகளவான செலவுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாரதி அனுமதிப் பத்திரத்தை அச்சிடுவதற்காக 2009 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரையில் மாத்திரம் 7467.65 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதுடன், இந்த ஒப்பந்தம் காலாவதியானதன் பிறகு, 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை மாத்திரம் 1856.65 மில்லியன் ரூபாய் அந்த நிறுவனத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரச திறைசேரிக்கு கிடைக்கவேண்டிய பணத்தொகையே இவ்வாறு தனியார் நிறுவனத்திற்கு கிடைக்கப் பெறுவதாகவும், இதனால் இதனை தடுக்கும் வகையில் எதிர்வரும் வருடத்திலிருந்து சாரதி அனுமதிபத்திரத்தை அச்சிடும் பொறுப்பை இராணுவத்தினருக்கு ஒப்படைக்கப் போவதாகவும் அரசசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.