‘திகன கலவரத்தின் பின்னர் ஸஹ்ரான் எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறுவார் என இராணுவப் புலனாய்வுப் பிரிவு எச்சரித்தது. 2018 மார்ச் திகன கலவரத்தின் பின்னர் இதனை சட்டத்தை அமுல் செய்யும் தரப்புக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் அதனை அலட்சியம் செய்தனர்.’
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அப்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பேரவை தொடர்பில் அதிக அக்கறை கொண்டிருக்கவில்லையென முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரால் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க துபாயிலிருந்து வீடியோ ஊடாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்தார். இதன்போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.
அத்துடன், ஸஹ்ரான் மற்றும் அவரது தேசிய தெளஹீத் ஜமா அத் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவு 2018 ஆம் ஆண்டு, தேசிய பாதுகாப்பு பேர்வையில் எச்சரித்தபோதும் அதனை அந்த பேரவையில் இருந்தோர் அந்த விடயத்தில் அக்கறை கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
2018 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு பேரவையில், இராணுவ புலனாய்வுப் பணிப்பாளர் ஸஹ்ரான் மற்றும் அவரது தேசிய தெளஹீத் ஜமா அத் தொடர்பில் எச்சரிக்கைகளை முன்வைத்தபோதும், அந்த பேரவையில் இருந்தோர் அப்போது அதனை தீவிரமாக கொள்ளவில்லை.
திகன கலவரத்தின் பின்னர், ஸஹ்ரான் எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறுவார் என இராணுவப் புலனாய்வுப் பிரிவு எச்சரித்தது. 2018 மார்ச் திகன கலவரத்தின் பின்னர் இதனை சட்டத்தை அமுல் செய்யும் தரப்புக்கு தெரியப் படுத்தினாலும் அவர்கள் அதனை அலட்சியம் செய்தனர்.
ஸஹ்ரானின், ஐ.எஸ். ஐ.எஸ். உடன் ஒத்துப்போகும் சித்தாந்தம் தொடர்பில் நாம் 2018 ஆம் ஆண்டு முதல் கண்காணித்தோம். அதன்பால் முஸ்லிம் இளைஞர்கள் ஈர்க்கப்படலாம் என எச்சரித்தோம். ஸஹ்ரானின் இத்தகைய ஐ.எஸ்.ஐ.எஸ். சித்தாந்த நடைமுறைகளை அப்போதைய ஜனாதிபதியும் அறிந்திருந்தார்.
நாட்டில் சட்டத்தை அமுல்படுத்த முடியுமான நிறுவனங்களை வெவ்வேறு தரப்பினர் நிர்வகித்து வந்தனர். விசாரணை நிறுவனங்களுக்கிடையில் ஒரு பெரிய போட்டி இருந்தது. அதனால் விசாரணைகளை மேற்கொள்ளும்போது அவை இரானுவ புலனயவுப் பிரிவுடன் ஒத்துழைக்கவில்லை. சட்டத்தை அமுல்படுத்த அதிகாரம் உள்ள நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் ஸஹ்ரானை கைது செய்திருக்கலாம் என்றும் அவர் சாட்சியமளித்தார்.