இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள மக்களுக்கு கொழும்பு ஒரு கனவு நகரம். சிறு பராயங்களில் கொழும்பின் கதைகளில் லயித்துப் போய் உணவூட்டப்பட்டவர்கள் நம்மில் பலர். ஒரு முறையேனும் கொழும்புக்கு போய் விட வேண்டும் என்ற அவா உள்ளத்தில் நிறைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் தான் பாடசாலை சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்வார்கள்.
‘கொழும்புக்கு டுவர் போறோம். நேரத்துக்கு வரணும்!’ என்ற அந்த வார்த்தைகள் தரும் ஆர்வத்தில் அலாரம் இல்லாமலே அர்த்த ராத்திரியில் விழித்து தயாரான அனுபவங்கள் அலாதியானவை. அந்த மியூஸியத்துக்கும், ப்ளனெட்டேரியத்துக்கும், மிருகக்காட்சிசாலைக்கும் தான் சென்று வந்தாலும் அப்போதெல்லாம் நமக்கு அது ஒரு பெரிய அனுபவம். பெருமிதம் கொண்டிருக்கிறோம்.
பதின்ம வயதுகளை அடைந்து விட்டால் மீண்டும் கொழும்பு மோகம். இப்போது கடல்களும், அங்குள்ள காட்சிகளும் மனதை அள்ளும்.. இன்றைய இளசுகளுக்கு சிட்டி சென்டரும், வன் கோல் ஃபேஸும்.. கொழும்பு மோகம் வளர்ந்து கொண்டு தான் இருந்திருக்கிறது.
கொரோனா வரும் வரை கடந்த நான்கைந்து வருடங்களாக அதே கொழும்பு தான் உறைவிடம் என்று வாழ்ந்திருக்கிறேன். கொழும்பின் கனவு முகத்துக்கு அப்பால் இருக்கும் பல கோர முகங்களையும் பார்த்திருக்கிறேன். கொழும்பு எனும் நரகம் – ஆம், நரகம் தான் – தன்னகத்தே கொண்டிருக்கும் விஷத்தை வர்ணம் பூசி மறைத்து வைத்திருக்கிறது என்பதை கண்கூடாகவே கண்டிருக்கிறேன். மாடமாளிகைகளையும், கெசினோகக்ளையும், கண்கொள்ளா கட்டடங்களையும் தாண்டிய அந்த உலகம் கொடூரமானது.
சாமர்த்தியமாக கதைக்கத் தெரிவதும், இருப்பதை வைத்து பிழைத்துக் கொள்வதும் கொழும்பைச் சேர்ந்த இளைஞர்களின் சாதுரியம் என்பது பரவலான நம்பிக்கை. ஆனால், அதனை ஒரு சாதுரியம் என்று மட்டும் கடந்து போக முடியாது. காலா காலமாக பட்ட துன்பங்களில் அவர்கள் பெற்ற பரிணாம வளர்ச்சி அது. ‘பேசத் தெரிஞ்சாத் தான் சோறு’ என்ற நிலைமை அவர்களது. ‘துன்பப்பட்டு, துயரப்பட்டு, கஷ்டப்பட்டு, கவலைப்பட்டு.. பின்ன அது பழகிரும்..’ என்ற சினிமா வரிகளின் நகைச்சுவையை நீக்கினால் வருவது தான் அந்த இளைஞர்களின் வாழ்க்கை.
முற்போக்குத் தன்மை இளைஞர்களில் நிறைந்தேயிருக்க, அதே தன்மையையை சாதகமாகப் பயன்படுத்தி பல தீய பழக்கங்களை அவர்களில் புகுத்தும் மாஃபியாவாக இருக்கட்டும், கல்வியை விட்டு விட்டு கடைகளிலும், வேறு தொழில்களிலும் தங்கி விட ஊக்குவிக்கும் சமூக இயந்திரமாக இருக்கட்டும்.. இளமையும், அது சார்ந்த இனிமையும், அறிவின் மகிமையும், கல்வியின் தேவையும் உணராத ஒரு இளம் சமுதாயத்தை உருவாக்கி வருகிறது.
ஏனைய இடங்களுக்கு மாற்றமான முறையில், கல்வி என்பது கொழும்பு மாநகரில் தனவந்தர்களுக்கும், சில மத்திய வர்க்க குடும்பங்களுக்கும் உரித்தானதாக பார்க்கப்படுகிறது. ஏழை இன்னும் ஏழ்மையிலேயே கிடக்க, பணக்காரன் லட்சாதிபதியாகிறான்.
பாடசாலை செல்ல வேண்டிய வயதில் புனர்வாழ்வு மையம் செல்கிறான். உயர்தரம் கற்கும் வயதில் வெலிக்கடையை எட்டிப் பார்க்கிறான். தொழில் செய்ய வேண்டிய வயதில் பாதைகளில் சஞ்சரிக்கிறான், வேலையற்ற இளைஞனாய். இது ஒரு வாழ்க்கை முறையாகிப் போகிறது. அதுவே பழகி விடுகிறது.
கல்வி – அது ஒன்று தான் கொழும்புக்கான (ஏனைய இடங்களுக்கானதும் தான்) தீர்வு. இங்கு பாடசாலையில் கற்கும் கல்வியை மாத்திரம் கூறவில்லை. தொழில் சார் கற்கை நெறிகள் முதல், திறன் விருத்தி கற்கை நெறிகள் வரை வழிகாட்டும் அனைத்தும் கல்வி தான்.
பேனா – அது தான் ஆயுதம். (கீபோர்ட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.) புது யுகம் படைக்க வேண்டுமென்றால் அது ஆரம்பிக்க வேண்டியது கொழும்பில் தான். ஆசிரியர்கள் உண்மையான தியாகத்துடன் உழைப்பார்களானால்.. சமூக தேவை நிறுவனங்கள் அதனை ஒரு சவாலாக எடுத்து முயற்சிக்குமேயானால்.. அரசியல்வாதிகள் முழு மூச்சாக முயல்வார்களானால்.. இது சாத்தியமே..
எதிர்பார்க்கிறேன். என்னால் முடியுமான அனைத்தையும் செய்கிறேன். உங்களால் முடிந்ததையும் செய்யுங்கள். இன, மத, மொழி பேதம் தாண்டி கல்வி நாட்டைப் பதப்படுத்த வேண்டும். அது கனவெனும் தளம் தாண்டி நனவாக வேண்டும்.