மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,034 ஆக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 207 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவற்றுள் 202 பேர் மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையோர் ஆவர். இவர்களுள் 199 பேர் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள்.
இதற்கிடையில் வெலிசரவில் அமைந்துள்ள குறித்த ஆடைத் தொழிற்சாலையின் மற்றோர் கிளையிலிருந்து ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.
அதேநேரம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் துப்புரவுப் பணியாளர் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டிருந்தார்.
இது தவிர கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பிய மூவரும், இந்தியாவிலிருந்து வருகை தந்த மூவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டது.
இலங்கையில் தற்போது மொத்தமாக பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 4,459 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.